Published:Updated:

``தேர்தல் சூழ்ச்சிகளால்தான் பாஜக பல இடங்களில் வென்று வருகிறது” - டாக்டர் செல்லகுமார் எம்.பி

டாக்டர் செல்லகுமார் எம்.பி

``இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க-வை நேரடியாக எதிர்ப்பதற்கு பதில், மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு காவடி தூக்குபவர்களாக இருக்கின்றன.” - டாக்டர் செல்லகுமார் எம்.பி

``தேர்தல் சூழ்ச்சிகளால்தான் பாஜக பல இடங்களில் வென்று வருகிறது” - டாக்டர் செல்லகுமார் எம்.பி

``இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க-வை நேரடியாக எதிர்ப்பதற்கு பதில், மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு காவடி தூக்குபவர்களாக இருக்கின்றன.” - டாக்டர் செல்லகுமார் எம்.பி

Published:Updated:
டாக்டர் செல்லகுமார் எம்.பி

50 மணி நேரத்துக்கு மேல் ராகுலிடம் விசாரணை, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பம், 'காங்கிரஸ் இல்லா இந்தியா’ என்கிற செயல்திட்டத்தை முன்னிறுத்தி பா.ஜ.க செய்துவரும் அரசியல்... போன்ற சம்பவங்களை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் டாக்டர் செல்லகுமார் எம்.பி-யைத் தொடர்புகொண்டோம். அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர் தொலைபேசியில் நம் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

``நேஷனல் ஹெரால்டு வழக்கில் எதற்காக இத்தனை நாள், இத்தனை மணி நேர விசாரணை?”

``அரசியல் பழிவாங்கல் அல்லாமல் வேரென்ன... அமலாக்கத்துறை விசாரணை என்பது தவறான பணப் பரிவர்த்தனை, பண மோசடி செய்திருந்தால் நடத்தப்படும். ஆனால், அப்படி வழக்குக்கான எந்த முகாந்திரமும் இதில் இல்லையே!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``அப்படியென்றால், எதற்காக இந்த அழுத்தம்?”

``இந்தியாவில் ஓர் அரசியல் தலைவர் நேருக்கு நேர் உறுதியாக நின்று பா.ஜ.க-வுடன் சண்டை செய்கிறாரென்றால் அது ராகுல் காந்தி மட்டும்தான். எனவே அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்றே, `ராகுல் காந்தி ரூ.2,000 கோடிக்குச் சொத்தை மாற்றிவிட்டார்’ என்கிற தவறான செய்தியைப் பரப்பி ஆதாயம் அடைகிறார்கள். இதன் உண்மைத்தன்மை வெளிவரப் பல வருடங்கள் ஆகிவிடும். அதற்குள் 2024 தேர்தலும் முடிந்துவிடும். இதுதான் பா.ஜ.க-வின் சதித் திட்டம்.”

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

`` `தலைவருக்கு என்று வரும்போது சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸார், மக்கள் பிரச்னைக்கு இதுபோல் போராடினார்களா?’ என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே...”

``பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தப்பட்டபோது எந்தக் கட்சி போராட்டம் நடத்தியது... விவசாயிகளுக்கு எதிரான சட்டம், சிஏஏ, என்.ஐ.ஏ போன்றவை வந்தபோது முதன்முதலில் எச்சரிக்கை கொடுத்த அரசியல்வாதி யார்... ராகுல் காந்தி பஞ்சாப்பிலிருந்து டிராக்டரில் கிளம்பிய பிறகுதான் விவசாயிகளே உணர்ந்து விழிப்படைந்தார்கள். எப்போதுமே காங்கிரஸ் கட்சி, மக்கள் பிரச்னைகளைப் பேசிவருகிறது.”

``ஆனால் கடந்த பல தேர்தல்களிலும் காங்கிரஸ் தொடர் தோல்வியைத்தானே சந்தித்துக்கொண்டிருக்கிறது?”

``இதற்குச் சின்ன உதாரணம் சொல்லலாம். நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமென எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில் 77 இடங்களைத்தான் பெற முடிந்தது. பா.ஜ.க 99 இடங்களைப் பிடித்தது. இவற்றில் 16 தொகுதிகளில் 600 ஓட்டுக்கும் குறைவான வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றது. அதில் தோல்கா என்ற தொகுதியில் பா.ஜ.க-வின் பூபேந்திரசிங் 327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர் அந்த மாநிலத்தின் கல்வி அமைச்சராக இருந்தார். இது குறித்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பக்கம் தீர்ப்பு வருகிறது. ஆனால் வழக்கில் தோற்ற பூபேந்திர சிங் மேல்முறையீட்டுக்குச் செல்கிறார். வழக்கு இன்றைக்கும் நிலுவையில்தான் இருக்கிறது. இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியே முடியப்போகிறது. இது போன்ற பல தேர்தல் சூழ்ச்சிகளால்தான் பா.ஜ.க பல இடங்களில் வென்றுவருகிறது!”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எதிர்க்கட்சி முகாமில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பில் ஏன் குழப்பம்?”

``இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க-வை நேரடியாக எதிர்ப்பதற்கு பதில், மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு காவடி தூக்குபவையாக இருக்கின்றன. இந்த சூழ்ச்சிகளுக்கு இடையில்தான் காங்கிரஸ் கட்சி போராடிக்கொண்டிருக்கிறது. இது போன்ற காரணங்களால்தான் பல குழப்பங்களும் ஏற்படுகின்றன.”

ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்
ஸ்டாலின், மம்தா, ராகுல் - எதிர்க்கட்சிகள்

``அப்படி பொத்தாம் பொதுவாகக் கூற முடியுமா?”

``ஆதாரத்தோடுதான் கூறுகிறேன். டெல்லியில் கொடிகட்டிப் பறந்த காங்கிரஸை நேரடியாக வீழ்த்த முடியாது என்று தெரிந்துகொண்ட பா.ஜ.க., அரவிந்த் கெஜ்ரிவால் என்கிற நபரைச் சூழ்ச்சிவலை விரித்து, காங்கிரஸுக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒடிசாவில் கடந்த 22 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அவர்கள், ‘நாங்கள் பா.ஜ.க-வுக்கு எதிரானவர்கள்’ என்பார்கள். பா.ஜ.க., பிஜு ஜனதா, காங்கிரஸ் கட்சிகளிடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது’ என்று சொல்வார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் பா.ஜ.க, பிஜு ஜனதா தளம் இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக இந்த ஒரு நாடகத்தை நடத்துவார்கள். இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பிஜு ஜனதா பா.ஜ.க-வுக்கு ஆதரவு தருவார்கள். இல்லையென்றால் தேர்தலைப் புறக்கணித்து மறைமுக ஆதரவு கொடுப்பார்கள்.”

டெல்லி அரசுப்பள்ளியைப் பார்வையிட்ட ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி அரசுப்பள்ளியைப் பார்வையிட்ட ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால்

“நீங்கள் குறிப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால் உங்கள் கூட்டணிக் கட்சிகளில் இருப்பவர்களோடு நெருக்கமாக இருக்கிறாரே...”

``அவரோடு யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், அவர் கொடுக்கிற, காட்டுகிற படங்கள் அதைப் போய் பார்க்கிறவர்கள்... யார் அந்தப் படத்துக்காக அனைத்தையும் கட்டமைத்து, அதற்கு யார் பெயர் சூட்டி விழா எடுத்துக்கொண்டார்கள் என்கிற உண்மையைத் தெரிந்துகொண்டாலே போதும். நான் எந்த அரசியல் இயக்கத்துக்கும் ஆலோசனை சொல்ல முடியாது. ஆனால், அவரவர் விரிவாக ஆலோசித்து தீர்க்கமான முடிவில்தான் இருப்பார்கள். எனவே எந்த தீர்க்கமான முடிவோடு அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.”

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

``ஓர் எதிர்க்கட்சியாக மக்கள் உங்களை ஏற்க இன்னும் உழைக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?”

``அதற்கான அனைத்து முயற்சிகளையும் கட்சியின் மூத்த தலைவர்கள் மேற்கொண்டுதான்வருகிறார்கள். இன்னொன்று... இந்தியாவில் இருக்கிற பல்வேறு அரசியல் இயக்கங்கள், இன்றைய காலகட்டத்தில் பா.ஜ.க-வை எதிர்த்திருந்தாலும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பா.ஜ.க-வோடு இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். தேவை என்று வந்தால் அந்த அரசியல் இயக்கங்களை மீண்டும் தன் பக்கம் இழுத்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை பா.ஜ.க மனதில் இருக்கிறது. ஆனால், எந்தக் காலகட்டத்திலும் காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டும்தான் இந்த மதவாத, பாசிச சக்தியை எதிர்த்து நிற்கும். காங்கிரஸ் பேரியக்கம்தான் இந்தியாவின் அடிநாதமாக இருக்கக்கூடிய மதச்சார்பற்ற தன்மையைக் காக்கப் பாடுபடும் ஒரே இயக்கம். இதைப் பெரும்பான்மையான சமூக மக்களிடம் நிச்சயம் கொண்டுசெல்வோம்!”