Published:Updated:

``அ.தி.மு.க-வினர் பா.ஜ.க அரசையே கலாய்க்கிறார்கள்!'' - சொல்கிறார் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

``மத்திய பா.ஜ.க அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்; தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டு வாங்குகிறோம்' என்றெல்லாம் அ.தி.மு.க-வினர் சொல்கிறார்கள். ஆனால்...'' என்று கொந்தளிக்கிறார் தங்கம் தென்னரசு.

அ.தி.மு.க `வெற்றி நடை போடுகிறது!' என்றால், தி.மு.க `விடியலை நோக்கி' வீறுநடை போடுகிறது. உட்கட்சித் தகராறுகளையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு தேர்தல் பிரசாரத்தில் படு பிஸியாகியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குப் போட்டியாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கிராமசபைக் கூட்டம், பொதுமக்கள் புகார் மனு என பம்பரமாகச் சுற்றிவருகிறார்!

இந்தநிலையில், தி.மு.க மீது முன்வைக்கப்பட்டுவரும் நிகழ்கால அரசியல் கேள்விகளுக்கு விடை கேட்டு முன்னாள் அமைச்சரான தங்கம் தென்னரசுவிடம் பேசினேன்...

``மக்களிடம் வாங்கப்படும் மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வு தந்துவிட முடியும் என்று தி.மு.க கூறிவருவது ஏமாற்றுவேலை என்கிறதே அ.தி.மு.க?’’

``புதிதாக ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதென்றால், அந்த ஆட்சியின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கே முதல் 100 நாள்களைத்தான் பொதுவான இலக்கணமாக எடுத்துக்கொள்கிறோம். அந்த வகையில், மக்களிடமிருந்து பெறப்படுகிற இந்த மனுக்களுக்கும் தி.மு.க ஆட்சியில் 100 நாள்களுக்குள் தீர்வு கொடுக்கப்படும். அதனால்தான் மனுக்களுக்கு வரிசை எண், ரசீது வழங்கப்படுவதோடு, குறை தீர்க்கப்படவில்லை எனில், அரசைக் கேள்வி கேட்கிற உரிமையும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``மு.க.ஸ்டாலின் 'பெட்டிக்குள் பெட்டிவைத்து மனு வாங்கி மோசடி செய்துவருகிறார்’ என்று முதல்வர் குற்றம் சாட்டுகிறாரே..?’’

``பெட்டிக்குள் பெட்டி வைத்து வாங்குவதெல்லாம் அ.தி.மு.க ஆட்சியாளர்களின் பழக்கம்தான். தி.மு.க தலைவர் வசம் வைத்திருக்கும் பெட்டியிலிருந்து எடுத்தால், மனுதான் வரும். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கும் பெட்டிகளிலிருந்து எடுத்தால், என்னென்ன வெளியே வரும் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்.'

ஒரு கூட்டத்தில், மொத்தம் நான்கு பேர் மனு கொடுத்தனர். அவர்களில் மூவரிடம் குறை கேட்கப்பட்டது... ஒருவரிடம் மட்டும் குறை கேட்கப்படவில்லை என்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தால்... அதில் காத்திரம் இருக்கும்! ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் புகார் அளிக்கின்றனர். அவர்கள் அனைவரிடமும் நேரில் புகார்களைக் கேட்டறிய முடியாது. எனவே, சிலரிடம் மட்டும் குறை கேட்டறியப்படுகிறது! இதுதான் உண்மை!''

``மேயராகவும் துணை முதல்வராகவும் மு.க.ஸ்டாலின் பதவி வகித்தபோது ஏன் இது போன்று ஊர் ஊராகச் சென்று மனு வாங்கவில்லை... என்று அ.தி.மு.க கேட்கிறதே?''

``1997-ல் மு.க.ஸ்டாலின் மேயராக பொறுப்புவகித்தபோதே ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். விருதுநகர் அருகேயுள்ள எங்கள் கிராமத்துக்கும் வந்திருக்கிறார். 80-களில் தி.மு.க இளைஞரணிச் செயலாளராக அவர் பொறுப்புவகித்தபோது, தமிழ்நாட்டில் அவர் கால் படாத கிராமங்களே இல்லை. துணை முதல்வராக இருந்தபோதே மகளிர் சுய உதவிக்குழுக்கள் அத்தனையையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இன்றைய அ.தி.மு.க தலைவர்கள் எந்தக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

`கூட்டுறவு சங்கக் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்' என்று உயர் நீதிமன்றம் சொன்னபோது, `முடியவே முடியாது' என்று வாதிட்ட தமிழக அரசுதான், இன்றைக்குத் தேர்தலை மனதில்வைத்துக்கொண்டு கடன் தள்ளுபடி என்று அறிவிக்கிறார்கள். இது அரசியல் இல்லையா?’’'

கருணாநிதி
கருணாநிதி

``தமிழக அரசின் கடன் சுமையை இப்போது விமர்சிக்கிற இதே தி.மு.க., கடந்த 2011-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி கடன் சுமையை ஏற்றிவைத்துவிட்டுத்தானே ஆட்சியை விட்டுச் சென்றது?’’

