Published:Updated:

மாவோயிஸ்ட், பயங்கரவாதிகள் தாக்குதலும்... நெருங்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களும்- ஒரு பார்வை!

மாவோயிஸ்ட், பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்திருக்கிறார்கள்.

Published:Updated:

மாவோயிஸ்ட், பயங்கரவாதிகள் தாக்குதலும்... நெருங்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களும்- ஒரு பார்வை!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஐந்து ராணுவத்தினர் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்திருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட், பயங்கரவாதிகள் தாக்குதல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில், தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 10 போலீஸார் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பூபேஷ் பாகல்
பூபேஷ் பாகல்

தலைநகர் ராய்பூரிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் தண்டேவாடா அமைந்திருக்கிறது. அங்கு, நேற்றைய தினம் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 200 போலீஸார் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். பிற்பகல் 1:30 மணியளவில் சமேலி என்ற கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

அதில், போலீஸாரின் வாகனம் வெடித்துச் சிதறியது. அதில் பயணம்செய்த 10 போலீஸார் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் காயமடைந்த போலீஸார்மீது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். சத்தீஸ்கரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் மிகப்பெரிய மாவோயிஸ்ட் தாக்குதல் இதுதான். அதாவது, சத்தீஸ்கர் மாநிலம், பிஜாபூரில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்

அதற்குப் பிறகு, நடந்திருக்கும் மிகப்பெரிய தாக்குதல் இது என்கிறார்கள் பாதுகாப்புப் படையினர். மேலும், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் செயல்பாடுகள் குறைந்திருப்பதாக மத்திய, மாநில அரசுகள் கூறியதற்குப் பிறகு நடந்திருக்கும் தாக்குதலும் இதுதான். இதே தண்டேவாடாவில், 2010-ம் ஆண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 76 பேர் மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதலுக்கு பலியானார்கள். அப்போது, சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2024-க்குள் மாவோயிஸ்ட்டுகள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் பேசியிருந்தார். சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “நாட்டில் மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 2009-ல் 2,258-ஆக இருந்தது. அது, 2021-ல் 509 ஆகக் குறைந்திருக்கிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்குள் இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் முழுவதுமாக ஒடுக்கப்படுவார்கள். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

இதேபோல, சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஜம்மு-காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. பூஞ்ச் மாவட்டத்தில் ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பூஞ்ச் மாவட்டம் இருக்கிறது. அங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்திருக்கின்றன. அங்கிருந்து தினமும் ராணுவ வீரர்கள் எல்லைப் பாதுகாப்புப் பணிக்குச் சென்றுவருவது வழக்கம். அந்த வகையில், ஏப்ரல் 21-ம் தேதி ராணுவ வாகனம் ஒன்று ரஜோரி - பூஞ்ச் ​​தேசிய நெடுஞ்சாலையில் சாங்கியோட் கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில், ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்து, வாகனத்திலிருந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.

காஷ்மீரில் ராணுவ வீரர்கள்
காஷ்மீரில் ராணுவ வீரர்கள்

அதனால், சாங்கோட்டில் அன்று நடைபெறவிருந்த ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முஸ்லிம்கள் ரத்துசெய்தனர். “நம்முடைய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் மரணமடைந்திருப்பதால், நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ரத்துசெய்கிறோம். மேலும், எங்கள் கிராமத்தில் ரமலான் கொண்டாட்டத்தையும் ரத்துசெய்கிறோம்” என்று சாங்கியோட் பஞ்சாயத்துத் தலைவர் முக்தியாஸ் கான் கூறினார்.

காஷ்மீரில் ஜி 20 மாநாடு நடைபெறவிருக்கிறது. ஜி 20-யின் ‘சுற்றுலா பணிக்குழு’ கூட்டம் மே 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. மேலும், ‘ஒய் 20 கலந்தாய்வு’ உச்சி மாநாடு மே 11-ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறவிருக்கிறது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகும். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் அதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவரும் சூழலில், ஜி 20 மாநாட்டைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பூஞ்ச்சில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரர்கள்
ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரர்கள்

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய சட்டமன்றங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில், ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. பாதுகாப்புப் படையினர்மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்களும் தொடர்கின்றன. ஜம்மு- காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், நிலைமை சீராகும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், அங்கு தேர்தல் நடத்துவது குறித்து உறுதியான தகவல் எதையும் மத்திய அரசு தெரிவிக்காமல் இருக்கிறது.