Published:Updated:

`குடிமக்கள் வரையறையைப் புதிதாகத் திணிக்கிறது மத்திய அரசு!'- சேலத்தில் பிரகாஷ் காரத் காட்டம்

``மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்கு முதன் முதலில் குரல் கொடுத்த சாவார்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பி.ஜே.பி துடிக்கிறது.''

பிரகாஷ் காரத்
பிரகாஷ் காரத் ( எம்.விஜயகுமார் )

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழா, காரல் மார்க்ஸ் சிலைத் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், தமிழக மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கார்ல்மார்க்ஸ் சிலை
கார்ல்மார்க்ஸ் சிலை
எம்.விஜயகுமார்

காரல் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரகாஷ் காரத், ``விஞ்ஞான ரீதியாகச் சமுதாயத்தை ஆய்வு செய்த காரல் மார்க்ஸ் சிலை இங்கு திறந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்திய சுதந்திரத்திற்காக ஆர்.எஸ்.எஸ் போராடவில்லை. அவர்களை ஆங்கிலேய அரசு கைது செய்யவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் கட்சிகள் சுதந்திரத்திற்காகப் போராடி கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தகர்த்து எறியும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஆட்சி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மாநில அந்தஸ்து பறித்து யூனியனாக மாற்றி இருக்கிறது.

கடந்த 2 மாதமாக அங்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக நடக்க முடியவில்லை. தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு தயங்காது. வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்
எம். விஜயகுமார்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகள் வாழ்ந்தால் குரியுரிமை வழங்குவதாகவும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் குடியுரிமை வழங்க முடியாது எனவும் குடிமக்கள் வரையறையைப் புதிதாகத் திணிக்கிறார்கள். மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்கு முதன் முதலில் குரல் கொடுத்த சாவார்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பி.ஜே.பி துடிக்கிறது.

ஆட்டோமொபைல் தொழில் முற்றிலும் வீழ்ச்சியடைந்துவிட்டது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் தேக்க நிலை காரணமாக வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. வரலாறு காணாத வகையில் தொழிலாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதி கேட்டு ஜனநாயக முறையில் போராடுவோம்'' என்றார்.