Published:Updated:

`பல கோடிகளில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் பயனற்றுக் கிடக்கும் அவலம்'!-நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?!

பாண்டி பஜார் வாகன நிறுத்தம்

பல கோடி மதிப்பில் சென்னை பாண்டி பஜார் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வாகன நிறுத்தம் பயன்படாமலிருக்கிறது.

`பல கோடிகளில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் பயனற்றுக் கிடக்கும் அவலம்'!-நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?!

பல கோடி மதிப்பில் சென்னை பாண்டி பஜார் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வாகன நிறுத்தம் பயன்படாமலிருக்கிறது.

Published:Updated:
பாண்டி பஜார் வாகன நிறுத்தம்

தமிழகத்திலுள்ள முக்கிய வணிகப் பகுதிகளில், சென்னை தியாகராய நகரிலுள்ள பாண்டி பஜார் பகுதியும் ஒன்று. முக்கிய வணிகப் பகுதி என்பதால் இந்தப் பகுதியில் எப்போதுமே வாகன நெரிசல் அதிகரித்தே காணப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பாண்டி பஜார் பகுதியை உலகத்தரத்தில் மாற்றுவதற்கானப் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கப்பட்டது. பாண்டி பஜார் மட்டுமின்றி அண்ணா நகர், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அடையார், வேளச்சேரி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பாண்டி பஜார் நடைபாதை
பாண்டி பஜார் நடைபாதை

முதற்கட்டமாக தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.39.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதையும், ரூ.19.11 கோடியில் 23 சீர்மிகு சாலைகளையும் மக்களின் பயன்பாட்டுக்கு அன்றைய முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்தச் சாலையின் இருபுறமும் 10 மீட்டர் அளவுக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இது, மின்சாரம், மழைநீர் வடிகால், தொலைபேசி இணைப்புக்கான பாதை, குடிநீர்க் குழாய்கள் மற்றும் புதைசாக்கடைக் குழாய்கள் என்று ஒரு முழுமையான சாலையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாலைகளின் இருபுறமும் எல்.இ.டி விளக்குகளால் ஆன அலங்கார விளக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. சுவர்களில் வண்ண ஓவியம், சாலை முழுவதும் சிசிடிவி கேமரா, அமர்வதற்கு 100-க்கும் மேற்பட்ட இருக்கைகள், வாகனங்கள் நிறுத்த பிரத்யேகமான இடங்கள், சிறுவர்கள் விளையாடும் வசதி, கழிவறைகள், இலவச 'வைஃபை' வசதி என்று பல்வேறு உயர்தர தொழில்நுட்பம் கொண்ட நவீன வசதிகளைக்கொண்ட சாலையாக இது அமையப்பெற்றது. கூட்ட நெரிசல் இன்றி மக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வண்ணம் உலகத்தரத்தில் இந்த சாலை மிக அழகமாக வடிவமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம், பாண்டி பஜார்
பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம், பாண்டி பஜார்

இந்த பாண்டிபஜார் சாலையில் 14 இடங்களில் கார் மற்றும் பைக் நிறுத்த வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அதிக வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. வாகன நெரிசலைக் குறைக்கவும், சாலைகளில் போக்குவரத்தைச் சரிசெய்யவும் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை, மெரினா, பெசன்ட் நகர், அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சென்னையிலுள்ள 30 இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதற்கட்டமாக தியாகராய நகர் பாண்டி பஜார் சாலையில் பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மல்டி லெவல் பார்க்கிங் வளாகம் மொத்தம் ஏழு தளங்களைக்கொண்டது. இரண்டு கீழ்த் தளங்களையும்கொண்டது. 1,488 சதுர மீட்டர் பரப்பளவில் 41 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கிறது. தளத்துக்கு 37 கார்கள் வீதம் ஆறு தளங்களில் மொத்தம் 222 கார்களை நிறுத்தலாம். இரண்டு கீழ்த் தளம் மற்றும் ஏழாவது தளம் என்று 513 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். இரு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம், பாண்டி பஜார்
பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம், பாண்டி பஜார்

பாண்டி பஜார் சாலைகளில் வாகன நெருக்கம் அதிகம் இருப்பதால்தான் இந்த மல்டி லெவல் பார்க்கிங் வளாகம் கொண்டுவரப்பட்டது. இருந்தபோதிலும், இந்தச் சாலையில் எப்போதுமே வாகன நெரிசல் இருந்துகொண்டேதான் இருந்தது. அங்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கு சென்று பார்த்தபோது அந்த மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தினுள்ளே செல்லும் இரண்டு பாதைகளும் மூடப்பட்டிருந்தன. ஒருவேளை உள்ளே கார்கள் நிறைந்திருக்கும் என்று அங்கு பணிபுரிபவர்களிடம் கேட்டபோது, ஒருவர் லிஃப்ட் வேலை செய்யவில்லை என்றார். அவர் சொல்லும்போதே லிஃப்ட் வழியாக ஒரு கார் கீழே வந்திறங்கியது. இன்னொருவர், `நேரம் முடிந்துவிட்டது. அதனால் மூடிவிட்டோம்’ என்றார். அப்போது மணி மாலை 7:30 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு பாண்டி பஜார் சாலைகளில் நடக்கத் தொடங்கினோம். சாலையின் இரண்டு ஓரங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை நம்மால் பார்க்க முடிந்தது. சாலைகளின் ஓரங்களைத் தாண்டி, சாலைகளிலேயே நீண்ட வரிசையில் வானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. `நோ பார்க்கிங்’ என்று பல இடங்களில் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த அத்தனை பலகைகளின் எல்லா பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் பார்க்கிங் கட்டணங்களை வசூல் செய்துகொண்டிருந்தார்கள். `நோ பார்க்கிங்’ என்று அந்த ஊழியர்களும் சொல்லவில்லை. காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது.

வாகன நெரிசல், பாண்டி பஜார்
வாகன நெரிசல், பாண்டி பஜார்

இந்த மல்டி லெவல் பார்க்கிங் வளாகம் ஏன் செயல்படாது இருக்கிறது என்று விவரம் தெரிந்த வட்டாரத்தில் பேசினோம். ``கடந்த ஆட்சியில் இந்த வளாகத்தின் டெண்டர் கட்சிப் பிரமுகரின் வேண்டப்பட்ட ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஆட்சி மாறியதும், அந்த டெண்டர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில், அந்த வளாகம் முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிடும். முழுச் செயல்பாட்டுக்கு வந்ததுமே பெரிதாக விளம்பரப்படுத்தி அந்தப் பகுதியிலுள்ள அனைத்து வாகனங்களையும் அந்த வளாகத்தில் நிறுத்தவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன" என்று கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கிட்டத்தட்ட 40 கோடியில் ஒரு நடைபாதை வளாகம், 41 கோடி செலவில் மல்டி லெவல் பார்க்கிங் வளாகம் என்று இத்தனை கோடிகளை அரசு செலவழித்து உலகத்தரத்தில் அமைத்தது வாகன நெரிசல் எதுவும் இல்லாமல் மக்கள் எளிமையாக இந்தச் சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே. ஆனால், அப்படி எந்த ஒரு விஷயத்தையும் அந்தச் சாலை தொடங்கி முடியும் வரை எங்களால் பார்க்க முடியவில்லை. ஒரு சாதாரண சாலையைவிட அதிகமான வாகன நெரிசலை மட்டுமே இங்கு காண நேர்ந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதை, மல்டி லெவல் பார்க்கிங் வளாகம் என்ற இரண்டுமே முதன்முதலாக இந்தப் பகுதியில்தான் செயல்பாட்டில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையிலுள்ள 30-க்கும் அதிகமான இடங்களில் இந்தத் திட்டத்தை கொண்டுவரவிருக்கிறார்கள். சென்னையை அழகுபடுத்தவும், உலகத்தரத்தில் மாற்றவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து பல கோடிகளைச் செலவு செய்து திட்டங்களைக் கொண்டு வருவதெல்லாம் சரிதான். கொண்டுவரும் திட்டங்கள் செயலில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதும் அரசின் கடமைதான் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism