Published:Updated:

`லஞ்சம் கொடுக்கற எண்ணத்தையே மறந்துடுவாங்க!' - ஊழல் எதிர்ப்பு வாசகம் மூலம் அசத்தும் தென்காசி வி.ஏ.ஓ

`லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற வாசகத்தை, அலுவலகத்துல என் இருக்கைக்குப் பின்னாடி ஒட்டி வெச்சேன்.

முகமது அப்துல் அலி
முகமது அப்துல் அலி

தென்காசி வட்டம், புலியூரில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பணியாற்றுபவர் முகமது அப்துல் அலி. நேர்மையான அரசு அதிகாரியான இவர், தன் பணியிடத்தில் `லஞ்சம் வாங்க மாட்டேன்' என்று எழுதி வைத்திருக்கிறார். இதனால், லஞ்சம் கொடுக்கும் கண்ணோட்டத்தில் அப்துலை யாரும் அணுகுவதில்லையாம். பலரின் பாராட்டுகளைப் பெற்ற இந்த முயற்சி குறித்து, அப்துலிடம் பேசினோம்.

முகமது அப்துல் அலி
முகமது அப்துல் அலி

``என் பூர்வீகம், தென்காசி. அப்பா சுயதொழில் செய்துகொண்டிருந்தார். எங்கள் குடும்பத்தில் டாக்டரான அண்ணனும் டிப்ளோமா இன்ஜினீயரான நானும்தான் கல்லூரி வரை படிச்சோம். டிப்ளமோ முடித்துவிட்டு, லக்னோவில் ஒரு வருட கோர்ஸ் படிச்சேன். எனக்குச் சின்ன வயசில் இருந்தே அரசு வேலைக்குப் போகணும்னு ஆசை. அதனால, மும்பையில வேலை செய்துகிட்டே அரசுப் பணிக்கும் படிச்சுட்டிருந்தேன்.

ஒருகட்டத்துல தென்காசிக்கு வந்து, முழுநேரமா வி.ஏ.ஓ தேர்வுக்குக் கவனம் செலுத்தினேன். 2011-ல் தேர்வெழுதி, 2012-ல் தேர்வானேன். மதுரை வண்டியூர்ல என் அரசுப் பணியைத் தொடங்கினேன். இப்போ தென்காசி வட்டம் புலியூர் கிராமத்துல வேலை செய்கிறேன். இதுக்கிடையே சில ஊர்கள்ல வேலை செய்தேன். இடைப்பட்ட காலத்துல, தென்காசி வட்டம் சில்லறை புரவு கிராமத்துல வேலை செய்தேன். அப்போதான், `லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற வாசகத்தை, அலுவலகத்துல என் இருக்கைக்குப் பின் ஒட்டி வெச்சேன்.

VAO Officer முகமது அப்துல் அலி
VAO Officer முகமது அப்துல் அலி

மக்களுக்கு என்னால் இயன்ற பணியை, நேர்மையா செய்யணும்னுதான் அரசுப் பணிக்கு வந்தேன். நான் யாரையும் குறை சொல்லலை. ஆனா, என்னோட பணிச்சூழல்ல லஞ்சம் கொடுக்கல், வாங்கல் நடப்பதாகப் பல்வேறு வகையிலும் அறிகிறோம். என் பணிச்சூழல்ல இதுபோன்ற தவறான விஷயங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சேன். இதை, என்னைச் சந்திக்க வரும் ஒவ்வொருத்தர்கிட்டயும் சொல்லிட்டு இருக்க முடியாது.

அதனாலதான், என் இருக்கைக்குப் பின்னாடியே அந்த வாசகத்தை எழுதி ஒட்டினேன். என்னைப் பார்க்க வர்ற எல்லோரும் தொடக்கத்துலயே இந்த வாசகத்தைப் பார்த்துடுவாங்க. தொடர்ந்து லஞ்சம் கொடுக்கிற எண்ணத்துடன் என்கிட்ட பேசமாட்டாங்க. நான் நினைச்சதுபோலவே, யாரும் என்கிட்ட லஞ்சம் கொடுக்கிறது பத்திப் பேசுறதில்லை. சில்லறைபுரவு கிராமத்துல இருந்து இப்போ வேலை செய்ற புலியூர் கிராமத்துக்குப் பணிமாறுதலாகி வந்த பிறகும், என் அலுவலகத்துல `லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற வாசகம் எழுதிய பலகையை வெச்சுட்டேன். 

என்னைப் பார்க்க வர்ற எல்லோரும் தொடக்கத்துலயே இந்த வாசகத்தைப் பார்த்துடுவாங்க. தொடர்ந்து லஞ்சம் கொடுக்கிற எண்ணத்துடன் என்கிட்ட பேசமாட்டாங்க.
முகமது அப்துல் அலி

எவ்வித நெருக்கடிகளும் இல்லாம, நான் என் விருப்பம்போல அரசுப் பணியைச் செய்துட்டிருக்கேன். என் அண்ணனும் தேர்வெழுதி தமிழக வருவாய்த்துறையில வருவாய் உதவியாளராக வேலை செய்றார். அண்ணனும் நானும் நேர்மையா பணி செய்றதால, எங்க குடும்பத்தினருக்கு அளவில்லா மகிழ்ச்சி" என்று புன்னகையுடன் கூறுகிறார், முகமது அப்துல் அலி.