Published:Updated:

`தளபதி டு தலைவன்' - வெளிவந்த விஜய்யின் விருப்பம்... அரசியல் நகர்வுகளும் சில ஃப்ளாஷ்பேக் காட்சிகளும்

விஜய்

`ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?' என்ற டாக் காலாவதியாகிவிட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்ப `விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்?' என்ற டாக் இப்போது தீவிரமாக அட்மிட் செய்யப்பட்டிருக்கிறது.

`தளபதி டு தலைவன்' - வெளிவந்த விஜய்யின் விருப்பம்... அரசியல் நகர்வுகளும் சில ஃப்ளாஷ்பேக் காட்சிகளும்

`ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?' என்ற டாக் காலாவதியாகிவிட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்ப `விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்?' என்ற டாக் இப்போது தீவிரமாக அட்மிட் செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
விஜய்

`ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?' என்ற டாக் காலாவதியாகிவிட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்ப `விஜய் எப்போது அரசியலுக்கு வருவார்?' என்ற டாக் இப்போது தீவிரமாக அட்மிட் செய்யப்பட்டிருக்கிறது. அதற்குத் தீனி போடும்விதமாக அமைந்திருக்கிறது நடிகர் விஜய்யின் சமீபத்திய பேட்டி ஒன்று.

'பீஸ்ட்' டீம் | Beast
'பீஸ்ட்' டீம் | Beast

'பீஸ்ட்' திரைப்படம் வெளியாவதையொட்டி, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுக்க சம்மதம் தெரித்திருந்தார் நடிகர் விஜய். ஏற்கெனவே. விஜய் படத்துக்கு இருக்கும் வழக்கமான இசை வெளியீட்டுவிழா நடைபெறாத நிலையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு விஜய் கொடுக்கும் இந்த நேர்காணல் நிச்சயம் ரசிகர்களை உற்சாகமடையவைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததுபோலவே, `பீஸ்ட்’ பட இயக்குநர் நெல்சன் கேள்விகளை அடுக்க, விஜய் தனக்கே உரித்தான பாணியில் கூலாக பதிலளிக்கும் `விஜய்யுடன் நேருக்கு நேர்' என்ற நிகழ்ச்சி வெளியாகி ரசிகர்களுக்கு விருந்துவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேர்காணலைத் தொகுத்த இயக்குநர் நெல்சன், `இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, என்னைப் போன்ற பலபேருடைய கேள்வி' என்று கூறி, `தளபதி விஜய், தலைவன் விஜய்யாக மாற விருப்பம் இருக்கிறதா?' என விஜய்யிடம் கேள்வி எழுப்பினார்.

பீஸ்ட் - விஜய், நெல்சன்
பீஸ்ட் - விஜய், நெல்சன்

அதற்கு பதிலளித்த விஜய், `இந்த 30 வருஷத்துல, சாதாரணமா இருந்த ஒரு நடிகனை வளர்த்தெடுத்து, அவங்க ஆசையா கூப்பிடுற `தளபதி'யா மாத்துனது இந்த ரசிகர்கள்தான்! அந்தத் தளபதியை, தலைவனாக்கிப் பார்க்கணுமா, வேணாமாங்குறதை அவங்களும் சூழ்நிலையும்தான் முடிவு பண்ணணும்!" என பாசிட்டிவாக பதிலளித்தார். மேலும், `மாறணும்னு நிலைமை வந்தா மாறித்தானே ஆகணும்' என பஞ்ச் டயலாக்கையும் ஆழமாக வைத்துவிட்டுச் சென்றார்.

