Published:Updated:

`பட்டா இருக்கு; எந்த அடிப்படை வசதியும் இல்லை'- மழைக்காலம் குறித்துக் கலங்கும் தண்டரைப் பழங்குடியினர்

தண்டரைப் பழங்குடியினர்!

`இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குச் சிரமமாக இருக்கிறது. அதுவும் மாதவிடாய்க் காலங்களில் கழிவறை இல்லாமல், சுகாதாரமில்லாமல் அந்த நாள்களைக் கழிக்கவேண்டியிருக்கிறது.’ - தண்டரைப் பழங்குடிப் பெண்.

`பட்டா இருக்கு; எந்த அடிப்படை வசதியும் இல்லை'- மழைக்காலம் குறித்துக் கலங்கும் தண்டரைப் பழங்குடியினர்

`இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குச் சிரமமாக இருக்கிறது. அதுவும் மாதவிடாய்க் காலங்களில் கழிவறை இல்லாமல், சுகாதாரமில்லாமல் அந்த நாள்களைக் கழிக்கவேண்டியிருக்கிறது.’ - தண்டரைப் பழங்குடிப் பெண்.

Published:Updated:
தண்டரைப் பழங்குடியினர்!

மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தண்ணீர், இருப்பிடம் என எந்த அடிப்படைத் தேவையும் வாய்க்கப்பெறாமல் எத்தனையோ மக்கள் நம் நாட்டில் அல்லல்படுகின்றனர். அப்படி, அடிப்படை வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் தண்டரைப் பழங்குடி இன மக்களைச் சந்தித்தோம்.

தண்டரைப் பழங்குடியினர்
தண்டரைப் பழங்குடியினர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகேயுள்ள தண்டரையில் வெட்டவெளியில் சின்னஞ்சிறிய வீடுகளில் சுமார் 37 குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. வீடுகள் என்றால் செங்கல் வீடுகளல்ல. அவர்களுக்குக் கிடைத்த குச்சிகள், கட்டைகளைப் பயன்படுத்தி சின்ன குடிசைபோல் கட்டிவைத்துள்ளனர். தென்னங்கீற்று, பனையோலைகள் வாங்குவதற்குக்கூட பண வசதி இல்லாத காரணத்தால் தார்ப்பாய்களால் குடிசை போட்டு வாழ்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு வாழும் மக்கள் அடிப்படையில் மரம் வெட்டுதல், களையெடுத்தல் போன்ற கூலி வேலை செய்யக்கூடியவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்யும்போது வயல்களிலும் காடுகளிலும் தங்கிவந்தனர். அதன் பிறகு தன்னார்வலர்களின் உதவியால் பஞ்சந்தத்தி என்றொரு கிராமத்தில் குடிசைபோட்டு வாழ்ந்துவந்தனர். மழைக் காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால் சேறும் சகதியுடன் கஷ்டப்படவேண்டியிருந்தது. அதனால் அரசாங்கம் பஞ்சந்தத்தியில் வாழ்ந்துவந்த மக்களை ஒரு மாதத்துக்கு முன்பு தண்டரையில் குடியமர்த்தினர்.

தண்டரைப் பழங்குடியினர்
தண்டரைப் பழங்குடியினர்

புதிய நிலத்துக்கான பட்டாவும் அரசால் வழங்கப்பட்டது. மேலும், வீடுகள் நான்கு ஐந்து மாதங்களில் கட்டித் தருவதாக அரசு வாக்குறுதி அளித்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தற்போது, பஞ்சந்தத்தியில் வாழ்ந்ததுபோலவே தரையை ஒட்டிய சின்ன தார்ப்பாய்களுக்குள் வாழ்வதால் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தார்ப்பாய்க்குள் தூங்க முடியாது. வெளியில்தான் படுத்துறங்க வேண்டும். மழைக்காலங்களில் தூங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கிறார்கள். பட்டா வழங்கப்பட்டாலும் மின்சார வசதி, குடிநீர்க் குழாய்கள், குளியலறை, கழிப்பறை வசதிகள் எனத் தனியாக எதுவுமே இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். அந்தப் பகுதி முழுக்கக் காடாக இருப்பதால் தேள், பூரான், பாம்பு போன்ற கொடிய விஷமுள்ள உயிரினங்கள் தார்ப்பாய்க்குள் வருவதாகவும், இவ்வாறான சூழ்நிலையில் குழந்தைகளை வைத்திருக்கவே பயமாக இருப்பதாகவும் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தண்டரைக்குக் குடிபெயர்ந்து ஒரு மாதமே ஆகியிருப்பதால் புதிய வேலை வாய்ப்பு எதுவும் பெரிதாகக் கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

தண்டரைப் பழங்குடியினர்
தண்டரைப் பழங்குடியினர்

மேலும், 20-க்கும் மேற்பட்ட தங்களின் குழந்தைகள் தண்டரை அரசுப் பள்ளிக்குச் சென்று படிப்பதாகவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியரே காரில் வந்து அழைத்துச் செல்வதாகவும் கூறகின்றனர். ஆனால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் குழந்தைகள் 3 கிலோமீட்டர் தொலைவு நடந்து பள்ளிக்குச் சென்று படிக்கவேண்டியிருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சிரமங்கள் குறித்து அப்பகுதியில் வாழ்ந்துவரும் ஜெயந்தி பேசுகையில், ``இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குச் சிரமமாக இருக்கிறது. அதுவும் மாதவிடாய்க் காலங்களில் கழிவறை இல்லாமல், சுகாதாரமில்லாமல் அந்த நாள்களைக் கழிக்கவேண்டியிருக்கிறது. சானிட்டரி நாப்கின்களை முறையாக அப்புறப்படுத்த முடியவில்லை" என்றார். மேலும், ``தார்ப்பாய் குடிசை போட்டிருப்பது தற்காலிகமானதே. மழை, காற்றால் தார்ப்பாய் எந்நேரம் வேண்டுமானாலும் பறந்து செல்லலாம். அரசாங்கத்தினர் நான்கு, ஐந்து மாதங்களில் வீடு கட்டித் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வீடு கட்டித் தருவது தள்ளிப்போனால், அதுவரை மழையில் எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறோம் என்றே தெரியவில்லை" என்று அச்சம் தெரிவித்தார் ஜெயந்தி.

பட்டா
பட்டா

அந்தப் பகுதி மக்களுக்கு ஆதரவாக இருந்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சசி பேசுகையில், ``அங்கு வாழும் முப்பத்து ஏழு குடும்பத்துக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாகச் சொன்னார்கள். ஆனால் இதுவரை இருபத்து ஏழு பேருக்கு மட்டுமே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. வீடு கட்டித் தருவதற்குள் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் மக்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு தார்ப்பாய்களில் இருப்பது சிரமம். அதனால் அரசு தற்காலிகமாக குடிசை போட்டுத் தர வேண்டும். அவர்களின் குடும்ப அட்டைகளில் அவர்களின் முந்தைய முகவரியே இருக்கிறது. இதனால் மக்கள் ரேஷன் பொருள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். புதிய முகவரியை உடனடியாக மாற்றிக்கொடுக்க வேண்டும். புதிய இடம் என்பதால் வேலைவாய்ப்பில்லை. அவர்களின் வேலை, கல்வி உள்ளிட்டவற்றை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். மின்சாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்" என அரசுக்குக் கோரிக்கைவைத்தார்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

இது குறித்து தண்டரை ஊராட்சித் தலைவரை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.

தண்டரைப் பகுதி பழங்குடி மக்களைப்போலவே தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் எளிய மக்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் துன்பப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதிலும், வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்.