``கடன் வாங்காத அரசு இருக்க முடியாது. வாங்கப்படும் கடன் நிதி பொறுப்புடைமைச் சட்டத்துக்குள் இருக்கிறதா என்பதுதான் இங்கே கேள்வி. கடந்த காலங்களில் தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது வாங்கிய கடன் 50,000 கோடி என்றால், இப்போது அதை 5 லட்சம் கோடியாக அல்லவா பெருக்கிவிட்டது இந்த அ.தி.மு.க அரசு!''

`உலகின் சிறந்த மொழியான தமிழை கற்க முடியாமல் போனது வருத்தம்!’ - மன் கி பாத் உரையில் மோடி

``தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்திருக்கிறது எனும்போது, கடன் தொகையும் அதிகரித்திருக்கும் என்பது இயல்புதானே?’’

``ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பதைவிடவும் தொடர்ந்து 10 வருடங்கள் ஒரு கட்சி ஆட்சியில் இருந்திருக்கிறது என்பது மிகப்பெரிய விஷயம்தான். அப்படியிருக்கும்போது மிகப்பெரிய பல நல்ல திட்டங்களையும் முறையான நிர்வாகத்தையும் கொடுத்திருப்பதற்கான வாய்ப்பும் கூடவே இருந்திருக்கிறதுதானே! ஆனால், 50,000 கோடியை 5 லட்சம் கோடியாக மட்டும்தானே மாற்றிவைத்திருக்கிறார்கள்!

`மத்திய பா.ஜ.க அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்; தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டு வாங்குகிறோம்' என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், பட்ஜெட் தாக்கலின்போது மத்திய அரசையே கலாய்க்கிறார்கள்! அப்படியென்றால் என்ன... `உதய் திட்டம், நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை என மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையெல்லாம் தனிப்பட்ட எங்கள் சொத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஏற்றுக்கொண்டோம்' என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``இந்தியா முழுக்கவே நீட் தேர்வு அமலாகிவிட்ட இந்தச் சூழலிலும் 'நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம்' என தி.மு.க தேர்தல் வாக்குறுதி கொடுத்திருப்பது சாத்தியமானதுதானா?’’

``நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தீர்மானத்தை, ஏற்றுக்கொள்ள மறுத்து ஜனாதிபதி திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், `ஜனாதிபதி பார்வையில் இருக்கிறது' என்று திரும்பத் திரும்ப அ.தி.மு.க அரசு சட்டசபையிலேயே பொய் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, தமிழக அரசுத் தரப்பு வேறு வழியில்லாமல், `ஜனாதிபதி ஒப்புதல் கொடுக்கவில்லை. தீர்மானத்தை திருப்பியனுப்பிவிட்டார்' என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.

`மீண்டும் தமிழக அரசு, நீட் தேர்வு விலக்கு தீர்மானம் இயற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்' என்று நாங்கள் தமிழக அரசுக்கு சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால், அதைப் பற்றிய எந்தச் சிந்தனையுமே அ.தி.மு.க அரசுக்கு இல்லையே! ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு விலக்கு தீர்மானம் இயற்றி, அதை நிறைவேற்றுவதற்கான அழுத்தம் கொடுத்து நிச்சயம் சாதித்துக்காட்டுவோம்!''

குமரி: `இந்தியாவின் தடுப்பூசியை வாங்குவதற்கு 50 நாடுகள் காத்திருக்கிறது!’ - ஆளுநர் தமிழிசை பெருமிதம்

`` `3-வது அணி அமையும்’ என்கிறார் கமல். `தி.மு.க-அ.தி.மு.க என இரு அணிகளிலுமே வி.சி.க-வின் தேவை இருக்கிறது’ என்கிறார் திருமா. தி.மு.க கூட்டணி எப்படியிருக்கிறது?’’

``உறுதியாக இருந்துவரும் தி.மு.க கூட்டணி அப்படியே தொடர்கிறது என்று ஏற்கெனவே தி.மு.க தலைவர் கூறியிருக்கிறார். மற்றபடி கூட்டணிக்கு யார் வருவார்கள் என்பதையெல்லாம் தி.மு.க தலைமைதான் முடிவு செய்யும்!''

கமல்
கமல்

``அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலுக்கு தி.மு.க எம்.எல்.ஏ நிதியுதவி அளித்திருப்பது, மதச்சார்பற்ற கூட்டணியை நம்பியிருக்கும் சிறுபான்மைச் சமூகத்துக்கு மனக் காயத்தை ஏற்படுத்திவிடாதா?''

``யாருக்கும் மனக் காயத்தை ஏற்படுத்தாது. இந்துக்கள் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்வதும், கந்தூரி திருவிழாவுக்கு இந்துக்கள் நிதி உதவி செய்வதும் இன்றைக்கும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!''

அடுத்த கட்டுரைக்கு