Published:Updated:

`இது நியாயமா?'- பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தஞ்சை விவசாயி!

`2020-க்குள் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்துவேன் எனத் தெரிவித்தீர்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விவசாய கடன்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சலுகைகளில் மத்திய அரசு சில அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதனால் தங்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்நிலையில்தான், சில காட்டமான கருத்துகளை முன் வைத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தஞ்சையைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதி துணிச்சலாகக் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில், ``2016-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்ட நீங்கள் `2020-க்குள் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்துவேன் எனத் தெரிவித்தீர்கள். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் நீங்கள் மேற்கொள்ளவில்லை. தாங்கள் பேசியதற்கு முரணாகச் செயல்படுகிறீர்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் பெற்ற விவசாயிகள், தங்களது கடனை, உரிய காலத்துக்குத் திருப்பி செலுத்தினால், 3 சதவிகித வட்டி மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதைத் தங்களது அரசு அடியோடு ரத்து செய்துள்ளது

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

இதுமட்டுமா? விவசாய நகைக்கடனுக்கான வட்டியை, எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி 7 சதவிகிதத்திலிருந்து 9.2 சதவிகிதமாக உயர்த்தியுள்ளீர்கள். இது எந்தவிதத்திலும் நியாயமல்ல. இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. எனவே, விவசாய கடனுக்கான வட்டி உயர்வு அரசாணையை தங்களது அரசு திரும்ப பெற வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், விவசாயிகள் நலன் கருதி, கூட்டுறவு வங்களில் வட்டியில்லா கடன் வழங்கப்படுவது போல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். இதற்காக, இந்திய அளவில் அனைத்து விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்” என எழுதியுள்ளார்.

இவர் இவ்வாறு பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதம் எழுதியிருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.