Published:Updated:

சின்ன(ம்) பிரச்னையால் பாஜக-விடம் சிக்கித் தவிக்கிறதா அதிமுக?!

எடப்பாடி, பன்னீர் ( விகடன் )

அதிமுக-வின் `சின்ன' பிரச்னையை பாஜக துருப்புச்சீட்டாகக் கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்குக் காரணமாக இருக்கமாட்டேன் என ஓ.பி.எஸ் தெரிவித்திருப்பது அடுத்து என்ன என்ற ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

சின்ன(ம்) பிரச்னையால் பாஜக-விடம் சிக்கித் தவிக்கிறதா அதிமுக?!

அதிமுக-வின் `சின்ன' பிரச்னையை பாஜக துருப்புச்சீட்டாகக் கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்குக் காரணமாக இருக்கமாட்டேன் என ஓ.பி.எஸ் தெரிவித்திருப்பது அடுத்து என்ன என்ற ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

Published:Updated:
எடப்பாடி, பன்னீர் ( விகடன் )

திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது தமாகா. இதனால், பெரிய கட்சிகள் என்ற வகையில், காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் அதிமுக-வில் தனி அணியாகச் செயல்பட்டுவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதிமுக-வில் இரு அணிகள் போட்டியிடும் நிலை ஏற்பட்டால், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

எடப்பாடி - ஓபிஎஸ்
எடப்பாடி - ஓபிஎஸ்

இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம்" என அதிரடியாக அறிவித்தார். ஒருவேளை இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசியக் கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு ஆதரிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், "இரட்டை இலைச் சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை இருக்கிறது” என்ற ஓ.பி.எஸ், ``இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்குக் காரணமாக இருக்கமாட்டேன். தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். "B" படிவத்தில் கையெழுத்திட தயாராகவே இருக்கிறேன். இரட்டை இலைச் சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுக-வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். வாய்ப்பு கிடைத்தால் சசிகலாவை சந்தித்துப் பேசுவேன்” என்று பல முக்கிய கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார். 

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``இந்தத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வாய்ப்பில்லை. அது வதந்தி. அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டதை சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அங்கீகரித்திருக்கிறது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்தாலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. அதனால், இடைத்தேர்தலில் A, B படிவத்தை பழனிசாமி வழங்கினால் செல்லும். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படாது” என்று அவர்  திட்டவட்டமாகக் கூறினார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பாக நடந்த பணிமனைக்கான பந்தக்கால் அமைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். அதேபோல் இரட்டை இலைச் சின்னம் நிச்சயம் தங்கள் தரப்புக்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக-வின் வேட்பாளர் குறித்த ஆலோசனை இன்று (24.01.23) ஈரோட்டிலுள்ள கட்சி பணிமனையில் நடக்கவிருக்கிரது. அதன் பின்னர் விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களின் நேர்காணல் நடத்தப்பட்டு, இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால்  விரைவில்  வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இந்த அறிவிப்புக்குப் பிறகே, யார் களத்தில் இருக்கப் போகிறார்கள் என்பது தெரியவரும்" என்றார். மேலும், `விரைவில் வாக்கு சேகரிக்கும் பணிகளைத் தொடங்குவோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, அனுதாப அலை வீசும் என்பதாலும், இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணியே ஜெயிக்கும் என்ற விதியை மாற்ற முடியாது என்ற எண்ணம் இருப்பதாலும், பெரும் முன்னெடுப்பு வேண்டுமா... என்ற யோசனையில் எடப்பாடி இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பாஜக-வைப் பொறுத்தவரை, அண்ணாமலை முதலில் தனித்துப் போட்டியிட முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் திருச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அதிமுக-வைப் பொறுத்தவரை அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட பெரிய கட்சி எனவும், திமுக-வைத் தோற்கடிக்கும் அளவுக்குத் தகுதியான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் பேசியிருக்கிறார். 

அதே நேரம், தற்போதைய சூழலில் அதிமுக-வின் `சின்ன’ விவகாரத்தில் பாஜக-வின் கை ஓங்கியிருப்பதற்கு தோதான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் பாஜக-வின் சிக்னலுக்காகக் காத்திருக்கும் நிலைக்கு அதிமுக  தள்ளப்பட்டிருப்பதாக முணுமுணுக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். 

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் இது குறித்து கேட்டபோது, "அதிமுக சின்னம் முடக்கப்படவே அதிக வாய்ப்பிருக்குங்க..." என அதிரடியாகத் தொடங்கினார். மேலும், தேசிய அளவில் பல முனைப்போட்டி நிலவும் சூழலில் எல்லாம் பாஜக-வின் வாக்கு வங்கி வளர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், ``பாஜக விரைவில் தங்கள் வேட்பாளரை அறிவிக்கும் சூழல் வரும்” என்றார். ``தேர்தல் ஆணைய விதிப்படி இருவரும் சேர்ந்து கையொப்பமிட்டால் மட்டுமே சின்னம் கிடைக்கும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சின்னம் முடக்கப்படாது எனப் பொய் சொல்லிவருகிறார்கள்” எனக் குறிப்பிட்டார். 

ஒருபக்கம், திமுக கூட்டணி ஈரோடு கிழக்கில் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக கூட்டணி குழப்பங்களுக்கு எப்போது தீர்வு கிடைக்குமோ... பொறுத்திருந்து பார்ப்போம்!