`பீஸ்ட்’- விஜய்
`பீஸ்ட்’- விஜய்

இது விஜய்யின் `பீஸ்ட்’ படத்துக்கான புரொமோஷனாக அல்லாமல், அரசியல் பிரவேசத்துக்கான அப்டேட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து `விஜய் அரசியலுக்கு வரப்போவது உறுதி; தனது அரசியல் ஆர்வத்தைப் பொதுவெளியில், வெளிப்படையாகவே பேசிவிட்டார்; நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகக் கட்சி ஆரம்பித்துவிடுவார்; இனி 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தளபதிதான்' என சமூக வலைதளங்கள் முழுக்க விஜய்யின் அரசியல் வருகைக்கான விவாதங்கள் பற்றிப் பரவிக்கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் மூவ்-களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர், கடந்தகால அரசியல் / பொது நகர்வுகளைச் சற்றுப் பார்ப்போம்.

இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்:

இலங்கை இறுதி யுத்தத்தின்போது ஏராளமான அப்பாவித் தமிழ் மக்கள், சிங்கள ராணுவத்தினரால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில், `இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும்' தனது நற்பணி (ரசிகர்) மன்றம் சார்பாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் நடிகர் விஜய். திட்டமிட்டபடி, 2008, நவம்பர் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 37 இடங்களில் விஜய் நற்பணி மன்றம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டம்
உண்ணாவிரத போராட்டம்

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட விஜய், ``இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வர வேண்டும் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நாளுக்கு நாள் ஊடகங்களில் வரும் செய்திகள், புகைப்படங்களைப் பார்க்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இதைத் தடுக்க நாம் அங்கே போய் சண்டை போட முடியாது; இது போன்ற உண்ணாவிரதப் போராட்டம் மூலம் நம் உணர்வுகளைக் காட்ட முடியும்" என்றார். மேலும், ``இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எங்கள் உணர்வை தெரிவிக்கும் போராட்டம்" என்று கூறினார்.

தமிழக மீனவர்களுக்காக கண்டன ஆர்பாட்டம்:
தமிழக மீனவர்களுக்காக கண்டன ஆர்பாட்டம்:

தமிழக மீனவர்களுக்காகக் கண்டன ஆர்பாட்டம்:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, நாகப்பட்டினத்தில் 2011, பிப்ரவரி 22-ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் மத்தியில் உரையாற்றிய நடிகர் விஜய், ``கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,000-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல்போயுள்ளனர்.

ஆனால், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்க்கின்றன என்பது எனக்குப் புரியவில்லை. ஏதோ, கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், உணர்ச்சிவசமாகப் பேசினோம், சென்றோம் என்றில்லாமல் இது போன்ற செயல்களில் நாம் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும். நீங்கள் அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்" என ஆவேசமாக உரையாற்றினார். மேலும், ``நான் ஒரு அரசியல்வாதியாக இந்த மேடைக்கு வரவில்லை; ஒரு தமிழனாக, நம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த கண்டன ஆர்பாட்டத்துக்கு வந்திருக்கிறேன்" என்றார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இப்படி, நடிகர் விஜய் `அரசியலுக்காக அல்ல; அரசியல்வாதியாக அல்ல...' எனக் கூறி ஒருங்கிணைத்த சில கூட்டங்கள் அனைத்துமே அரசியலைச் சுற்றியே இருந்தன. குறிப்பாக, அந்தக் காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக இருந்தன. அதேசமயம், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத்தேர்தலில், விஜய்யின் மக்கள் இயக்கம், ஜெயலலிதாவின் அ.தி.மு.க-வுக்கு ஆதரவளித்தது.

ஜெயலலிதா -நடிகர் விஜய்
ஜெயலலிதா -நடிகர் விஜய்

விஜய் முழுநேர நடிகராக இருப்பினும், அரசியல் தொடர்புகளும், கருத்து மோதல்களும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருந்தன. காங்கிரஸ் ராகுல் காந்தியுடன் சந்திப்பு, மோடியுடன் சந்திப்பு என்றும், `தலைவா' திரைப்பட டைட்டிலில் `டைம் டு லீட்' என இடம்பெற்ற வாசகத்தால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் மோதல், `கத்தி' திரைப்படத்தில் `2-ஜி அலைக்கற்றை ஊழல்' பற்றிய வசனம் பேசியதால் தி.மு.க-வுடன் மோதல், `மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்களால் பா.ஜ.க-வுடன் மோதல் எனச் சந்திப்பும், மோதலுமாக விஜய்யின் அரசியல் சிறிது சிறிதாக நகர்ந்துகொண்டிருந்தது.

`சர்க்கார்’ இசை வெளியீட்டுவிழா:

வழக்கமாக, விஜய் தனது படத்தின் இசை வெளியீட்டுவிழாவின்போது, குட்டி ஸ்டோரி சொல்வதும், தத்துவங்கள் பேசுவதுமாகத்தான் இருக்கும்! ஆனால், `சர்க்கார்’ படத்தின் இசை வெளியீட்டுவிழா என்பது முழுக்க அரசியல் பேசும் களமாக அமைந்தது. ``உண்மையாகவே முதலமைச்சரானா, முதலமைச்சரா நான் நடிக்க மாட்டேன்" என்றார். ``ஒருவேளை முதலமைச்சரானால், முதல் விஷயமாக ஊழல், லஞ்சத்தை ஒழிப்பேன்" என்றார்.

விஜய்
விஜய்

``ஒரு தலைவன் நல்லா இருந்தா, ஆட்டோமேட்டிக்கா கட்சி நல்லா இருக்கும்" என்றார். ``மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி" என்றார். ``இயற்கையின் போக்கில் ஒரு நல்ல தலைவன் உருவாவான். அவனுக்குக் கீழே நடக்கும் பாருங்க, ஒரு சர்க்கார்" என அதிரடியாக அடுத்தடுத்து அரசியல் பஞ்ச் டயலாக் அடித்தார். இவை அத்தனையும் விஜய் தீவிர அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாக அப்போது பார்க்கப்பட்டன.

விஜய்
விஜய்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:

இந்த நிலையில், கடந்த 2021, அக்டோபர் மாதம் ஒன்பது மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 115 பேர் வெற்றிபெற்றனர். பல ஆண்டுகளாகக் கட்சி நடத்தியவர்கள், ஓடி ஓடி தேர்தல் பிரசாரம் செய்தவர்கள், வாக்குக்குப் பணம் அளித்தவர்கள் என முழுக் கட்சிக் கட்டமைப்புடன், அரசியல் செல்வாக்குடன் போட்டியிட்டவர்களுக்கு மத்தியில், விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய்யின் வெளிப்படையான ஆதரவுக்குரல்கூட இல்லாமல் வெற்றிபெற்றதை பிற அரசியல் கட்சியினர் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

இந்த எதிர்பாராத வெற்றியால் உற்சாகமடைந்த விஜய், வெற்றிபெற்றவர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடந்து, இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ரசிகர்கள் தனது படத்தைப் பயன்படுத்தவும், விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்தவும் முழு அனுமதி வழங்கினார் நடிகர் விஜய்.

விஜய்
விஜய்

அதைத் தொடர்ந்து, வெற்றிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு முறை தனது நன்றியையும் வாழ்த்துகளையும் இந்த `பீஸ்ட்’ பட நேர்காணலின்போது ரசிகர்களுக்குத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னதாக, தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் `தளபதி 66' படத்தின் ஷூட்டிங் தொடர்பாக ஹைதராபாத் சென்ற விஜய், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரைச் சந்தித்து, தான் அரசியலுக்கு வருவது பற்றி உரையாடியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

விஜய்
விஜய்

இப்படியாக, நடிகர் விஜய்யின் அரசியல் மூவ் கடந்த காலம் தொட்டு நிகழ்காலம் வரை கடந்துவந்திருக்கிறது. விஜய்யின் எதிர்கால அரசியல் மூவ் பற்றிச் சொல்ல வேண்டுமானால், விஜய் தன் பேட்டியில் கூறியதுபோல, `ரசிகர்களின் விருப்பமும், காலமும்'தான் அதைத் தீர்மானிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism