ம.தி.மு.க-விலிருந்து திமுக-வுக்கு வந்த டாக்டர் சரவணன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வாக இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வில் சீட் கிடைக்காத கோபத்தில், பா.ஜ.க பக்கம் தாவினார். அதன்படி, திருப்பரங்குன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்ட அவர், தோல்விடைந்தார். அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார்மீது மதுரை பா.ஜ.க-வினர் செருப்பை வீசனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை அன்று இரவே வீடு தேடிப்போய் சந்தித்து மன்னிப்புக் கேட்டதுடன், ‘பா.ஜ.க-விலிருந்தே விலகுவதாக’ அறிவித்தார் சரவணன். அதன்படி, சரவணன் விரைவிலேயே தி.மு.க-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காதவிதமாக, சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில், அவர் முன்னிலையில் அ.தி.மு.க இணைந்திருக்கிறார் சரவணன். தி.மு.க-வில் இணையக் காத்திருந்த சரவணனை, அ.தி.மு.க அள்ளியது எப்படி என்று அதன் வட்டாரத்தில் விசாரித்தோம்.

``அமைச்சர் பி.டி.ஆர் அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்தால், பா.ஜ.க-விலிருந்து வெளியேறிய சரவணனுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மூலமாக முதன்முறையாகத் தூது அனுப்பப்பட்டது. ஏனென்றால், ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஓ.பி.எஸ் இடத்துக்குப் பல முக்குலத்தோர் முகங்கள் எங்களுக்கு தேவைப்பட்டன. சரவணனும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை இழுக்க முயன்றோம். ஆனால், அதற்கு யோசித்துச் சொல்வதாக சரவணன் தரப்பிலிருந்து பதில் வந்தது. சரவணன், பி.டி.ஆர் தரப்புடன் நெருக்கமாக இருந்ததால், செல்லூர் ராஜூ அதன் பிறகு எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில்தான், அமைச்சர்கள் மூர்த்தி தரப்புக்கும், பி.டி.ஆர் தரப்புக்கும் பனிப்போர் தீவிரமானது. இதன் காரணமாக, சரவணனைக் கட்சிக்குள் கொண்டுவரும் பி.டி.ஆரின் முயற்சிக்கு, அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் ஆகியோர் தலைமையிடம் நேரடியாகவே பேசி, முட்டுக்கட்டை போட்டனர்.

இதையறிந்த ஆர்.பி.உதயகுமார் தன் தரப்பு மூலமாக சரவணனுக்கு மீண்டும் தூதுவிட்டார். இந்த முறை, ஓகே சொல்லிவிட்டார் சரவணன். அதன்படி, ஜனவரி இரண்டாவது வாரம், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சரவணன் கட்சியில் சேருவதாக இருந்தது. 'கட்சியில சேருவதை ஏன் தள்ளிப்போடணும்' என்ற எடப்பாடியின் அறிவுறுத்தலின்படி 4-ம் தேதி கட்சியில் இணைந்திருக்கிறார் சரவணன். அதன்படி, அ.தி.மு.க அமைப்பின் அணியில் ஏதாவது ஒரு மாநிலப் பொறுப்பு சரவணனுக்கு வழங்கப்படலாம்" என்றனர் விரிவாக.