Published:Updated:

பா.ம.க விஷயத்தில், யாராலும் எதையுமே கணிக்க முடியாது! - சொல்கிறார் தி.வேல்முருகன்

தி.வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
தி.வேல்முருகன்

மராட்டியம், கேரளா, கர்நாடகா என மாநிலம்தோறும் பல்வேறு இட ஒதுக்கீடு நடைமுறைகள் இருந்துவருகின்றன

பா.ம.க விஷயத்தில், யாராலும் எதையுமே கணிக்க முடியாது! - சொல்கிறார் தி.வேல்முருகன்

மராட்டியம், கேரளா, கர்நாடகா என மாநிலம்தோறும் பல்வேறு இட ஒதுக்கீடு நடைமுறைகள் இருந்துவருகின்றன

Published:Updated:
தி.வேல்முருகன்
பிரீமியம் ஸ்டோரி
தி.வேல்முருகன்

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ததை அடுத்து, ‘சமூகநீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது’ என்றும், ‘சமூகநீதி சீர்குலைக்கப்பட்டிருக்கிறது’ என்றும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள்! இந்த நிலையில், ‘உள் இட ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டிருப்பது சமூகநீதிக்கு எதிரானது’ என்று கொந்தளித்துவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனை நேரில் சந்தித்துப் பேசினோம்...

“வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டது சமூகநீதிக்கு எதிரானது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’

“தமிழ்நாட்டில் இரண்டு கோடி எண்ணிக்கையில் உள்ள விவசாயக் குடிகளான வன்னியர்கள் இப்போதுதான் முதல் தலைமுறையாகக் கல்வி கற்று, தலையெடுத்துவருகிறார்கள். ஆனால், இவர்களுக்கான இடங்களை இங்குள்ள சகோதர சமூகத்தினரும், வெளி மாநிலத்தினருமே எடுத்துக்கொள்வது தொடர்கதையாகிவருகிறது. எனவேதான், வன்னியர்கள் பயன்பெறும் வகையில் ‘எங்களுக்கென்று தனித்த இட ஒதுக்கீடு கொடுங்கள்’ என்று கேட்டு, பல்லாண்டு காலமாகப் போராடிவருகிறோம்.

இந்த நிலையில், கிடைத்த 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடும் ரத்தாகியிருப்பதால், இதுவரை இந்த உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு பெற்றவர்களும் கலக்கமடைந்துள்ளனர். இது சமூகநீதிக்கு எதிரானதுதானே!’’

“ஆனால், ‘உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில், எதன் அடிப்படையில் உள் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க முடியும்?’ என்று நீதிமன்றம் கேட்கிறதே?’’

“அப்படியென்றால், 69 சதவிகித இட ஒதுக்கீடு எந்தத் தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது... அருந்ததியருக்கு மூன்றரை சதவிகிதம், இஸ்லாமியருக்கு மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீடு எந்தத் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டன... கடைசியாக மத்திய அரசு வழங்கிய ‘உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு’ எந்தத் தரவுகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது?

மராட்டியம், கேரளா, கர்நாடகா என மாநிலம்தோறும் பல்வேறு இட ஒதுக்கீடு நடைமுறைகள் இருந்துவருகின்றன. இந்த இட ஒதுக்கீடுகளுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஆனால், அந்த வழக்குகளெல்லாம் வருடக்கணக்கில் பரிசீலனையில் இருந்துவரும்போது, 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்திருப்பது ஏன்? ‘இன்னும் கூடுதலான தரவுகள், புள்ளிவிவரங்களோடு மனுத்தாக்கல் செய்யுங்கள்’ என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, உள் இட ஒதுக்கீட்டைத் தொடர வழி செய்திருக்க வேண்டியதுதானே.’’

பா.ம.க விஷயத்தில், யாராலும் எதையுமே கணிக்க முடியாது! - சொல்கிறார் தி.வேல்முருகன்

“அதேசமயம் கருணாஸ், ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 116 சாதிகள் இருக்கும்போது, வன்னியருக்கு மட்டுமே 10.5 இட ஒதுக்கீடு என்பது எந்தவகையில் நியாயம்’ என்று கேட்கிறாரே?’’

“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது துணை ராணுவம் வந்து சுட்டதில் 21 பேர் பலியானார்கள். ஒன்றரை லட்சம் வழக்குகள் எங்கள்மீது பாய்ந்தன. எங்களைப் போன்று நீங்களும் உயிர்த் தியாகம் செய்யுங்கள், இழப்புகளைச் சந்தியுங்கள் என்று சொல்லவில்லை. நீங்களும் மக்களைத் திரட்டி, அரசோடு போராடி உங்களுக்கான உரிமையை வாங்குங்கள் என்றுதான் சொல்கிறோம்.

21 குடும்பங்கள் தாலியறுத்து, ஒன்றரை லட்சம் வழக்குகளைச் சந்தித்து, பெரும் இன்னல்களுக்குப் பிறகு நாங்கள் பெற்ற உரிமையை, நீங்கள் நோகாமல் நொங்கு சாப்பிட நினைத்து உள்ளே வருவீர்கள்... அதை நாங்களும் அனுமதிக்க வேண்டுமா?

முதலில், சமூகநீதி என்றால் என்ன, இட ஒதுக்கீட்டின் தாத்பர்யம்தான் என்ன, இதற்காக எத்தனை தலைவர்கள் போராடி மடிந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நண்பர் கருணாஸுக்குத் தெரியாது. ‘வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டால், தன் சமூக மக்களின் உரிமை பறிபோகிறது’ என்ற தவறான கோணத்திலேயே அவர் கருத்துகளைச் சொல்லிவருகிறார். வன்னியர்கள் துக்கம் அனுபவித்துவரும் வேளையில், வெடி வெடித்துக் கொண்டாடுவதும், ‘இது புலிப்படைக்குக் கிடைத்த வெற்றி’ என்று சொல்லி மார்தட்டிக்கொள்வதும் தமிழர் மரபல்ல. எனவே, சமூகநீதிக்கான பாதை உருவான வரலாற்றை சரிவரப் படித்துத் தெரிந்துகொண்டு கருணாஸ் கருத்து சொல்ல வேண்டும்!’’

“நீட் தேர்வு ரத்து விவகாரத்தில், ஏ.கே.ராஜன் குழு அமைத்து அக்கறை செலுத்திய தி.மு.க அரசு, 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் அந்த அக்கறையைக் காட்டவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?’’

“இப்போதுதான் தீர்ப்பு வெளியாகியுள்ளது. விரைவில் முதல்வரைச் சந்தித்து, ‘நீட் தேர்வு விவகாரம்போல், இந்த விவகாரத்திலும் சரியான புள்ளிவிவரங்களோடு தமிழக அரசு அணுக வேண்டும்’ என நேரில் வலியுறுத்தவிருக்கிறேன். மேலும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத்திலும், ‘நீதியரசர் குலசேகரன் தலைமையிலான ஆணையத்தின் வழியே சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிகளை நடத்துவதற்கான மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று, இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றும் அழுத்தம் கொடுக்கவிருக்கிறேன்.’’

“உள் இட ஒதுக்கீடு வழக்கை, ‘தி.மு.க அரசு சிறப்பாகக் கையாண்டது’ என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறதே பா.ம.க?’’

“பொதுவாக அரசியலில், ‘இதுதான் நடக்கும்; இது நடக்கவே நடக்காது’ என்றெல்லாம் எதையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. அதிலும் குறிப்பாக பா.ம.க விஷயத்தில் யாராலும் எதையுமே கணிக்க முடியாது!’’

“தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க-வும் வந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்களே?’’

“தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வர நேரிட்டால், அங்கே தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கான மரியாதை என்ன, அங்கீகாரம் என்ன என்ற கேள்விகளெல்லாம் எழும். எனவே, அப்போது எங்கள் கட்சி நிர்வாகிகளோடு கூடிப் பேசித்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்போம்.’’