Published:Updated:

காப்பாற்றப்பட்டதா கல்யாண் சிங் வாக்குறுதி? - அயோத்தியில் என்ன நடந்தது? - பாகம் 3

அயோத்தி ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி

பாபர் மசூதி ஒரே நாளில் திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. இடிக்கப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசிடமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய ஒரு இயக்கத்தின் பலவருடகால தந்திரத்தனம் ஒளிந்திருந்தது என்கிறது மத்திய அரசு பிப்ரவரி 1993ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை.

காப்பாற்றப்பட்டதா கல்யாண் சிங் வாக்குறுதி? - அயோத்தியில் என்ன நடந்தது? - பாகம் 3

பாபர் மசூதி ஒரே நாளில் திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. இடிக்கப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசிடமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய ஒரு இயக்கத்தின் பலவருடகால தந்திரத்தனம் ஒளிந்திருந்தது என்கிறது மத்திய அரசு பிப்ரவரி 1993ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை.

Published:Updated:
அயோத்தி ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதைவிட இந்தியாவின் அதிக நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதை பாரதிய ஜனதா கட்சி முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. காரணம் காஷ்மீரில் பிரிவு 370ஐ செயலிழக்கச் செய்வதைவிட, இந்தியை தேசிய மொழி ஆக்குவதைவிட, அகண்ட பாரதத்தை உருவாக்கத்தைவிட அயோத்தியில் ராமர் கோயில் என்பது பாரதிய ஜனதா கட்சியிலும் அதன் தாய் இயக்கமான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கிலும் வேரூன்றிய கொள்கையாக இருந்தது. இதற்கு 1991ல் உத்திரபிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையில் முதன்முதலில் அமையப்பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியே சாட்சி. ராமர் பிறந்த பூமி-பாபர் மசூதி ஒரே நாளில் திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. இடிக்கப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய அரசிடமே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய ஒரு இயக்கத்தின் பலவருடகால தந்திரத்தனம் ஒளிந்திருந்தது என்கிறது மத்திய அரசு பிப்ரவரி 1993ல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை.

அத்வானி மற்றும் ஜோஷியுடன் கல்யாண் சிங்
அத்வானி மற்றும் ஜோஷியுடன் கல்யாண் சிங்

ராமாயண புராணத்தில் அயோத்தியா இடம்பெறுவதால் அது புனிதத்தலமாகக் கருதப்படுகிறது. வருடம் 1528-ல் மிர் பாக்கி என்பவரால் மசூதியாக நிர்மாணம் செய்யப்பட்ட அந்த இடத்தில் கோயில் இருந்ததாகவும் அங்குதான் ராமர் பிறந்ததாகவும் சில பிரிவினர்கள் கருத்து கொண்டிருந்தார்கள் இத்தனை வருடப் பிரச்னைக்கும் காரணம் அதுதான் என்று பிரச்னையின் ஆதார வேரிலிருந்து விவரிக்கத் தொடங்குகிறது அரசின் நூற்று இருபது பக்க வெள்ளை அறிக்கை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசின் பார்வையில் கலவரம்:

பிரச்னைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது டிசம்பர் 1949ல் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை கொண்டு வைக்கப்பட்டதை அடுத்துதான். அதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த இடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 145-ன் கீழ் சேர்க்கப்பட்டது. சிவில் வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் மசூதிக்குள் இருக்கும் சிலையை நீக்கவோ அல்லது அங்கே வழிபாட்டை தடுக்கவோ தடை விதித்தன. அதனால் டிசம்பர் 1949 தொடங்கி வன்முறைச் சம்பவம் நடந்த 6 டிசம்பர் 1992 வரை அந்த இடம் மசூதியாகவே உபயோகிக்கப்படவில்லை என்று விவரிக்கிறது அரசு.

மசூதியாகவே செயல்படாத இடத்தை இடிக்கக் சங் பரிவாரங்கள் ஏன் முடிவுசெய்தன? அதற்காகக் கரசேவக்கள் எப்படித் தயார் செய்யப்பட்டார்கள்?

1989களில் அயோத்தியில் ராமர்கோயிலைக் கட்டுவதற்கான இடம் வலுபெறத் தொடங்கியது. அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சூழலில் அக்டோபர் மற்றும் நவம்பர் 1990-ல் சர்ச்சைக்குரிய இடத்தை ஆக்கிரமிப்பதற்காக நிகழ்ந்த கலவரம் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் சர்ச்சைக்குரிய இடத்துக்குச் சில சேதாரங்களையும் உண்டுபண்ணியது.

