Election bannerElection banner
Published:Updated:

``சசிகலாவின் சிவில் வழக்கு, நல்ல தீர்வு தரும்!’’ - சொல்கிறார் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்!

சசிகலா
சசிகலா

சசிகலா வருகையை அடுத்து, அ.தி.மு.க-வுக்குள் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறிவருகின்றன. இந்தநிலையில், ``தற்போது நடைபெற்றுவரும் எல்லாப் பிரச்னைகளுக்கும் சசிகலா தொடுத்திருக்கும் சிவில் வழக்கின் மூலம் நல்ல தீர்வு கிடைக்கப்போகிறது’’ என்கிறார் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்.

சசிகலாவின் வருகை, அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையே, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், `சசிகலா வந்தவுடன், நடக்க வேண்டியது நடக்கும்' என்று எதிர்முகாமுக்குள் கொளுத்திப்போட, தமிழக அரசியலே தடதடக்கிறது. இந்தச் சூழலில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் பேசினேன்,

``2017-ம் ஆண்டு கூட்டப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழு சட்டப்படிச் செல்லாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''

``அ.தி.மு.க என்ற கட்சியின் அடிப்படை விதிகளின்படி, தொண்டர்களால் மட்டுமே அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். கட்சிப் பொதுக்குழுவையும் பொதுச்செயலாளர்தான் கூட்ட வேண்டும். எனவே, பொதுச்செயலாளரான சசிகலா இன்றி பொதுக்குழுவைக் கூட்டியதும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனக் கட்சியின் முன்னோடிகள் உருவாக்கிக் கட்டிக்காத்துவந்த விதியை இவர்களே திடீரென மாற்றிக்கொண்டதும் சட்டப்படி தவறு. மேலும் பொதுச்செயலாளருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு தலைமைப் பதவிகளைத் தொண்டர்களின் வாக்கெடுப்பு இல்லாமலேயே உருவாக்கிக்கொண்டதும் தவறு என்பதுதான் எங்கள் தரப்பு வாதம்.''

ராஜா செந்தூர்பாண்டியன்
ராஜா செந்தூர்பாண்டியன்

``தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுவிட்டது; உச்ச நீதிமன்றமும் சசிகலாவின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது. இனி சசிகலா, ஐ.நா சபையில்தான் போய் முறையிட வேண்டும் என்றெல்லாம் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்கிறாரே?''

``வெற்றி பெற்ற வழக்கில் வாதாடியவர்கள் நியாயமாக வழக்கை நடத்தியவர்கள் என்றும், தோற்றவர்களெல்லாம் நியாயமற்ற முறையில் வழக்கை நடத்தியவர்கள் என்றும் அர்த்தம் அல்ல. ஏனெனில், சில சமயங்களில் நியாயமும் வெற்றிபெறாமல் போய்விடக்கூடிய சூழல் உண்டு. இதை நீதித்துறையின் மாண்பைக் குறைப்பதற்காக நான் சொல்லவில்லை. சட்டம் தெரிந்த சட்டத்துறை அமைச்சர் ஒருவரே இப்படிக் கூறுகிறாரென்றால், உச்ச நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்காதவர்களெல்லாம் 'இனி ஐ.நா சபைக்குத்தான் போக வேண்டும்' என்று தவறாகப் புரிந்துகொண்டுவிடக் கூடாது.

கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்காக சசிகலா தரப்பு உரிமைகோரிய வழக்குதான் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியாகியிருக்கிறது. இப்படி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டாலோ அல்லது தோற்றுப்போய்விட்டாலோ, `இனி அவ்வளவுதான்' என்றே பல வழக்கறிஞர்களும் நினைப்பார்கள். ஆனால், ஒரு வழக்கில், மறுசீராய்வு மனுதான் இறுதியானது. இது சட்டத்துறை அமைச்சருக்கும் நன்றாகத் தெரியும். அந்த மருசீராய்வு மனுவை சசிகலா இன்னமும் தாக்கல் செய்யவில்லை; அந்த இறுதி முடிவு இனிமேல் எடுக்கப்படலாம் என்பதையும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமைச்சர் சொல்லியிருக்க வேண்டும்.

அதேபோல், கட்சியின் அனைத்து உரிமைகளையும் கோருகிற பொதுச்செயலாளர் பதவி குறித்த சசிகலாவின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் அமைச்சர்கள் பொதுவெளியில் தெளிவுபடுத்த வேண்டும் அல்லவா... அந்த சிவில் வழக்குதானே இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு தீர்வைக் கொடுக்கப்போகிறது.''

