`இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க!' என்கிற முழக்கத்தைக் கருணாநிதி சொன்ன தினம் இன்று!
`நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக' என 1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்திக்குச் சூட்டிய கருணாநிதி, 24 ஆண்டுகள் கழித்து, அவரின் மருமகள் சோனியா காந்திக்குச் சொன்ன பொன்மொழிதான் ''இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க!'

இந்த இரண்டு முழக்கங்களும் ஒரே மாதிரியான ரைமிங் கொண்டவை. ஆனால், கோஷங்கள் இரண்டு வெவ்வேறு தேர்தல்களில் கருணாநிதி சொன்னவை. இதன் வரலாற்றைத் தெரிந்துகொள்ள 1980 மற்றும் 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் பயணிப்போம்.
1971 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இந்திரா காந்திக்கு ராஜ் நாராயண் மூலம் சோதனை வந்தது. ரேபரேலி தொகுதியில் இந்திரா வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற ராஜ் நாராயண், `அரசு அதிகாரத்தை இந்திரா காந்தி தேர்தல் பிரசாரத்துக்கு முறைகேடாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்' என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் `இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது' என்று அறிவித்தது. தன் பதவியைத் தக்க வைக்க.. நெருக்கடி நிலை பிரகடனத்தை அறிவித்தார் இந்திரா காந்தி. பொது மக்கள், கட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றின் அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன; ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; காங்கிரஸுக்கு எதிரான மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.
நெருக்கடி நிலை அத்துமீறல்களை எதிர்த்த கட்சிகள் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக அணி திரண்டன. ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், லோக்தளம், சோசலிசக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஜனதா என்ற கட்சியை உருவாக்கின. இந்திரா ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தி தேர்தலில் எதிரொலித்தது. பெருவாரியான இடங்களில் ஜனதா கட்சி வென்று ஆட்சி அமைத்தது. நாட்டில் முதல்முறையாகக் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தது. ஜனதா தலைவர்களிடையே ஏற்பட்ட மோதலால் மூன்று ஆண்டுகளில் ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்தது.

1980-ம் ஆண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாரானது தேசம். அப்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தி.மு.க-விலிருந்து பிரிந்து, முதல்முறையாக ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆருக்கு பதிலடி கொடுக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் கருணாநிதி. அந்த நேரத்தில்தான் 1980 நாடாளுமன்றத் தேர்தல் வந்து சேர்ந்தது. காங்கிரஸும் தி.மு.க-வும் கைகோத்தன. இத்தனைக்கும் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்கு தி.மு.க-வும் ஆளானது. அதன் முக்கியத் தலைவர்கள் மிசா சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார்கள். அதையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு இந்திராவுடன் அணி சேர்ந்தார் கருணாநிதி.
இந்திரா காந்தியும் கருணாநிதியும் ஒரே மேடையில் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் சென்னை கடற்கரையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், ``டெல்லியில் கேலிக்கூத்தான அரசு அமைவதை விரும்பவில்லை. நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும் என விரும்புகிறோம். இந்திரா காந்தியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும்'' எனப் பேசிய கருணாநிதி, ``நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சியைத் தருக!'' என இந்திராவுக்குப் பட்டம் சூட்டினார்.

அடுத்து பேசிய இந்திரா காந்தி, ``நாங்கள் தவறு செய்திருக்கிறோம். அதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனி தவறுகள் நடக்காது'' என வாக்குறுதி கொடுத்தார். ``கருணாநிதியை நம்பலாம். அவர் ஆதரித்தால் முழுமையாக ஆதரிப்பார். எதிர்த்தால் தீவிரமாக எதிர்ப்பார். திரைக்குப் பின்னால் ரகசியமான நடவடிக்கைகளை தி.மு.க எடுத்தே இல்லை. கருணாநிதி நண்பராக இருந்தாலும் விரோதியாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பார்'' எனக் கருணாநிதிக்குப் புகழாரம் சூட்டினார் இந்திரா.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியிருந்தது. இந்திரா பிரதமர் ஆனார்.
இதன்பிறகு தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி கலைத்தார். தமிழக சட்டசபைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 1980-ம் அண்டு நடந்த தேர்தலில் மீண்டும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. ஆனால், தேர்தலில் எம்.ஜி.ஆரே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.

1980 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் இணைந்து போட்டியிட்ட தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் நடந்த சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி அமைக்கவில்லை. 24 ஆண்டுகள் கழித்து, 2004 நாடாளுமன்றத் தேர்தலில்தான் காங்கிரஸுடன் அணி சேர்ந்தது தி.மு.க.
நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டசபைக்குச் சேர்த்து 1991-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. பிரசாரத்துக்காக ராஜீவ் காந்தி ஶ்ரீபெரும்புதூர் வந்தபோது விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது ஏற்பட்ட வன்முறையில் தி.மு.க-வினர் தாக்கப்பட்டனர்; தி.மு.க கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன; முரசொலி அலுவலகம் தீக்கிரையானது; அந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வும் காங்கிரஸும், `ராஜீவ் கொலையில் தி.மு.க-வுக்கு தொடர்பு உண்டு' எனப் பிரசாரம் செய்தனர்.

தி.மு.க வரலாற்றில் முதன்முறையாக மிக மோசமான தோல்வியைத் தழுவியது. கருணாநிதி போட்டியிட்ட தொகுதியில் மட்டுமே தி.மு.க வென்றது.
அதன் பிறகு தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே இருந்த பகை இன்னும் வீரியமானது. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க இடம்பெற்று வெற்றி பெற்றது. வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றபோது அவரது அமைச்சரவையில் தி.மு.க-வும் அங்கம் வகித்தது. முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இடம்பெற்றனர். 2003-ம் ஆண்டு முரசொலி மாறன் மறைந்தபோது அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அதனால், அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பிரதமர் வாஜ்பாய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். முரசொலி மாறனுக்கு உரிய மரியாதை கிடைத்த பிறகு சில மாதங்களிலேயே மத்திய அரசில் இருந்து விலகியது தி.மு.க. அடுத்து காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தது.
24 ஆண்டுகள் கழித்து, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் அணி அமைத்தது தி.மு.க. 'இது பொருந்தாத கூட்டணி' என்றார் ஜெயலலிதா. பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து, 2004 தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. கருணாநிதியும் சோனியா காந்தியும் அணி சேர்ந்ததை மற்றவர்களைவிட ஜெயலலிதா மிகக் கடுமையாக விமர்சித்தார்.

''ஆட்சி, அதிகாரம் வேண்டும் என்பதற்காகக் கணவருக்குத் துரோகம் செய்த சோனியா காந்தியை ராஜீவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது. இத்தாலியில் பிறந்த சோனியாவிடம் தேசபக்தியை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பதிபக்திகூட இல்லையே? இந்த மண்ணில் பிறந்த எந்த இந்தியப் பெண்ணாவது, இப்படிப்பட்ட படுபாதகமான செயலைச் செய்ய நினைப்பாரா? ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கிறது'' எனத் தேர்தல் பிரசாரத்தில் சீறினார் ஜெயலலிதா.

`` `தி.மு.க-வோடு கூட்டணி சேரலாமா... உங்கள் கணவரைக் கொன்றவர்கள் ஆயிற்றே?' என்று கேட்டால் `அது முடிந்து போன கதை’ என்கிறார் சோனியா. ராஜீவ் மரணம் முடிந்துபோன கதையா? ஜெயின் கமிஷன் தனது அறிக்கையில் ராஜீவின் கொலையோடு தி.மு.க-வுக்குத் தொடர்புள்ளது என்று சொல்லியிருக்கிறதே. ராஜீவ் படுகொலையில் தி.மு.க-வுக்குத் தொடர்பு இல்லை என்று நன்சான்றிதழ் வழங்கி, தீர்ப்பும் அளித்துவிட்டார் சோனியா'' எனப் பிரசாரத்தில் கொந்தளித்தார் ஜெயலலிதா.

தேர்தல் நடைபெற்றபோது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அத்வானி உள் துறை அமைச்சராக இருந்தார். ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை வைத்து, தி.மு.க-வுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக அத்வானியிடம் காங்கிரஸ் கொடுத்த மனுவை தூசு தட்டியது பி.ஜே.பி. அதாவது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதோடு குடைச்சலும் கொடுக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.
'தி.மு.க-வுக்கும் ராஜீவ் கொலைக்கும் தொடர்பில்லை' என ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கையில் சொல்லப்பட்டாலும் தி.மு.க மீது காங்கிரஸ் கொடுத்த புகார் மனுவை முக்கிய பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரமாகக் கொடுத்தது பி.ஜே.பி. `கணவரைக் கொலை செய்தவர்களின் ஆதரவாளர்களுடன் சோனியா கைகோத்தது நியாயமா?' என அந்த விளம்பரங்களில் கேள்வி எழுப்பியது பி.ஜே.பி.

இப்படியான சூழலில்தான் 2004 மே 7-ம் தேதி சோனியாவும் கருணாநிதியும் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். அந்த நாள்தான் இன்று. மே 10-ம் தேதி தமிழகத்தில் தேர்தல். மூன்று நாள்களுக்கு முன்பு சோனியாவும் கருணாநிதியும் பங்கேற்ற பிரசார கூட்டம் சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.
காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அன்றைக்குத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக இருந்த ஜனார்த்தனன் ரெட்டியும், தல்ஜீத் சிங்கும் தீவுத் திடல் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

காரணம் அதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் இதே தீவுத் திடலில் வாஜ்பாய், ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க பிரசார கூட்டம் நடந்து முடிந்திருந்தது. அந்த கூட்டத்தைவிட அதிகமானவர்கள் திரட்டிக் காட்ட வேண்டிய சவால் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு இருந்தது. அதுதவிர இன்னொரு நெருக்கடியும் அவர்களுக்கு இருந்தது.
கூட்டத்துக்கு முந்தைய நாள் நள்ளிரவில்தான் தீவுத் திடல் மைதானத்தைக் காங்கிரஸுக்குக் கொடுத்தார்கள். அதனால், அவசர அவசரமாய் பணிகளை மேற்கொண்டார்கள். மே 5-ம் தேதி பிரதமர் வாஜ்பாய், ஜெயலலிதா பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டம் இதே தீவுத் திடலில்தான் நடந்தது. ``திடலை உடனடியாக ஒப்படைக்க வேண்டாம் என அ.தி.மு.க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டதால் தீவுத் திடலை உடனடியாக தராமல் இழுத்தடித்தனர்'' எனக் குற்றம் சாட்டியது தி.மு.க கூட்டணி.

வாஜ்பாய், ஜெயலலிதா கலந்துகொண்ட அதே மேடையையும், மைக் செட்டுகளையும் நாற்காலிகளையும் அப்படியே பயன்படுத்திக்கொள்ளக் காங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால், கூட்ட ஏற்பாட்டைச் செய்த கான்ட்ராக்டர் மற்றும் மைக்செட்காரர்கள் அத்தனையையும் கலைத்து விட்டனர். இதனால், தீவுத் திடலில் ஏற்கெனவே போடப்பட்ட சேர்கள், மேடை, பந்தல், லைட்டுகள், மைக் செட்டுகள் என அனைத்தையும் காலி செய்தனர். இந்தப் பணிகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தீவுத் திடலை மொத்தமாகத் துடைத்து எடுத்துச் சென்ற பிறகுதான், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியினர் களத்தில் இறங்கினர். நள்ளிரவுக்கு பிறகுதான் தீவுத்திடல் கிடைத்து, உடனே மின்னல் வேகத்தில் வேலைகள் தொடங்கின. மைக் செட்டுகள், லைட்டுகள், பந்தல் தளவாடங்கள், ஜெனரேட்டர்கள், நாற்காலிகள் ஆகியவை கொண்டு வரப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் ஏற்பாட்டைச் செய்து முடித்தார்கள்.
விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேராக அண்ணா அறிவாலயம் போனார். கருணாநிதியைச் சந்தித்தார். பிறகு சோனியாவும் கருணாநிதியும் ஒரே காரில் தீவுத் திடல் கூட்டத்துக்கு வந்தார்கள். 24 ஆண்டுகள் கழித்து காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் கருணாநிதி என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அன்றைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜி.கே.வாசன் முதலில் மைக் பிடித்தார். ``1980 தேர்தலில் காங்கிரஸும் தி.மு.க-வும் கூட்டணி அமைத்தபோது, 'நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக' எனக் கலைஞர் வாழ்த்தினார். அது இப்போதும் நினைவில் நிற்கிறது'' என்றார்.

இதைச் சரியாக பிடித்துக்கொண்டார் அடுத்து பேச வந்த கருணாநிதி. ``ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதைச் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் கூட்டணியைப் பிரிக்க முடியாது. தொடர்ந்து வலுவுடன் திகழும். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் செய்தி சோனியா காந்தியின் காதுகளுக்கு வந்து சேரும்'' எனப் பேசிய கருணாநிதி, முக்கியமான இடத்துக்கு வந்து நின்றார்.
``இந்தியாவின் மிகப் பெரிய குடும்பத்தின் விளக்காக ஒளி விட்டுக் கொண்டிருப்பவர் சோனியா. நாட்டின் சுதந்திரத்துக்காகத் தியாகம் செய்த குடும்பம் தொடர்ந்து தியாகங்களைச் செய்து வருகிறது. அதை நிலைநாட்டும் வகையில் சோனியா திகழ்கிறார். 1980 தேர்தலில் `நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக’ என்று இந்திரா காந்திக்கு அழைப்பு விடுத்தேன். இப்போது அந்த `இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க’ என்று அழைக்கிறேன்'' எனச் சோனியாவை வாழ்த்தினார்.
இந்த முழக்கத்தைக் கருணாநிதி சொன்னபோது சோனியா காந்தி அருகில் இருந்த தயாநிதி மாறன், அதை அவருக்கு மொழி பெயர்த்துச் சொன்னார். சோனியாவின் முகத்தில் பூரிப்பு. கூட்டம் ஆர்ப்பரிக்க... அவர்களைப் பார்த்து வணங்கினார் சோனியா.
அடுத்து பேசிய சோனியா, ``நாட்டுக்காகக் கணவர் ரத்தம் சிந்திய மண்ணில் நின்றுகொண்டிருக்கிறேன். ராஜீவ் காந்தியின் நினைவுகளை என்றும் சுமந்துகொண்டிருக்கிறேன். ராஜீவ் காந்தியைப் போல எனக்கும் இங்கு உயிர் விடும் நிலை ஏற்படுமானால் அதைவிடப் பெருமையான விஷயம் எனக்கு வேறில்லை. நாட்டுக்காக உயிரை இதே மண்ணில் விடவும் தயாராக இருக்கிறேன்'' என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தவிர, பா.ம.க., ம.தி.மு.க, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தீவுத் திடல் கூட்டம் நடைபெற்ற அன்றைய தினம் ராமதாஸ் திண்டிவனத்திலும் வைகோ விருதுநகரிலும் பிரசாரத்தில் இருந்தனர். தீவுத் திடல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ராமதாஸும் வைகோவும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்பதால் சோனியா காந்தியுடன் மேடையேறுவதைத் தவிர்த்திருக்கலாம் என அப்போது பேச்சுகள் கிளம்பின. சோனியாவுடன் கூட்டத்தில் பங்கேற்றால், அந்த ஒரு போட்டோவை வைத்தே எதிர்மறை பிரசாரத்தில் பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி ஈடுபடும். என்பதால், அதைத் தவிர்க்க இந்த ஏற்பாட்டைச் செய்ததாகப் பேச்சு கிளம்பியது. பா.ம.க., ம.தி.மு.க சார்பில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட மேடையேறவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது புதுச்சேரியைச் சேர்த்து 40 தொகுதிகளை தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியிருந்தது.