Published:Updated:

கொரோனா நிதி: எம்.பி.க்கள் சம்பளம் - 36 பேருக்குத் தரலாம்; பிறர் விட்டுத்தரலாம்! #VikatanExclusive

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மக்களவையின் 543 எம்.பி-களில் 50 லட்சத்துக்குக் கீழ் சொத்து வைத்திருக்கும் எம்.பி-கள் 36 பேர். இவர்களுக்கு முழுமையான சம்பளம் அளிக்கலாம். மீதியுள்ளவர்கள் கொரோனா நிதிக்காகத் தங்கள் சம்பளத்தை விட்டுத் தர முடியும். எப்படி? அலசுகிறது கட்டுரை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்குவது, சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வது ஆகியவற்றுக்காக அதிக நிதி தேவைப்படுகிறது. இதற்கு நிதி திரட்டும் வகையில் எம்.பி-க்களின் சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பி-க்கள் ஆகியோரின் சம்பளத்தில் 30 சதவிகிதத்தை ஓராண்டுக்குக் குறைக்கப்போகிறார்கள்.

எம்.பி-கள்
எம்.பி-கள்

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள மொத்த எம்.பி-க்களில் 90 சதவிகிதத்தினர் மொத்த சம்பளத்தையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விட்டுத் தரலாம். அது எப்படி சாத்தியம்?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, மக்களவையில் நுழைந்த 542 எம்.பி-க்களில் 475 பேர் கோடீஸ்வரர்கள். இது மொத்த மக்களவையில் 88 சதவிகிதம். இவர்கள் சம்பளத்தைப் பெறாமல் விட்டுத் தர முடியும். மீதியுள்ள 12 சதவிகித எம்.பி-க்களுக்கு மட்டும் அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு முழுச் சம்பளத்தை அரசு அளிக்கலாம்.

Lok Sabha Millionaires
Lok Sabha Millionaires

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற எம்.பி-க்களில் 443 பேர் கோடீஸ்வரர்கள். இது 82 சதவிகிதம். அதற்கு முந்தைய தேர்தலான 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 315 பேர் கோடீஸ்வரர்கள். இதன் சதவிகிதம் 58. அதாவது, தேர்தலுக்குத் தேர்தல் கோடீஸ்வர எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது.

இப்போது இருக்கிற மக்களவை கோடீஸ்வர எம்.பி-க்களை கட்சி வாரியாகக் கணக்கிட்டால், சிவசேனா, பகுஜன் சமாஜ், தெலங்கானா ராஷ்டிய சமிதி, லோக் ஜன்சக்தி, சமாஜ்வாடி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, தெலுங்கு தேசம், அகில இந்திய மஜ்லிஸ் இத்தாத்துல் முஸ்லிமீன், அப்னா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் அனைத்து எம்.பி-க்களுமே கோடீஸ்வரர்கள்தான். நூறு சதவிகிதம் கோடீஸ்வரர்களைக் கொண்ட கட்சிகள் இவை.

Parties have 100% Millionaire Ministers
Parties have 100% Millionaire Ministers

இவர்களைத் தவிர 303 பி.ஜே.பி எம்.பி-க்களில் 265 பேர் கோடீஸ்வரர்கள். இதன் சதவிகிதம் 88. காங்கிரஸ் கட்சியின் 52 எம்.பி-க்களில் 43 பேர் கோடீஸ்வரர்கள். நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க எம்.பி-க்கள் 24 பேரில் 22 பேர் அதாவது, 96 சதவிகித்தினர் கோடீஸ்வரர்கள். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 86 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். அதாவது, 19 எம்.பி-க்கள். ஐக்கிய ஜனதா தளத்தில் 94 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள்.

இந்த எம்.பி-க்களின் கணக்கை மாநில வாரியாகக் கணக்கிட்டுப் பார்ப்போம். டாமன் டையூ, புதுச்சேரி, நாகலாந்து, தாத்ரா நகர்ஹவேலி, அந்தமான் நிகோபர், மிசோரம், சண்டிகர், கோவா, மணிப்பூர், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்து எம்.பி-க்களும் கோடீஸ்வரர்கள்தான்.

Lok Sabha Millionaires - Statewise
Lok Sabha Millionaires - Statewise

ஒடிசாவில்தான் கோடீஸ்வரர் எம்.பி-க்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அங்கே 67 சதவிகித எம்.பி-க்கள்தான் கோடீஸ்வரர்கள். அதற்கு அடுத்த இடத்தில் கேரளா மாநிலம் இருக்கிறது. அங்கே 70 சதவிகிதம். தமிழ்நாட்டில் 84 சதவிகித எம்.பி-க்கள் கோடீஸ்வரர்கள்.

எத்தனை எம்.பி-க்கள் தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க முடியும் என்பதற்கு இன்னொரு கணக்கும் இருக்கிறது.

ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்திருக்கும் எம்.பி-க்கள் எண்ணிக்கை 266. இரண்டு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை சொத்து வைத்திருப்பவர்கள் 125 பேர். 50 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையில் சொத்து வைத்திருப்பவர்கள் 112 பேர். 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் சொத்து வைத்திருப்பவர்கள் 27 பேர். 10 லட்சத்துக்கும் கீழே சொத்து வைத்திருப்பவர்கள் 9 பேர்.

யார் யாருக்கு எவ்வளவு சொத்து
யார் யாருக்கு எவ்வளவு சொத்து

50 லட்சத்துக்குக் கீழ் சொத்து வைத்திருக்கும் எம்.பி-க்களை மட்டும் எடுத்துக்கொண்டால் 36 எம்.பி-க்கள் வருகிறார்கள். இந்த 36 பேருக்கு முழுமையான சம்பளம் அளிக்கலாம். மீதியுள்ளவர்கள், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தங்களுடைய சம்பளத்தை விட்டுத் தரலாம்.

மக்களவை எம்.பி-க்களில் அதிக சொத்து வைத்திருப்பவர்களில் முதல் இடத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி நகுல்நாத் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 660 கோடி ரூபாய். இரண்டாவது இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 417 கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சுரேஷ் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 338 கோடி ரூபாய்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

குறைந்த சொத்துக் கொண்டவர்களில் கடைசி இடத்தில் இருப்பவர் ஆந்திராவைச் சேர்ந்த காட்டேட்டி மாதவி. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு 1.41 லட்சம் ரூபாய். இவருக்கு அடுத்த இடத்தில் ஒடிசாவைச் சேர்ந்த சந்திரானி முரிமு உள்ளார். பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு 3.40 லட்சம் ரூபாய். மூன்றாவது இடத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த மஹந்த் பலக் நாத் இருக்கிறார். பி.ஜே.பி எம்.பி-யான இவரின் சொத்து மதிப்பு 3.52 லட்சம் ரூபாய்.

எம்.பி-க்களின் சம்பளத்தில் 30 சதவிகிதக் குறைப்பு ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கை வைத்திருக்கிறது மத்திய அரசு. தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதனையும் இரண்டு ஆண்டுகளாக (2020-2021 மற்றும் 2021-2022) நிறுத்திவிட்டார்கள். எம்.பி-க்களின் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். தொகுதி படி 70,000 ரூபாய். இதுதவிர பிற படிகளும் வழங்கப்படுகின்றன. 30 சதவிகித சம்பளக் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகள், தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றன.

எம்.பி-க்கள்
எம்.பி-க்கள்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்படுவதன் மூலம் கிடைக்கும் சுமார் 7,880 கோடி ரூபாய் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குச் செலவழிக்கப்படும்.

டிவி விவாதத்தில் நடந்த உரையாடல் ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது.

பத்திரிகையாளர் பா.கிருஷ்ணன்: ''நம்ம வீட்ல ஒரு கஷ்டம் என்றால் வீட்டில் இருக்கும் உண்டியலை உடைப்போம் இல்லையா? அந்த மாதிரிதான் எம்.பி-க்களின் நிதியை கொரோனோவுக்கு எடுத்துக்கொள்வதும்...''

தி.மு.க செய்தித் தொடர்பாளர் மனுஷ்ய புத்திரன்: ''கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரிசர்வ் பேங்க் என்ற மிகப் பெரிய உண்டியலை உடைத்து 1,70,000 கோடியை எடுத்து, கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்தீர்களே... அந்த மாதிரி எதையாவது உடைங்க... இருப்பதிலேயே இவ்வளவு சின்ன உண்டியலை ஏன் கை வைக்கிறீங்க?''

அடுத்த கட்டுரைக்கு