Published:Updated:

`ஃபியூஸ்போன பல்பு தினகரன்; பெருந்தன்மை ஸ்டாலின்!' - புதிய பதவியால் உற்சாகத் தங்க தமிழ்ச்செல்வன்

"இல்லைங்க... சத்தியமாக எந்த வாக்குறுதியையும் அவர் கொடுக்கவில்லை. அவருடைய அன்புக்கு நான் கட்டுப்பட்டேன். உண்மையிலேயே நல்ல விஷயத்தைச் செய்திருக்கிறார் ஸ்டாலின்."

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். "இப்படியொரு பதவியை ஸ்டாலின் கொடுப்பார் எனச் சத்தியமாக எனக்குத் தெரியாது" என உற்சாகப்படுகிறார் தங்கம்.

Thanga Tamil Selvan
Thanga Tamil Selvan

அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், தலைமையின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தினகரனின் செயல்பாடுகளால் வேதனைப்பட்டவர், தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜூன் மாதம் நடந்த இணைப்பு விழாவுக்குப் பிறகு, `தேனி மாவட்டச் செயலாளராகத் தங்கம் நியமிக்கப்படுவார்' என்ற தகவலும் வெளியானது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல், அ.ம.மு.க-வில் இருந்த வந்த தி.நகர் வி.பி.கலைராஜனுக்கு கலை இலக்கிய அணியின் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

`புதிய பதவியை எப்படிப் பார்க்கிறீர்கள்?' எனத் தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம்.

Thanga Tamil Selvan
Thanga Tamil Selvan

"இப்படியொரு பதவியைக் கொடுத்ததன் மூலம் தலைவர் ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பார்க்கிறேன். அவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு இறுதிவரை இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க-வைக் கொண்டு வந்தார். அடுத்து ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகத் தி.மு.க இருக்கிறது. இந்த நேரத்தில் எனக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்ததை மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். தலைவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.ம.மு.க-விலும் இதே கொ.ப.செ பதவியில் இருந்தீர்கள். அதே பதவி தி.மு.க-விலும் வழங்கப்படும் என ஏற்கெனவே வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததா?

TTV Dinakaran
TTV Dinakaran

"இல்லைங்க... சத்தியமாக எந்த வாக்குறுதியையும் அவர் கொடுக்கவில்லை. அவருடைய அன்புக்கு நான் கட்டுப்பட்டேன். உண்மையிலேயே அவர் நல்ல விஷயத்தைச் செய்திருக்கிறார். இனி கழக வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்."

`அதிகாரம் போய்விட்டால் அ.தி.மு.க நெல்லிக்கனிகளாக சிதறும்' எனக் கூறியிருக்கிறாரே தினகரன்?

`எடப்பாடி ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் சிதறப் போகின்றன!'- திண்டுக்கல்லில் கொதித்த தினகரன்

"அவர் ஒரு ஃபியூஸ்போன பல்பு. ஆட்சியைக் கவிழ்ப்பேன் எனத் தொடர்ந்து பேசி வந்தார். மக்களும் அவரைப் புறக்கணித்துவிட்டார்கள். அந்தக் கட்சியில் நிர்வாகிகளும் இல்லை, தொண்டர்களும் இல்லை. அவருடைய கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதேநேரம், அதிகாரம் இருக்கும் வரையில்தான் அ.தி.மு.க இருக்கும். அதன்பிறகு அவர்கள் யூஸ்லெஸ் ஆக ஆகிவிடுவார்கள்."

எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

"வெளிநாடு போய்த்தான் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் அமர்ந்தபடியே முதலீடுகளை ஈர்க்கலாம். அதைப் பற்றி விரிவாகப் பேசுவோம்."

தேனி மாவட்ட அ.தி.மு.க-வில் நீண்டகாலமாக இருந்தீர்கள். நீங்கள் தி.மு.க-வுக்குச் சென்றதை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?

Stalin
Stalin

"ஜெயலலிதா அம்மா மறைவுக்குப் பிறகு, அந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அம்மா இருக்கும் வரையில் அனைத்தும் சரியாக இருந்தது. அவர் இறந்தபிறகு, அண்ணா தி.மு.க என்ற ஒன்று இல்லை. கமிஷன் அடிப்படையில்தான் அந்தக் கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்களவைத் தேர்தலில் தி.மு.க பெரியளவில் வெற்றி பெற்றது. நான் தி.மு.க-வுக்குப் போனதை மக்களும் ஏற்றுக்கொண்டனர். தேனி கூட்டத்துக்கு வந்து தலைவர் ஸ்டாலின் பேசிவிட்டுப் போன பிறகு நிலைமை மாறிவிட்டது. புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் மனநிலை இன்னும் மாறும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு