Published:Updated:

`இது என் அறிமுக உரை; எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது' - கன்னிப்பேச்சில் அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன்!

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று தன் முதல் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் பிறந்தவர், தமிழச்சி தங்கபாண்டியன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான தங்கபாண்டியனின் மகள். எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, கவிஞர் எனப் பன்முகத்தன்மைகொண்ட இவர், சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியிலிருந்து எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று, மக்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். ``ஒரு அறிமுக மக்களவை உறுப்பினராக எனது முதல் உரையை ஆற்றுகிறேன்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

``யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்த கணியன் பூங்குன்றனாரின் மண்ணிலிருந்து, ``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' என வர்ணாசிரம கோட்பாடுகளை மறுத்து, சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றிய திருவள்ளுவர், திராவிட சித்தாந்தத்தில், தமிழ் கலாசாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் தமிழ் மண்ணிலிருந்து வந்து பேசுகிறேன்.

இந்த நேரத்தில் எனது தந்தை தங்கபாண்டியனுக்கும், எனது கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டு மக்கள், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் மதிப்பளித்து, தங்கள் ஆதரவை ஸ்டாலினுக்குக் கொடுத்துள்ளனர்" என நீண்ட முன்னுரை ஒன்றைக் கொடுக்க, அவையில் இருந்த எம்.பி-க்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினர். உடனே, ``இது என்னுடைய அறிமுகப் பேச்சு. அதனால், என்னைப் பற்றிய விரிவான அறிமுகம் கொடுக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. என்னைப் பேச அனுமதியுங்கள்" என தமிழச்சி பேச, சபாநாயராக இருந்த சுரேஷ் கொடிக்குன்னில், ``நீங்கள் பேசுங்கள்'' என அனுமதி கொடுத்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்
Lok sabha tv

தொடர்ந்து பேசியவர், ``வரலாற்றில் முதல்முறையாக 78 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த அவையில், நானும் ஒரு பெண்ணாக இருப்பதற்கு மகிழ்ச்சி கொள்கிறேன். முதலில், முழுநேர நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு தமிழச்சியாக, தமிழகப் பெண், தமிழக மண்ணின் மகளான நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய நாடு, முற்றிலும் தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டுதான் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தற்போது வேலையில்லா திண்டாட்டம் காரணமாக, தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு கார்ப்பரேட்களுக்கும் தனிப்பெரும் நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை அளித்திருக்கிறது. மோடி அரசு, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு ஆகியவற்றைத் திணித்து கஷ்டத்தை கொடுத்துவருகிறது. பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்குத் தங்கம் வாங்குவதுகூட கனவாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது" என்றும் தமிழகம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்க, மீண்டும் உறுப்பினர்களும் சபாநாயகரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழச்சி நீண்ட நேரம் பேசுவதாக அவர்கள் புகார் சொல்ல, ``இது எனது முதல் பேச்சு... இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அனுமதி கொடுங்கள்" என விடாப்பிடியாகக் கூறியதுடன், நற்றிணை பாடல் ஒன்றைப் பாடி, முழுமையாகப் பேசிய பிறகே அமர்ந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.

அடுத்த கட்டுரைக்கு