சந்திரசேகர் தொண்டர்களுடன்
சந்திரசேகர் தொண்டர்களுடன்

உடனடியாக அப்போதைய பிரதமர் சந்திரசேகர் தலையிட்டு டிசம்பர் 1990ல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்புக்கும் (VHP) அனைத்திந்திய பாபர் மசூதி செயற்பாட்டுக் கமிட்டிக்கும் (AIBMAC) இடையே பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். இருதரப்புக்கும் இடையே நிகழ்ந்த நான்கு பேச்சுவார்த்தைகளில் இருதரப்பு உரிமைகோரலுக்கான ஆதாரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. மூன்றாவது சந்திப்பில் வரலாற்றியல், தொல்லியல் மற்றும் சட்டபூர்வ முன்னெடுப்புகள் குறித்து நிபுணர்கள் கலந்தாலோசிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் தங்கள் தரப்பு ஆவணங்களை 24 பிப்ரவரி 1991ல் சமர்ப்பித்தது. அந்தச் சமயம் பாபர் மசூதி கமிட்டி எந்த ஒரு ஆவணங்களையும் சமர்பிக்கவில்லை என்றாலும் பிரதமர் சந்திரசேகர் பதவி விலகியதற்குப் பிறகான நாட்களில் 31 மே 1991ல் பாபர் மசூதி கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு வரலாற்று நிபுணர்கள் தங்கள் தரப்பு ஆவணங்களை அரசுக்குச் சமர்பித்தார்கள்.

முதல் பாரதிய ஜனதா அரசு!
கல்யாண் சிங் தலைமையிலான முதல் பாரதிய ஜனதா அரசு உத்திரபிரதேசத்தில் 1991 ஜூன் மாதத்தில் உருவானது.

இதற்கிடையேதான் கல்யாண் சிங் தலைமையிலான முதல் பாரதிய ஜனதா அரசு உத்திரபிரதேசத்தில் 1991 ஜூன் மாதத்தில் உருவானது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும் என அந்த அரசு உறுதியேற்றுக்கொண்டது. அதோடு மட்டுமல்லாமல் கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கியது. அந்த நிலங்களில் இருந்த கட்டுமானங்களை, அது வேறொரு கோயிலாகவே இருந்தாலும் இடித்தார்கள். கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கரசேவகர்கள் உதவியுடன் கோயிலைக் கட்டத் தொடங்குவதுதான் உத்திரபிரதேச அரசின் திட்டமாக இருந்தது. ஆனால் சட்டம் அதற்கு இடம் அளிக்காததாலும் விஷ்வ இந்து பரிஷத் அதே காலகட்டத்தில்தான் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட இருக்கும் கோயிலுக்கான மாதிரி வடிவமைப்பை வெளியிட்டதாலும் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

2 நவம்பர் 1991ல் கூடிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்
2 நவம்பர் 1991ல் கூடிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம்

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தை 2 நவம்பர் 1991ல் கூட்டியது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் கல்யாண் சிங் நான்கு முக்கிய வாக்குறுதிகளை மத்திய அரசுக்கு அளித்தார்.

1. சர்ச்சைக்குரிய இடம் குறித்து சுமூகத் தீர்வு காண அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உத்திரபிரதேச மாநில அரசுடையது.

3. இந்தச் சர்ச்சை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் அத்தனை உத்தரவுகளும் நடைமுறைபடுத்தப்படும்.

இடிக்கப்பட்ட இடத்தில்...
இடிக்கப்பட்ட இடத்தில்...

4. இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் எந்த உத்தரவுகளும் (நிலத்தை மூன்று தரப்புகளுக்குமிடையே பிரிப்பது) பாதிப்புக்கு உள்ளாக்கப்படமாட்டாது.

என்றார்.

இத்தனை வாக்குறுதிகளையும் மீறி, சர்ச்சைக்குரிய இடம் இடிக்கப்பட்டது எப்படி?

(தொடரும்..)

குறிப்புகள்:

White Paper On Ayodhya- Government of India, Feb 1983

Architecture of the Baburi Masjid of Ayodhya, R.Nath, Historical Research Documentation Programme, May 1995

Ascetic Games: Sadhus,Akharas and the Making of the Hindu Vote, Dhirendra K.Jha, Apr 2019

Ayodhya:The Dark night, Krishna Jha and Dhirendra K.Jha,Harper Collins, Dec 2012

Anatomy of Confrontation:Ayodhya and the Rise of Communal Politics in India, Sarvepalli Gopal, Zed Books Ltd, Mar 1992