Published:Updated:

`முதலில் பா.ஜ.க; இப்போது பா.ம.க' - தொடரும் சி.வி.சண்முகத்தின் கூட்டணி சர்ச்சை

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

பாஜக குறித்து சி.வி.சண்முகம் பேசிய கருத்துகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாமக கூட்டணி குறித்து சி.வி.சண்முகம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகளுடன் நேரில் சென்று உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசிவருகிறார் சி.வி.சண்முகம். அந்த வரிசையில் கடந்த 6-ம் தேதி வானூரில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பேசியிருந்த சி.வி.சண்முகம், "பா.ஜ.க உடனான கூட்டணியின் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் இழந்துவிட்டோம். நம் கூட்டணிக் கணக்கு சரியில்லை. இதுவே நம் தோல்விக்குக் காரணம்" என்று அதிரடியாக பேசியிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின. இது தொடர்பான செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், " 'உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு" என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "சி.வி.சண்முகம் கூட்டணி தர்மத்தை மீறிப் பேசியிருக்கிறார்" என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

`சி.வி.சண்முகம் கூட்டணி தர்மத்தை மீறி பேசியிருக்கிறார்' - கே.டி.ராகவன் காட்டம்
கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம்
கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு திசையில் கருத்து தெரிவிக்க, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, பாஜக தொடர்பாகப் பேசியது என் சொந்தக் கருத்துதான் என்று தெரிவித்திருந்தார் சி.வி.சண்முகம். கூட்டணிக்குள்ளான அந்தப் புகைச்சல் லேசாக அடங்குவதற்குள், "பா.ம.க உடனான கூட்டணியால் பட்டியலின மக்களின் வாக்குகளை நம்மால் பெற முடியவில்லை" என சி.வி.சண்முகம் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், "இன்று நாம் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் இருந்திருப்போம். ஆனால், பா.ஜ.க கூட்டணியால் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக நாம் இழந்துவிட்டோம். பா.ஜ.க கூட்டணியே அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்" என்கி்றார். அதைத் தொடர்ந்து, "பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டணி இருந்த காரணத்தால் பட்டியலின மக்களின் வாக்குகளை நம்மால் பெற முடியவில்லை. அது அவர்களுக்குள்ளே இருந்த கொள்கைரீதியான ஒரு முரண்பாடு. ஆனால், கூட்டணியில் எல்லோரும் ஒன்றாக செயல்பட்டதல்தான் இத்தகைய நிலையிலும் வலுவான ஒரு எதிர்க்கட்சியாக இருக்கிறோம். தி.மு.க-வுக்கும் நமக்கும் 3% வாக்குகள் வித்தியாசம்தான். வெறும் 13 லட்சம் வாக்குகள்தான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அதில் 6.5 லட்சம் வாக்குகள் மாறியிருந்தால், இன்றைக்கு ஆட்சியே வேற..!

கே.டி.ராகவன் - சி.வி.சண்முகம் - ராமதாஸ்
கே.டி.ராகவன் - சி.வி.சண்முகம் - ராமதாஸ்

அந்த 13 லட்சம் வாக்குகளில்கூட, 6 லட்சம் வாக்குகள் வெறும் 5 முதல் 6 சட்டமன்ற தொகுதிகளிலேயே போய்விட்டன. ஆத்தூர் தொகுதியில் பா.ம.க போட்டியிட்டது. அங்கு 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. திருக்கோவிலூர் தொகுதியில் பாஜக, சென்னை சேப்பாக்கம் என நான்கு தொகுதிகளை எடுத்துக்கொண்டாலே சுமார் 4 லட்சம் வாக்குகள் போய்விட்டன" என்று சி.வி.சண்முகம் பேசுவதாக வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆடியோ, கூட்டணிக் கட்சிகளுக்கிடையே மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan

உள்ளாட்சித் தேர்தல் குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது பா.ஜ.க குறித்த கருத்துகளைப் பரவலாக முன்வைத்த சி.வி.சண்முகம், பாமக குறித்துப் பேசியிருந்தால் மரக்காணம் அருகேயுள்ள ஆலத்தூர், குருவம்மாபேட்டை போன்ற இடங்களில் நடைபெற்ற கூட்டத்தில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் பேசினோம். "கட்சிக்குள்ளான நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் சோர்ந்து போகாமல் இருக்கக்கூட பேசியிருக்கலாம். அண்ணன் வெளியூர் போயிருக்கிறார் என நினைக்கிறேன்..! வந்ததும் பேசுங்கள்" என்கிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு