Published:Updated:

அ.தி.மு.க அமைச்சர்கள் கிளப்பிய தலைநகர சர்ச்சை - பின்னணி நிலவரம் இதுதான்!

செல்லூர் ராஜூ - ஆர்.பி.உதயகுமார், மோடி
செல்லூர் ராஜூ - ஆர்.பி.உதயகுமார், மோடி

`மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்’ என அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் தெரிவித்த கருத்துகளால் தற்போது தகிக்கிறது திருச்சி.

`அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற சர்ச்சையை எழுப்பி எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் ஒருசேர குடைச்சலைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அந்தச் சூடு அடங்குவதற்குள், `இரண்டாவது தலைநகரம்’ என்ற விவகாரத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிளப்பினார். இது அ.தி.மு.க அமைச்சர்களுக்குள்ளேயே சர்ச்சையை உண்டாக்கியுள்ள நிலையில், 'கொரோனா ஊரடங்கில் மக்கள் பல பாதிப்புகளைச் சந்தித்துவரும் நிலையில் இக்கோரிக்கை இப்போது தேவையா?’ என்றும், `ஆளும்கட்சி அமைச்சர்களே எதிர்க்கட்சியினர்போல அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்களே...' என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க எம்.ஜி.ஆர் முடிவு செய்தார். அதன் தொடக்கமாக, திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் 1,000 ஏக்கரில் துணை நகரத்தை 1984-ல் தொடங்கிவைத்தார். மேலும், திருச்சியில் தங்கிப் பணியாற்றும் வகையில் உறையூரில் குடமுருட்டி ஆற்றங்கரையில் எம்.ஜி.ஆருக்கென்று தனி பங்களாவும் வாங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறவில்லை. இதற்கிடையே `தமிழகத்தை இரண்டு மாநிலமாகப் பிரிக்க வேண்டும்’ என்று டாக்டர் ராமதாஸ், டாக்டர் சேதுராமன் போன்றோர் தொடர்ந்து வலியுறுத்தி பின்பு ஓய்ந்துவிட்டனர்

இந்த நிலையில், `மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்’ என அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் தெரிவித்த கருத்துகளால் தற்போது தகிக்கிறது திருச்சி.

`திடீரென்று ஏன் இந்தக் கோரிக்கை...' என்று ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம். "தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை இது. ஆன்மிகம் மற்றும் பண்பாட்டுத் தலைநகரான மதுரை, தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அனைத்துத் தகுதிகளும்கொண்டது. அப்படி அறிவித்தால், மதுரையில் தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி சென்னைக்குச் செல்ல வேண்டியதில்லை. சென்னையில் மக்கள்தொகை பெருகிவிட்டதால் பலவித சிரமங்கள், போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்துள்ளன. அவற்றை மாற்ற மதுரையை 2-வது தலைநகரமாக மாற்றுவதே சரி. குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர் என இரண்டு தலைநகரங்கள் உள்ளன. ஆந்திராவிலும் இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன.

மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை, சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வேலை தொடங்கியுள்ளது. அதேபோல், தூத்துக்குடி துறைமுகம் மதுரையிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், தென்மாவட்டச் சாலைகளை இணைக்கும் கட்டமைப்பும் உள்ளது. தலைநகர் அமையத் தேவைப்படும் நிலம் புறநகர்ப் பகுதிகளில் தயாராக உள்ளது. தனிப்பட்ட மனிதராக இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. இது மக்களின் கோரிக்கை, காலத்தின் கட்டாயம். ஏற்கெனவே பல நல்ல திட்டங்களை மதுரைக்குக் கொடுத்திருக்கும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்'' என்றார்.

ஆர்.பி.  உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

இது பற்றி அமைச்சர் செல்லூர்ராஜூ, "சென்னை தலைநகராக இருந்தாலும் அரசியல் தலைநகராக மதுரை திகழ்கிறது. இது எம்.ஜி.ஆரின் விருப்பம். அதற்காகவே உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அரசியல் சார்ந்த முடிவுகளை ஜெயலலிதா மதுரையில்தான் எடுப்பார். மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட வேண்டும், திருச்சியை இரண்டாம் தலைநகராக மாற்ற எம்.ஜி.ஆர் நடவடிக்கைகள் எடுத்தபோது எதிர்ப்புகள் கிளம்பியதால், மதுரையை அப்போது அறிவித்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்தையே அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார், அதுவே எங்கள் விருப்பம்" என்றார்.

இது பற்றி தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், "அ.தி.மு.க-வில் தற்போது யார் முதல்வர் என்ற கோஷ்டிப்பூசலை மறைக்க, அ.தி.மு.க அமைச்சர்கள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். இது மக்களை திசைதிருப்பும் நாடகம். `நமக்கு நாமே’ சுற்றுப் பயணத்தின்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, `மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றுவோம்’ என்று தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தி.மு.க 2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்றுவார்'' என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலுவிடம் பேசினோம். "தமிழகத்தின் தலைநகரைத் திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு. அது இயலாமல் போய்விட்டது. ஆனாலும் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, `திருச்சியைத் தலைநகராக்க வேண்டும்’ என்று தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மதுரையை இரண்டாவது தலைநகரம் ஆக்கினால் தென் மாவட்டங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். அதுவே திருச்சி என்றால் மதுரை, சேலம், நாமக்கல், தஞ்சை உள்ளிட்ட அனைத்தும் ஊர்களும் சங்கமிக்கும் நகரம் இது. லாபத்தில் இயங்கக்கூடிய ஐந்து விமான நிலையங்களில் திருச்சியும் ஒன்று. தமிழகத்தின் மையப் பகுதி என்பதால் அனைவரும் வந்து செல்ல எளிதாக இருக்கும். இந்தச் சூழலில் மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்று அ.தி.மு.க அமைச்சர்கள் இருவர் கூறியுள்ளனர். அத்தோடு, இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் விருப்பம் என்றும் பொய் சொல்கிறார்கள். செல்லூர்ராஜூவிடம் மட்டும் எம்.ஜி.ஆர் ரகசியமாகச் சொல்லி இருப்பாரோ என்னவோ தெரியவில்லை. இத்தனை வருடங்கள் ஆட்சி செய்துவிட்டு திடுதிப்பென்று இவர்களுக்கு ஞானோதயம் பிறக்க என்ன காரணம்? இவர்களின் பேச்சைக் கேட்டு முதல்வர் முடிவு எடுக்கக் கூடாது. திருச்சியைத்தான் தலைநகர் ஆக்க வேண்டும்” என்றார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு-விடம் பேசினோம். "திருச்சிதான் அனைத்துக்கும் மையப்பகுதி. பல்வேறு சிறப்புகளைக்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் விருப்பத்துக்கு மாறாக அ.தி.மு.க-வினர் தற்போது பேசிவருகின்றனர். திருச்சியைத் தலைநகராக ஆக்குவதற்கு முழு ஆதரவு தருவதோடு, கட்சித் தலைமையிடம் இது குறித்துப் பேச இருக்கிறேன். கொரோனா வைரஸால் நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கிறார்கள்.அ.தி.மு.க-வில், `யார் அடுத்த முதல்வர்?’ என்ற விவாதம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருந்த நிலையில் இவ்விவகாரத்தை மடைமாற்றம் செய்வதற்காக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். `மதுரையில் அமைச்சர் குரல் கொடுத்திருக்கிறார்; நாம் குரல் கொடுக்கவில்லையென்றால் திருச்சி மக்கள் சும்மா விடமாட்டார்கள்’... என்று ஒப்புக்குச்சப்பாக வெல்லமண்டி நடராஜன் பேசியிருக்கிறார். இது, இவர்களது அரசியல் விளையாட்டுக்காக இரு மாவட்ட மக்களும் அடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதுபோல உள்ளது” என்றார் காட்டமாக.

`யார் இந்துக்களின் நண்பன்?' - அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க - பா.ஜ.க!

சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டத்தை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம். லாபத்தைத் தரக்கூடிய சர்வதேச விமான நிலையம் இங்கு அமைந்துள்ளது. ஆசியாவிலேயே தலைசிறந்த ரயில் போக்குவரத்து, மத்திய தொழிற்சாலைகள், எந்தக் காலத்திலும் குடிநீர்ப் பஞ்சமே நேரிடாத வகையில் ஓடும் அகண்ட காவிரி என எந்நேரமும் தண்ணீருக்கும் பஞ்சமில்லாத ஊர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும், வளங்களும் திருச்சியில் உள்ளன. தொலைநோக்குச் சிந்தனையோடுதான் `திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்’ என எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதை அப்போது கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனிடையே எம்.ஜி.ஆர் இறந்துவிட்டதால். அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இரண்டாவது தலைநகரம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வைக்கு எடுத்துச் சென்று எம்ஜிஆரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவோம்" என்றிருக்கிறார்.

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

மதுரை, திருச்சியை வைத்து திருவிளையாடல்களை அமைச்சர்கள் நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், தொடர்ந்துவரும் இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல், "தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் அமைப்பது குறித்தான கருத்துகள் அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்துகள். அது தமிழக அரசின் கருத்து அல்ல...!'' என்று கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அரசு. ஆனால், 'மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவோம்' என்று தி.மு.க தரப்பிலும் உறுதி கொடுக்கப்படுவதால், இந்தச் சர்ச்சை இனியும் தொடருமா அல்லது இப்படியே முற்றுப்பெறுமா என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு