Published:Updated:

நாடாளுமன்றத்தில் ‘அமளி’ ஆயுதத்தை ஆளும் பாஜக கையிலெடுத்திருப்பது சரிதானா?!

நாடாளுமன்றம்

பெரும்பாலும், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராடுவதாலும் அமளியில் ஈடுபடுவதாலும்தான் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படும். ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் ஆளும் கட்சியான பா.ஜ.க-வின் எம்.பி-க்களே அமளியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

Published:Updated:

நாடாளுமன்றத்தில் ‘அமளி’ ஆயுதத்தை ஆளும் பாஜக கையிலெடுத்திருப்பது சரிதானா?!

பெரும்பாலும், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராடுவதாலும் அமளியில் ஈடுபடுவதாலும்தான் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படும். ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் ஆளும் கட்சியான பா.ஜ.க-வின் எம்.பி-க்களே அமளியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

நாடாளுமன்றம்

பிரதமர் மோடி பற்றியும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் பற்றியும் விமர்சனம் செய்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் பேசியதற்காக, அவரை பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள். லண்டன் பேச்சுக்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி-க்களின் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகிறார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த விவகாரத்தில், ஆரம்பம் முதலே ராகுல் காந்தியை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும். அவர் என்ன நாடாளுமன்றத்தைவிட மேலானவரா?” என்று பேசியிருக்கிறார். வெளிநாட்டில் போய் இந்திய ஜனநாயகத்தை எப்படி விமர்சிக்கலாம் என்று மத்திய அமைச்சர்கள் ஆவேசப்படுகிறார்கள். ராகுல் காந்தியோ, ‘இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றுதானே பேசினேன்’ என்கிறார். இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி சொன்னதை, இந்தியாவின் ஜனநாயகத்தை ராகுல் விமர்சித்துவிட்டார் என்று பா.ஜ.க-வினர் திசைத்திருப்புகிறார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்று நாடாளுமன்றம் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதற்கு பா.ஜ.க-வுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது என்பது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு, ஜனவரி 31 அன்று தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அது குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், எதற்கும் அரசுத் தரப்பு அசைந்துகொடுக்கவில்லை. அதானி குழுமத்தின் மோசடிகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேசவிடக் கூடாது என்பதில் ஆளும் தரப்பு உறுதியாகவே இருந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய பிறகு, இப்போதாவது அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும், கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்தின. ஆனால், ஆளும் தரப்பின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

இதனிடையே தான் `ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்துவிட்டார்... அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்று பா.ஜ.க-வினர் அமளியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதானி விவகாரத்தைத் திசைத் திருப்புவதற்காகவே இவ்வாறு அவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், 16 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அந்தப் பேரணியைத் தடுப்பதற்காக, ஆளும் தரப்பு பல இடையூறுகளைச் செய்தது.

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பா.ஜ.க விடாப்பிடியாக இருப்பதால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக, ஏதோவொரு பிரச்னைக்காக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தால், எதிர்க் கட்சிகளின் தலைவர்களை சபாநாயகர் அழைத்துப் பேசுவார். பிரச்னை தீர்ந்துவிடும். அதன் பிறகு, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறும். ஆனால், இப்போது ஆளும் கட்சி எம்.பி-க்களே அமளியில் ஈடுபட்டுவருகிறார்கள். ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே கோரிக்கை. ஆனால், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாகத் தெரிவித்துவிட்டது. அதன் பிறகும், பா.ஜ.க எம்.பி-க்கள் அமைதியாகவில்லை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பா.ஜ.க எம்.பி-க்கள் அமளியில் ஈடுபடுவதை நிறுத்தினால் பிரச்னை ஓரளவுக்கு தீரும். அடுத்ததாக, அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற குறித்த கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகளும் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதை விட்டுவிட்டு, ஆளும் கட்சியின் எம்.பி-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க-தான் காரணம்.

அரசு தொலைக்காட்சியான ‘சன்சத்’, நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புகிறது. சன்சத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மார்ச் 17-ம் தேதி சரியாக இல்லை. ஒலி இல்லாமல் அவை நடவடிக்கைகள் அதில் ஒளிபரப்பப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறுதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘எதிர்க் கட்சி எம்.பி-க்களின் பேச்சை மக்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே ஒலியில்லாமல் ஒளிபரப்பப்பட்டது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அமளி என்ற ஆயுதத்தை ஆளும் கட்சியே கையிலெடுத்தால், யார் தான் பிரச்னையைத் தீர்ப்பார்கள்?