ஒரே நேரத்தில் விண்ணுக்குப் பறந்த 100 செயற்கைககோள்கள்... ராமேஸ்வரத்தில் மாணவர்கள் சாதனை!

``2017-ல் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடுத்த வெற்றிவேல் இறந்துவிட்ட இன்றைய சூழலில், அவர் தொடுத்திருந்த வழக்கும் தள்ளுபடியாகிவிடும் என்கிறாரே சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்?’’

``வழக்கைத் தொடுத்தவர் இறந்துவிட்டார். எனவே வழக்கும் முடிந்துவிடும் என்று நீதிமன்றம்தானே சொல்ல முடியும்... சட்ட அமைச்சரான இவர் எப்படிச் சொல்ல முடியும்?

வெற்றிவேலின் மகன் அ.தி.மு.க உறுப்பினராக இருக்கிறார். ஆக, அ.தி.மு.க-வின் ஓர் அங்கம் என்ற வகையிலும், தந்தை இறந்துவிட்ட காரணத்தாலும் இந்த வழக்கின் உள்ளே வெற்றிவேலின் மகனும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதுதான் நீதிமன்ற நடைமுறை. 11-9-2017 அன்று வெற்றிவேல் தனி நீதிபதி முன்பு ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். 'பொதுக்குழுவில் நீங்கள் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாததும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்; அதற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்' என்று கூறி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அன்றைய தினமே பெஞ்சில் இது குறித்து மேல்முறையீடு செய்து, 'வெற்றிவேல் தாக்கல் செய்த வழக்கின் இறுதி முடிவு நாளை நடைபெறவிருக்கும் 12-09-2017 பொதுக்குழுவின் முடிவைக் கட்டுப்படுத்தும்' என்ற இடைக்கால உத்தரவு கிடைக்கப்பெற்றது. இந்த வழக்கும் இன்றைய தேதிவரையில் நிலுவையில்தான் இருந்துவருகிறது.''

சசிகலா
சசிகலா

``அ.ம.மு.க-வின் தலைமைப் பதவியில் சசிகலா அமருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவிக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்துவது ஏன்?''

``2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை. பொதுச்சின்னமாக 'பரிசுப் பெட்டி' சின்னம்தான் ஒதுக்கப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணைக்குப் பிறகுதான் அ.ம.மு.க-வைக் கட்சியாக மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 19-4-2019-ல்தான் கட்சி தொடங்கப்படுகிறது. அந்தப் பொதுக்குழுவில், `கட்சியின் தலைவர் யார் என்பதை இப்போது தேர்ந்தெடுக்கவில்லை' என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும், துணைப் பொதுச்செயலாளராக அன்பழகனும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே, அ.ம.மு.க-வின் தலைவர் பதவி என்பது இன்றைய தேதிவரையில் காலியாகத்தான் இருக்கிறதே தவிர, சசிகலா அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொல்வதில் உண்மை இல்லை!''

தெலங்கானாவில் ஜெகன் தங்கை ஷர்மிளாவின் புதிய கட்சி... ஸ்கெட்ச் கே.சி.ஆருக்கா பா.ஜ.க-வுக்கா?

``அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு இப்போதும் சசிகலாவுக்கு இருக்கிறதா?''

``2017-ம் ஆண்டு தொடக்கத்தில் சசிகலா தரப்புக்குத்தான் எம்.எல்.ஏ., எம்.பி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெரும்பான்மையாக இருந்தது. அதன் அடிப்படையில்தான் அந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாத இறுதிகளில் `சசிகலாதான் அ.தி.மு.க பொதுச்செயலாளர், டி.டி.வி தினகரன் துணைப் பொதுச்செயலாளர்' என சத்தியப் பிரமாண வாக்குமூலங்களையும் தாக்கல் செய்திருந்தனர். ஆக, ஆரம்பகட்ட நிலைப்பாடு என்பது சசிகலாவுக்குச் சாதகமானதாக இருக்கிறது.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்

பின்னர் இடைப்பட்ட காலத்தில்தான் சட்டத்துக்குப் புறம்பாக இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறது. இதை எதிர்த்துத்தான் சசிகலா தரப்பிலும் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்தக் கேள்விக்கு பதில், 'அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் உறுப்பினர்கள் ஆரம்பத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்ததுபோல், மீண்டும் ஆதரவு தெரிவிப்பார்கள்' என்பதுதான்.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு