Published:Updated:

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு! - எச்சரிக்கும் தங்க தமிழ்ச் செல்வன்

தங்க தமிழ்ச் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்க தமிழ்ச் செல்வன்

எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்றுதான் அண்ணாமலை இப்படிப் பிடிவாதமாகப் பேசிவருகிறார்.

நாம் தமிழர் கட்சி செருப்பைக் காட்டி தி.மு.க-வை விமர்சிக்க, கட்சியின் மேடையேறித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்திருக்கிறது தி.மு.க. உக்கிரமான இந்த அரசியல் சூழலில், தி.மு.க-வின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரும், தேனி வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளருமான தங்க தமிழ்ச் செல்வனிடம் பேசினோம்...

``மாரிதாஸ், துரைமுருகனையெல்லாம் பாய்ந்து சென்று கைதுசெய்கிற காவல்துறை, நாம் தமிழர் கட்சி மேடையில் புகுந்து அடிதடியில் ஈடுபடும் தி.மு.க பிரமுகரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே?’’

“அந்தச் சம்பவத்தின்போது, காவல்துறை வேடிக்கை பார்த்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அதேசமயம் நாம் தமிழர் கட்சியினர் வரைமுறையின்றி எல்லைமீறிப் பேசுகிறார்கள். அரசியலில், கண்ணியமாகப் பேசினால்தானே மற்ற கட்சிகளும் உரிய முறையில் பதில் சொல்ல முடியும். ஒருமையில் விமர்சிப்பது, `செருப்பைக் கழட்டி அடிப்பேன்’ என்றெல்லாம் பேசுவது முறையா? அக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய சீமானே அப்படித்தானே பேசிவருகிறார்!’’

`` ‘தம்பிகள் என்பதால், பிரச்னை செய்யாமல் விட்டுவிட்டார்கள். நானாக இருந்தால், செருப்பாலேயே அடித்திருப்பேன்’ என்கிறாரே சீமான்?’’

“இதைத்தான் சொல்கிறேன்... ஒரு கட்சியின் தலைவரே இப்படியெல்லாம் பேசினால் என்ன சார் அர்த்தம்? இது போன்ற பேச்சுகள் வன்முறையைத் தூண்டுவதாகத்தானே இருக்கின்றன... எங்கள் ஆட்சிமீது தவறு இருந்தால் அதைக் கேள்வி கேளுங்கள்... நாங்களும் பதில் சொல்கிறோம்.’’

“ஸ்ரீரங்கம் கோயிலில் மரபுகளை மீறியதாக பா.ஜ.க-வினர்மீது நடவடிக்கை எடுக்காமல், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதே... ஏன் பயமா?’’

“கோயிலினுள் தொலைக்காட்சியை வைத்து ஒளிபரப்பு செய்ய பா.ஜ.க-வினரை அனுமதித்தது அதிகாரிகளின் தவறுதானே... அதனால்தான் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.’’

“ஆனால், ‘தைரியம் இருந்தால், என்மீது நடவடிக்கை எடுங்கள்’ என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரடியாகச் சவால்விடுகிறாரே..?’’

“எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்றுதான் அண்ணாமலை இப்படிப் பிடிவாதமாகப் பேசிவருகிறார். அதற்கு நாங்கள் ஆள் இல்லை. உடனடியாக அண்ணாமலைமீது நடவடிக்கை எடுத்தால், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள், ‘அரசின் நடவடிக்கை தவறு’ என்பார்கள். எனவே, உண்மை நிலவரம் என்னவென்பதை ஆழ விசாரித்துவிட்டே நடவடிக்கை எடுப்போம். மற்றபடி தயக்கமோ, பயமோ எங்களுக்கு இல்லை. பொறுமையாக இருக்கிறோம்... அதற்காக எல்லாவற்றுக்கும் இப்படியே பொறுத்துப் போக மாட்டோம். எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை பாயும். அவரவர் மரியாதையை அவரவர்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.’’

“அண்மையில், தி.மு.க அமைச்சர் காந்தியும்கூட அண்ணாமலை குறித்த கேள்விக்கு, ‘அவன், இவன்’ என்று ஏக வசனத்தில் பதிலளித்திருக்கிறாரே?’’

“அமைச்சர் காந்தி, அப்படிப் பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ‘அவன், இவன்’ என்றுதான் தொடர்ச்சியாகப் பேசிவருகிறார். இது குறித்து நான் தட்டிக்கேட்டபோது, ‘இப்படிப் பேசுவதுதான் சேலத்தில் மரியாதையான வார்த்தை’ என்று சொல்லிவிட்டார். எனவே, சில மாவட்டப் பேச்சு வழக்கு அப்படித்தான் இருக்கிறது. ஆனால், எங்கள் மாவட்டத்தில் இப்படிப் பேசினால், கோபப்பட்டுவிடுவார்கள். பொதுவாக அரசியலைப் பொறுத்தவரையில் எல்லோருமே கண்ணியமாகப் பேச வேண்டும் என்பதுதான் என் கருத்து.’’

எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு! - எச்சரிக்கும் தங்க தமிழ்ச் செல்வன்

“தி.மு.க-வில் தனிநபர் துதி நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கிறதே?’’

“தி.மு.க-வில் உள்ள எல்லோருமே இது போன்று புகழ்வதில்லை. ஒரு சதவிகிதத்தினர் ஆங்காங்கே பேசிவிடுகின்றனர். அதையும்கூட முதல்வரே நேரடியாகக் கண்டிக்கவும் செய்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சபாநாயகரையே காலில் விழவைத்த சம்பவங்களெல்லாம் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், இன்றைய முதல்வரோ, ‘யாரைப் பற்றியும் புகழ வேண்டாம்; திட்டங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள்’ என்றுதான் சட்டசபையிலேயே அறிவுறுத்தியிருக்கிறார்.’’

“உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டனரே?’’

“தன்னால் அப்பாவுக்கு எந்தவிதக் கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கவனமாக இருந்துவருகிறார். அதேசமயம் சேப்பாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக அவரது சிறப்பான உழைப்பை கவனிப்பவர்கள் ‘அவரை அமைச்சராக்க வேண்டும்; மாநிலம் முழுமைக்கும் அவரது உழைப்பை விரிவுபடுத்த வேண்டும்’ என்று தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கின்றனர். முடிவெடுக்கவேண்டியது தி.மு.க தலைமைதான்.’’

“ஆனால், ‘உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க நினைப்பது ஃபாஸ்ட் ஃபுட் அரசியல்’ என்கிறாரே செல்லூர் ராஜூ?’’

(சிரிக்கிறார்.) “வைகை அணையின் நீரைப் பாதுகாக்க, தெர்மாகோலைப் பயன்படுத்திய விஞ்ஞானியின் கருத்துக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லிவிட முடியும்?’’

“சாத்தான்குளம் காவல் நிலைய மரணச் சம்பவத்துக்காகக் கொதித்தெழுந்த தி.மு.க., முதுகுளத்தூர் விவகாரத்தில் அமைதி காப்பது நியாயம்தானா?”

“சாத்தான்குளத்தில் தந்தை, மகனை காவல்துறையினர் அடித்துக் கொன்றதற்கு ஆதாரம் உள்ளது. எனவேதான் தி.மு.க-வும் அந்தப் படுகொலையைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தியது. ஆனால், முதுகுளத்தூர் விவகாரத்தில், காவல்துறையினர்தான் மணிகண்டனை அடித்துக் கொன்றார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லையே... மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய ஒருவர் இது போன்ற விஷயங்களில், அவசரப்பட்டு ‘சாரி’ கேட்டுவிட்டு, பின்னர் அது தவறான விஷயம் என்று தெரியவந்தால், நடந்த விஷயத்தை மாற்றிவிட முடியுமா? எனவே, இந்த விவகாரத்தில் விசாரணை நடந்துவருகிறது. அதன் முடிவுகள் வெளிவரட்டும். நிச்சயம் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்!’’