Published:Updated:

தாமரைத் தலைவன்!

ஜே.பி.நட்டா
பிரீமியம் ஸ்டோரி
ஜே.பி.நட்டா

அமித் ஷா வழியில் நட்டா!

தாமரைத் தலைவன்!

அமித் ஷா வழியில் நட்டா!

Published:Updated:
ஜே.பி.நட்டா
பிரீமியம் ஸ்டோரி
ஜே.பி.நட்டா

‘ஒரு நபர், ஒரு பதவி’ என்ற பா.ஜ.க-வின் முக்கிய நெறிமுறையின் அடிப்படையில், தேசத்தை ஆளுங்கட்சியின் தலைவர் பதவியில் அரியணை ஏறியிருக்கிறார் `ஜெகத் பிரகாஷ் நட்டா’ என்கிற ஜே.பி.நட்டா. சந்தேகமே வேண்டியதில்லை...இவரும் ஆர்.எஸ்.எஸ்ஸால் அடையாளம் காட்டப்பட்ட நபர்தான். கூடுதலாகக் கிடைத்த பலம், அமித் ஷாவின் ஆசியும் ஆதரவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்கிருந்து வந்தார் நட்டா?

பா.ஜ.க தலைவராவதற்கு முதல் தகுதியே `நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் நம்பிக்கைக்குரிய நபராக இருக்க வேண்டும்’ என்பதுதான். அந்த வகையில் ஆரம்பகாலம் முதலே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நம்பிக்கையை அமோகமாகப் பெற்றிருப்பவர் நட்டா. பூர்வீகம் இமாச்சலப் பிரதேம். ஆனால், படித்து வளர்ந்ததெல்லாம் பீகாரில். இவருடைய தந்தை லால் நட்டா, பீகார் மாநிலப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பதவிவகித்தவர்.

மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா
மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா

பீகாரில் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். சில நாள்களிலேயே அதில் முக்கியப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பீகாரிலிருந்த அவருடைய குடும்பம் மீண்டும் இமாச்சலப் பிரேதேசத்துக்குக் குடிபெயர்ந்திருக் கிறது. அங்கேதான் சட்டம் படித்தார் நட்டா. சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே ஏ.பி.வி.பி-யின் மாநிலத் தலைவராகிவிட்டார். அதன் பிறகுதான் பா.ஜ.க தலைவர்களுடன் நட்டாவுக்கு தொடர்பும் நட்பும் ஏற்பட்டது. 1993-ம் ஆண்டு, இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினரானார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படிப்படியாக உயர்ந்து இமாச்சலப் பிரதேச பா.ஜ.க-வின் முக்கிய முகமாக மாறினார் நட்டா. இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் மேலிடப் பொறுப்பாளராக இருந்தவர் நரேந்திர மோடி. அங்கேதான் நட்டாவுக்கும் மோடிக்கும் இடையே நட்பு தொடங்கியது. அந்த நட்புதான் இப்போது அவரை பா.ஜ.க-வின் தலைவராக் கியிருக்கிறது.

அமித் ஷா வழியில் நட்டா!

அமித் ஷாவுக்கும் நட்டாவுக்கும் இடையில் பல விஷயங்களில் ஒற்றுமை உண்டு. மோடியால் தலைவர் பதவிக்குக் கொண்டுவரப்பட்டவர் அமித் ஷா; அதே மோடிதான் இப்போது நட்டாவுக்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அங்கு பெற்ற அசுர வளர்ச்சிக்குப் பிறகுதான் தலைவர் பதவியில் அமரவைக்கப்பட்டார் அமித் ஷா. அதேபோல் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரேதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் நட்டா. அந்த மாநிலத்தில் மீண்டும் பி.ஜே.பி பெற்ற அசுர வெற்றியே அடுத்த முறையும் மோடியை ஆட்சிபீடத்தில் அமர்த்தியது. அன்று அமித் ஷாவுக்கு அளிக்கப்பட்ட தலைவர் பதவி இப்போது நட்டாவுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஏற்கெனவே மோடியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து ஆட்சிரீதியான அனுபவத்திலும் நட்டா கரைகண்டிருக் கிறார் என்று மெச்சுகிறார்கள் அவர் நண்பர்கள்.

நட்டா முன் உள்ள சவால்கள்!

பா.ஜ.க-வின் தேசியத் தலைவராக நட்டா தேர்வு செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் தேசியத் தலைமையிட நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி நம்மிடம், ‘‘ஜே.பி.நட்டாவின் மிகப்பெரிய பலமே அவர் தொண்டர் களுடன் காட்டும் நெருக்கம்தான். தலைவரான பிறகு காலை மாலை இரண்டு வேளைகளிலும் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்திக்கிறார். தொண்டர்கள் சொல்லும் குறைகளைச் சரிசெய்வதற்கான சாத்தியங்களையும் உடனுக்குடன் ஆய்வு செய்கிறார்.

அவர் தலைவரான பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், டெல்லி சட்டமன்றத் தேர்தல் களத்தில் இப்போது முனைப்பு காட்டிவருகிறார். அடுத்த ஆண்டில் மேற்கு வங்காளத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற இலக்கோடு தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். கட்சிக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து இரண்டையும் வழிநடத்திச் செல்வதில் நட்டாவின் பங்கு மகத்தானது” என்றார்.

ஜே.பி.நட்டா, அமித் ஷா
ஜே.பி.நட்டா, அமித் ஷா

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் டெல்லி, பீகார் தேர்தல்களும், அடுத்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களும் நட்டாவின் தலைமைக்கு முன்பாக இருக்கும் சவால்கள். அமித் ஷாவைப்போல நட்டாவால் சுதந்திரமான முடிவை எடுக்க முடியுமா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. அமித் ஷா அளவுக்கு நட்டாவிடம் மோடிக்கு நெருக்கமோ, நம்பிக்கையோ கிடையாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நட்டாவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என்பதுதானே முக்கியம்!

`கட்சியை ஒருங்கிணைப்பதில் நட்டா கெட்டிக்காரர்’ என்கிறார்கள். ஏற்கெனவே தேசியப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தபோது உட்கட்சிப் பூசல்களை சத்தமில்லாமல் சரிசெய்த அனுபவம் நட்டாவுக்கு இருக்கிறது. அதைத் தாண்டி ஆட்சியிலும் இவர் பங்கேற்றிருந்ததால், ஆட்சியாளர்களையும் அரவணைத்துச் சென்று அதிலும் வென்று காட்டியிருக்கிறார் இந்த இமாச்சலக்காரர். கூட்டணிக் கட்சிகள் தூக்கியிருக்கும் போர்க்கொடிதான் பா.ஜ.க-வுக்கான சமீபத்திய சரிவு. இதற்கு அமித் ஷாவின் அதிரடி முடிவுகளும் ஒரு காரணம் என்ற பேச்சு உள்ளது. நட்டாவைப் பொறுத்தவரை கட்டளையிடும் தொனியிலான தலைவரில்லை என்பதோடு, எளிய அணுகுமுறை உள்ளவர் என்பதால் இந்தப் பிரச்னை இனிமேல் எழாது என்று நம்புகிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.

நட்டா பதவியேற்பு விழாவில் பேசிய மோடி “ஆளுங்கட்சியாக ஒரு கட்சி இருக்கும்போது அந்தக் கட்சியின் தலைவராக இருப்பது கடினம். காரணம், கட்சியை இயக்கத்தோடு வைத்திருக்கும் வாய்ப்பு குறைவு. எதிர்க்கட்சிகளுக்கு அந்த வாய்ப்பு அதிகம். ஆனால், நட்டா ஆளுங்கட்சியாக இருக்கும் நம் கட்சியைத் துடிப்போடு வைத்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்றார்.

ஆம்! மோடிக்கு நன்றாகவே தெரியும்... தன் கண்ணசைவுக்கும், அமித் ஷாவின் கையசைப்புக்கும் கட்டுப்பட்டுதான் இந்தத் தலைமை இயங்கும் என்பது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism