Published:Updated:

கோட்டையிலிருந்து ராஜ்பவனுக்கு... துணைவேந்தர்கள் நியமனத்தில் எழும் குற்றச்சாட்டுகளும் பின்னணியும்!

பன்வாரிலால் புரோஹித் - துரைமுருகன்
பன்வாரிலால் புரோஹித் - துரைமுருகன்

அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மட்டுமல்லாமல் சில கல்வியாளர்களும் துணைவேந்தர் நியமனம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். ''ஆளுநரின் இந்தச் செயல்பாடு மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல்'' எனவும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வாக்குப் பெட்டிகளைக் கண்காணிப்பதில் தீவிரமாக இருக்க, புதிதாகத் துணைவேந்தர்களை நியமித்திருக்கும் ஆளுநரின் செயல்பாடு அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த மறுநாள், ஆளுநர் மாளிகையிலிருந்து செய்திக் குறிப்பு ஒன்று வெளியானது. அதில், ``தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் கே.என்.செல்வகுமாரை, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருக்கிறார். டாக்டர் கே.என்.செல்வகுமார், தான் பதவியேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார். `கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியரான செல்வகுமார், ஆசிரியர் பணியில் 32 ஆண்டுகள் அனுபவம்மிக்கவர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீன், கால்நடை பராமரிப்புத்துறை தொழில்நுட்பக் கண்காணிப்புக்குழு உறுப்பினர், பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைதூரக் கல்வி இயக்குநர், கல்விக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். அதோடு, 84 ஜர்னல்கள் பப்ளிஷ் செய்ததோடு மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார். மூன்று சர்வதேச மற்றும் 11 தேசிய அளவிலான புராஜெக்ட்களையும் செயல்படுத்தியுள்ளார்'' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் - துணைவேந்தர் நியமனம்
ஆளுநர் - துணைவேந்தர் நியமனம்
The hindu

ஆளுநரின் இந்த நியமனம்தான் அரசியல் அரங்கில் தற்போது அனலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன். அதில், ''புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்கப்போகும் துணைவேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவசர அவசரமாக வெளியிட்டிருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

1. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக எஸ். மாதேஸ்வரன்.

2. கால்நடைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்வகுமார்.

இவை இரண்டும் ஆளுநர் அறிவித்ததாக செய்தித்தாள்களில் வெளிவந்த அறிவுப்புகள். பல நாள்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்தப் பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்துவிடும்?

தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில், எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், `பொறுத்ததுதான் பொறுத்தீர், இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக் கூடாதா?’ என்பதுதான் எமது கேள்வி. முறையான துணைவேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகம் எப்படிச் சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதைப் பல்வேறு ஊடகங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்குக் கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!" எனக் காட்டமாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

அவர் மட்டுமல்லாமல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் ``துணைவேந்தர்கள் நியமனம் கோட்டையிலிருந்து ஏனோ ராஜ்பவனுக்கு மாற்றப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தது ஏன்?'' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மட்டுமல்லாமல் சில கல்வியாளர்களும் துணைவேந்தர் நியமனம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். ``ஆளுநரின் இந்தச் செயல்பாடு மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல்'' எனவும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துவருகின்றனர்.

இது குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''அரசு செயல்படாமல் இருக்கும் இந்தச் சமயத்தில் அவசரகதியில் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, மாநில அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. அது கவர்னருக்கும் பொருந்தும். அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான் கவர்னர். இணைவேந்தரனான கல்வி அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல், எந்தவித ஆலோசனையும் செய்யாமல் தனிப்பட்ட முறையில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை. ஆளுநர் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஏற்கெனவே சூரப்பா விவகாரத்திலும் இதுதான் நடந்தது. குறைந்தபட்சம் கல்வி அமைச்சருக்குத் தெரியப்படுத்தாமல் இப்படி ஒரு நியமனத்தைச் செய்திருப்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது.

ஏற்கெனவே துணைவேந்தர்கள் நியமனம் குறித்து அ.தி.மு.கமீதும், ஆளுநர் மீதும் தி.மு.க பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. அதனால், தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் நாம் எதையும் செய்ய முடியாது என்பதாலேயே தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை, தங்கள் கருத்துகளுக்கு ஒத்து வருபவர்களை அவசரகதியில் பா.ஜ.க-வினர் நியமித்துவருகிறார்கள்'' என்கிறார் அவர்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜிடம் பேசினோம்.

``பல்கலைக்கழகங்களுடைய வேந்தர் கவர்னர்தான். அவர் துணைவேந்தர்களை நியமிக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எல்லா மாநிலங்களுக்கும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது வேந்தர்களான ஆளுநர்கள்தான். அந்த அடிப்படையில் துணைவேந்தர்களை தேர்வு செய்து கொடுப்பதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. அந்த கமிட்டி சரியானவர்களைத் தேர்வுசெய்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறது. மத்திய, மாநில அரசுகளோடு கலந்து பேசி இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது. கடந்த காலங்களில் துணைவேந்தர்கள் நியமனங்கள் இப்படித்தான் நடந்திருக்கின்றன. அதனால், ஆளுநரின் நியமனம் செய்யும் அதிகாரத்தைக் கேள்வி எழுப்புவது சரியல்ல.

மாநில அரசுகளுக்கு அந்த உரிமை வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் அதற்கான கோரிக்கைகள் எழ வேண்டும். மாநில அரசுகள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்து அதற்கான சட்டத்தை இயற்றச் செய்ய வேண்டுமே தவிர தனிப்பட்ட ஒரு மாநிலத்தால் ஒன்றும் செய்ய முடியாது. புதிய அரசு அமைவதற்குள் ஏன் அவசரம் என்று துரைமுருகன் கேட்கிறார். அவர் கேட்பதில் தவறேதும் இல்லை. கமிட்டி தேர்வு செய்து கொடுத்திருந்தாலும் புதிதாகப் பதவியேற்கும் அரசோடு ஆலோசனை செய்வதுதான் சாலச்சிறந்தது'' என்கிறார் அவர்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

''துரைமுருகனின் அறிக்கையை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. தி.மு.க-வினரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்... ஒரு அரசாங்கம் அல்லது பல்கலைக்கழகம் அதனுடைய கடமைகளைச் சரியாகச் செய்துகொண்டிருக்கிறது. கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தேர்தலுக்கு முன்பாகவே இந்த அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான். பத்துப் பேரில் மூன்று பேரை ஏற்கெனவே பரிந்துரைத்திருந்தார்கள். அதில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். காந்திகிராம் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு மாநில அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டிய தேவையே இல்லை. அது தன்னாட்சி அதிகாரம் உடைய பல்கலைக்கழகம். அது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்துக்குட்பட்டது. அதைப் பற்றிப் பேச துரைமுருகனுக்கு எந்த உரிமையும் இல்லை. தி.மு.க-வினர் ஏதோ தாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டதைப்போலப் பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு