Published:Updated:

வன்முறைகளின் ராஜா Vs நண்பர்களிடம் தஞ்சம்..! ரஜினி - ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா?!

``சேற்றில் விழுந்த பன்றி'' என ரஜினியைச் சொன்னார் ராமதாஸ். ``வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார்'' என ராமதாஸை சொன்னார் ரஜினி. விருதுக்காக ரஜினிக்கு வாழ்த்துச் சொல்கிறார் ராமதாஸ்.`பாபா' பட பிரச்னையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்குமிடையே மூண்ட பகை முடிவுக்கு வரக் காரணம், தேர்தலா?

ராமதாஸ், ரஜினி
ராமதாஸ், ரஜினி ( Vikatan )

`எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது?'

- வாழப்பாடியின் மகன் ராம சுகந்தன் போட்ட ட்வீட் இது.

`கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்' - இது டாக்டர் ராமதாஸ் போட்ட ட்வீட். இதற்குத்தான் எதிர்வினை ஆற்றியிருக்கிறார் ராம சுகந்தன்.

ராமதாஸ் ட்வீட்
ராமதாஸ் ட்வீட்

`எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது?' என்கிற எள்ளலுக்குப் பின்னால் இருப்பது அரசியல். அதற்கு முன்பு தெரிந்து கொள்ள ஒரு ஃபிளாஷ்பேக் உண்டு.

2002-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் வெளியான `பாபா' பட விவகாரத்தில் ரஜினிக்கும் ராமதாஸுக்கும் இடையே நடந்த மோதல் அன்றைய அரசியல் காலகட்டத்தில் அழிக்க முடியாத அத்தியாயங்கள்.

பாபா படத்தில் ரஜினி
பாபா படத்தில் ரஜினி

`படையப்பா' மகத்தான வெற்றி பெற்ற பிறகு, அடுத்த படத்தில் ரஜினி உடனடியாக நடிக்கவில்லை. சுமார் 3 ஆண்டுகள் இடைவெளி. அதனால் `பாபா'வுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. ``பாபா படத்தில் அரசியல் கருத்துகள் அதிகம் இருக்கின்றன'' என்கிற பப்ளிசிட்டியும் சேர ரஜினி ரசிகர்களின் பல்ஸ் கூடியிருந்தது.

`பாபா' படத்தின் ஸ்டில்கள் வெளியாக ஆரம்பித்தன. அதில், ரஜினி சிகரெட் பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ராமதாஸைக் கொதிக்க வைத்தது. ``பாபா படத்தை யாரும் பார்க்கக் கூடாது'' எனக் கர்ஜித்தார் ராமதாஸ். இதனால், படத்துக்கு இலவசமாக புரமோஷன் கிடைத்தது. திரைத்துறையையும் நடிகர்களையும் பா.ம.க தொடர்ந்து விமர்சித்து வந்தது. ஆனால், அதற்காகப் படங்களை முடக்கும் வேலையை பா.ம.க முன்னெடுத்தது கிடையாது.

வீரப்பனுடன் நடிகர் ராஜ்குமார்
வீரப்பனுடன் நடிகர் ராஜ்குமார்
ரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு... நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு? - பாகம் 2

கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி பிறகு விடுதலை செய்தான் சந்தனக் கடத்தல் வீரப்பன். இந்த நிலையில் பெங்களூருவில் பேசிய ரஜினி, ``வீரப்பனை சம்ஹாரம் செய்ய வேண்டும்'' என்றார். இந்தக் கோபம்தான் ரஜினி மீது ராமதாஸ் பாய்வதற்குக் காரணம். ``சிகரெட் பிடிக்கவும் தண்ணியடிக்கவும் ரசிகர்களுக்கு ரஜினி கற்றுக் கொடுத்திருக்கிறார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரப்பனைக் கொல்ல வேண்டும் எனச் சொன்ன ரஜினியின் `பாபா' படத்தை வன்னியர்கள் யாரும் பார்க்கக் கூடாது'' என மயிலாடுதுறையில் நடந்த வன்னியர் மாநாட்டில் முழங்கினார் ராமதாஸ்.

`பாபா' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. `பாபா' முத்திரையுடன் டாலர்கள், பனியன்கள், தொப்பிகள் போஸ்டர்கள் எனப் பட்டையைக்கிளப்ப ஆரம்பித்தது. `` `பாபா' முத்திரையை பிராண்டாக வைத்து ரஜினியின் மனைவி லதா கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்'' என இன்னொரு பக்கம் விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்க `பாபா' படத்தை ஓடவிடக் கூடாது என பா.ம.க பக்காவாக பிளான் போட்டது.

ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி
ராமதாஸ் மற்றும் ஜி.கே.மணி
Vikatan

மயிலாடுதுறையில் ரஜினியை ராமதாஸ் ஒருமையில் பேசியது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ராமதாஸைத் தாக்கி அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்கள் ரசிகர் மன்றத்தினர். ```ரஜினி ரசிகர்களின் மிரட்டலைச் சந்திக்கத் தயார்'' என பா.ம.க தலைவர் ஜி.கே.மணியும் சவால் விட்டார். இப்படியான சூழலில் சுதந்திர தினத்தில் படம் ரிலீஸானது.

பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் `பாபா' திரையிடப்பட்ட தியேட்டர் மீது தாக்குதல் நடந்தது. திரையரங்கத்துக்கு தீ வைத்துவிட்டு, படப் பெட்டியை பா.ம.க-வினர் தூக்கிச் சென்றனர். பண்ருட்டியில் `பாபா' வெளியான தியேட்டருக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து `பாபா' திரையிடப்படவில்லை. `பாபா' வெளியான தியேட்டர்களின் வெளியே பா.ம.க-வினரையும் ராமதாஸையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர் ரஜினி ரசிகர்கள்.

பாபா படத்தில்..
பாபா படத்தில்..
ரஜினி சொல்லி 17 வருஷம் ஆச்சு...
நதிகள் இணைப்பு 1 கோடி என்னாச்சு? - பாகம் 1

பா.ம.க செல்வாக்காக இருக்கும் வட மாவட்டங்களில் `பாபா'வுக்குச் சிக்கல் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அளவுக்கு விவகாரம் போகவே.. ``நடந்த, நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களுக்குக் காரணமான ராமதாஸை சட்டரீதியில் சந்திப்பேன்'' என அறிக்கை விட்டார் ரஜினி. உடனே ஜி.கே.மணி, '' `பாபா' படம் நன்றாக இல்லாததால் ரசிகர்களைத் தூண்டி விட்டு, படத்திற்கு விளம்பரம் சேர்க்கிறார் ரஜினி'' எனக் குற்றம் சாட்டினார். `பாபா' படத்தின் திருட்டு வி.சி.டி-க்கள் தங்கு தடையில்லாமல் கிடைத்தன. ''அதற்கு பா.ம.க-வின் ஆசியும் இருந்தது'' எனப் பேச்சுகள் எழுந்தன.

ஒரு வழியாக `பாபா' பிரச்னை ஓய்ந்தது. படமும் தோல்வி அடைந்தது. இப்படியான சூழலில் அடுத்த ஒரு மாதத்தில் இன்னொரு பிரச்னை முளைத்தது. 2002 ஆகஸ்ட் மாதத்தில்தான் `பாபா' விவகாரம் சூடுபிடித்தது. அக்டோபரில் காவிரி ரூபத்தில் ரஜினிக்கு அடுத்த பிரச்னை ஏற்பட்டது.

ரஜியுடன் பாரதிராஜா
ரஜியுடன் பாரதிராஜா
விகடன்

காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடகாவைக் கண்டித்து பாரதிராஜா தலைமையில் திரையுலகம் போராட்டம் நடத்தியது. `2002 அக்டோபர் 12-ம் தேதி நெய்வேலியில் பேரணி நடத்தி, அனல் மின்நிலையத்தை முற்றுகையிடுவோம்' என அறிவித்தார் பாரதிராஜா. இந்தப் போராட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்தன. `எங்கே சினிமாக்காரர்கள் நம்மைக் கைவிட்டுவிட்டார்களோ என்று சந்தேகத்துக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால், தமிழ்த் திரையுலகினர் ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என ராமதாஸ் அறிக்கை விட்டார். சினிமா நடிகர்களை எதிர்த்து வந்த ராமதாஸிடமிருந்து இப்படியான ஆதரவு கிடைத்தது ஆச்சர்யம். போராட்டம் நடக்கும் நெய்வேலி ஏரியா பா.ம.க-வின் கோட்டை. அதனால், அந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், ரஜினியிடமிருந்து எதிர்வினை கிளம்பியது. ``இது தேவையில்லாத போராட்டம்" எனச் சொல்லி அதிரவைத்தார் ரஜினி. `திரையுலகம் நடத்தும் போராட்டம் தேவையில்லாதது. நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என ரஜினி அறிக்கைவிட்டார். நெய்வேலி போராட்டத்தை ரஜினி புறக்கணிக்கக் காரணம் `பாபா' பட பிரச்னையில் ரஜினிக்கும் பா.ம.க-வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான்.

ராமதாஸ்
ராமதாஸ்
விகடன்
`கஜா புயலால் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிட்டீங்க!'- 10 பேருக்கு வீடுகள் வழங்கி ரஜினி நெகிழ்ச்சி

தன்னைக் கடுமையாக எதிர்க்கும் பா.ம.க-வின் கோட்டையான நெய்வேலியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்றால், தனக்கு எதிராக பா.ம.க-வினர் கோஷம் போடுவார்கள் என நினைத்தார் ரஜினி. நெய்வேலி போராட்ட அறிவிப்பை பாரதிராஜா அறிவித்தபோது ராமதாஸிடமிருந்துதான் முதல் ஆதரவு கிடைத்தது. அதனால்தான் `சென்னையில் போராடலாம்' என ரஜினி சொன்னார். நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்காமல் அடுத்த நாள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். ``தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரைச் சரிக்கட்டவே ரஜினி உண்ணாவிரதம் இருந்தார்'' எனப் பதிலடி கொடுத்தார் ராமதாஸ்.

`பாபா' பட பிரச்னை, திரையுலகினர் நெய்வேலி போராட்டம், ரஜினியின் தனி உண்ணாவிரதம் எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, அந்த விஷயங்களையே மக்கள் மறந்து போயிருந்தார்கள். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெற்றிருந்தது.`பாபா' படத்தின்போது பிரச்னை, நெய்வேலி போராட்டம் என ராமதாஸ் மீது கோபத்தில் இருந்த ரஜினி, 2004 நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டார்.

ராமதாஸ்
ராமதாஸ்
விகடன்

அந்தத் தேர்தலுக்கு முன்பு திருவண்ணாமலையில் பேசிய ராமதாஸ், `சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி' என ரஜினியைத் தரக்குறைவாக விமர்சித்தார். இது ரஜினி ரசிகர்களையும் கொதிக்க வைத்தது. அதன் பின்தான் தி.மு.க கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் பா.ம.க-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சொன்னார் ரஜினி. அதை ஏற்று, ரசிகர்களும் எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தார்கள். இதனால் ரசிகர்களுக்குக் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வர ஆரம்பித்தன. இந்நிலையில்தான் மதுரை வந்த ராமதாஸுக்கு ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள். இதனால் அவர்களைத் தாக்கினார்கள் பா.ம.க-வினர். இந்தச் சம்பவத்திற்காக ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராமதாஸ் மீது அதுவரையில் நேரடியாக எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்த ரஜினி முதன்முறையாக அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நடந்த பிரஸ்மீட்டில் ராமதாஸைக் கண்டித்துப் பரபரப்பு அறிக்கையைப் படித்தார். அப்போது ரஜினி என்ன சொன்னார்?

ரஜினி
ரஜினி
`பத்ரிநாத், பாபாஜி குகை, துவாராஹாட் குருசரண் ஆசிரமம்!' - மீண்டும் ரிஷிகேஷில் ரஜினி

``பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களையும், வன்னியர் சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன். உங்கள் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் என்றைக்காவது, எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா? அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா? அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாகப் பேசியிருக்கிறேனா?

`பாபா’ படத்தில் நான் சிகரெட் பிடிக்கிறதும், மது அருந்துவதும் இளைஞர்களைக் கெடுத்து விடும் என்ற குற்றச்சாட்டைக் கூறி, அந்தப் பட வெளியீட்டன்று படச்சுருளைக் கடத்தி, தியேட்டர் திரையைக் கிழித்து, திரையரங்க மேனேஜரைக் கடத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மன்ற நிர்வாகிகளின் வீடுகளைக் கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.

ரஜினி
ரஜினி
விகடன்

வன்னியர் சங்க சகோதரர்கள் ஏராளமானவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். மன்றங்களில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர், என்னைவிட படித்தவர், ஒரு பெரும் கட்சியின் தலைவர். அவர் என்னை நேரடியாகச் சந்திக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை, வெறும் தொலைபேசியிலாவது, `தம்பி இந்த மாதிரியான சீன்களையெல்லாம் படத்தில் வைக்க வேண்டாம் அது இளைஞர்களைக் கெடுக்கும்’ என்று சொல்லியிருந்தால், நிச்சயமாக நான் அந்தக் காட்சிகளை நீக்குவதைப் பற்றிச் சிந்தித்திருப்பேன். முடிந்தால் அந்தக் காட்சிகளை நீக்கி இருப்பேன். முடியவில்லையென்றால் இதுபோன்ற காட்சிகளை அடுத்த படத்தில் தவிர்த்து இருப்பேன். அல்லது `இதுபோன்ற காட்சிகளைத் திரைப்படத்தில் அனுமதித்தால், அது இளைஞர்களைக் கெடுத்துவிடும்’ என்று சினிமா தணிக்கை குழுவிடம் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டாமென முறையிட்டிருக்கலாம்.

ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு அதுதானே அழகு, நியாயம். அதைச் செய்யாமல் கோடான கோடி பண முதலீட்டில் தயாரித்த படம் வெளியான பிறகு, இந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனமான நாச வேலைகளில் ஈடுபடுவது சரிதானா? அதுமட்டுமன்றி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களே இருக்கக் கூடாது என்று சொல்லி என்னுடைய ரசிகர் மன்றப் பலகைகளை உடைத்துத் தள்ளி, ரசிகர்களின் நெற்றியில் `முட்டாள்’ என்று எழுதிக் கொள்ளும்படி சொன்னார்கள். என் ரசிகர்கள் ஆவேசமடைந்தார்கள், நானும் பொறுமை காக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன், நானும் அமைதியாகத்தான் இருந்தேன்.

ராமதாஸ்
ராமதாஸ்
Vikatan
'தர்பார்' ஜானர், ரஜினி 'அப்ரோச்', அஜித் 'காம்போ'... - முருகதாஸ் ஸ்பெஷல் ஷேரிங்ஸ்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் என்னை `சேற்றில் விழுந்து கிடக்கும் பன்றி’ என்று மிகக் கேவலமாக டாக்டர் ராமதாஸ் அவர்கள் விமர்சித்தார். என் ரசிகர்கள் மிகவும் வேதனைப்பட்டுக் கொந்தளித்தார்கள். `எங்கள் எதிர்ப்பை காட்டியே தீருவோம்’ என்று ஒரு குரலாக அவர்களுடைய உணர்ச்சிகளைக் கொட்டினார்கள். அவர்களுடைய உணர்வுகளில் நியாயம் இருப்பதினால் அதை மதித்து பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் எதிர்ப்பை தெரிவிக்கச் சொன்னேன். அவர்கள் செயல்படத் தொடங்கியவுடன் அந்த ஆறு தொகுதிகளில் இருக்கும் அனைத்து மன்ற நிர்வாகிகளுக்கும் என் ரசிகர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் அடியாட்களிடமிருந்து தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்தன.

காவல்துறையினர் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் என் ரசிகர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாது. ஆகையால் அந்த ஆறு தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிப்படையான ஆதரவு என் மன்றங்கள் அளித்தால், அவர்கள் என் ரசிகர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். அதனால் வெளிப்படையான என் மன்ற ஆதரவை அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க வுக்கு அளிக்கும்படி என் மன்றங்களுக்கு ஒப்புதல் அளித்தேன். எனக்கு டாக்டர் ராமதாஸை எதிர்ப்பதை விட என் ரசிகர்களின் நலனும் உயிரும் பாதுகாப்பும்தான் முக்கியம்.

ரஜினி
ரஜினி
விகடன்

மதுரையில் என் ரசிகர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நடத்திய ராட்சச தாக்குதல்களை நீங்கள் அனைவரும் தொலைக்காட்சி மூலமும், செய்தித் தாள்களின் மூலமும் அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவத்திற்காக டாக்டர் ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்த தமிழகக் காவல் துறையினருக்கும் தமிழக அரசிற்கும் என் மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கிலிருந்து நாம் அவர்களை விடப்போவதுமில்லை.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதினால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.
ரஜினிகாந்த்

அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இரண்டாவது வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சச செயல்களிலும் அராஜகங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாஸை என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக நான் எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதினால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.

ரஜினி
ரஜினி
விகடன்

நான் ஆன்மிகவாதி, எனக்கெதற்கு இந்தப் பழிவாங்கும் உணர்ச்சி என்று சிலர் கேட்கிறார்கள். நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவிற்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. நான் ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்தத் தவற்றை நான் ஆயிரம் முறை செய்வேன்.

என்னை வாழ வைத்த ரசிகப் பெருமக்களே உங்கள் பலம் என்னவென்று டாக்டர் ராமதாஸுக்குப் புரிய வைத்து விட்டீர்கள், போதும், இனிமேல் கறுப்புக் கொடி காட்டுவதோ, அவர் பேசும்போது கூச்சல் போடுவதோ, சுவரொட்டிகளை ஒட்டுவதோ வேண்டாம். ஜனநாயக ரீதியில் இனி ஓட்டுப் போடுவதில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இதையும் மீறி டாக்டர் ராமதாஸ் கட்சியினர் ஜெயித்தால் அது டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம், தோற்றால் அவர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம். அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்று விட்டோமென்று அர்த்தமில்லை. அவர்கள் தோற்றுவிட்டால் நாம் ஜெயித்து விட்டோம் என்று அர்த்தமில்லை. அநியாயமாக எங்களை எதிர்த்தவர்களுக்கு நியாயமாக எங்கள் எதிர்ப்பைக் காட்டிவிட்டோம்.

ரஜினி
ரஜினி
விகடன்

டாக்டர் ராமதாஸ் அவர்களே, மதுரையில் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அவர்களை நொறுக்கி விட்டீர்கள். நாளை வருங்காலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், கனடா, பாரீஸ் ஏன் ஜப்பானில் நீங்கள் சென்றால் கூட அங்கும் என் ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டுவார்கள். என்ன செய்வீர்கள்? அங்கேயும் அடியாட்களைக் கூட்டிக்கிட்டுப் போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா? வேண்டாம் இந்த வெறிச் செயல்கள். டாக்டர் ராமதாஸ் அவர்களே என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்து விட்டீர்கள். இதற்கு மேல் உங்களைப் பற்றிக் கூற என் மனம் இடம் கொடுக்கவில்லை'' என விரிவாகப் பேசினார் ரஜினி.

''என்னுடைய நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்து விட்டீர்கள்'' என ரஜினி சொன்னது தி.மு.க-வைதான். அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம் பெற்றிருந்தது. தேர்தலில் பா.ம.க-வுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் கடுமையாகப் பிரசாரம் செய்தும் ஆறு தொகுதிகளிலும் பா.ம.க-தான் ஜெயித்தது. ரஜினி ஆதரவு கொடுத்தும் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி வேட்பாளர்கள் தோற்றுப் போனார்கள்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதியுடன் பா.ம.க வேட்பாளர்கள்
2004 நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதியுடன் பா.ம.க வேட்பாளர்கள்

அதன்பின் ரஜினி - ராமதாஸ் பற்றிய பேச்சுகள் எதுவும் எழவில்லை. 15 ஆண்டுகள் கழித்து, `கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு விருது வழங்கப்பட இருப்பதில் மகிழ்ச்சி. திரைத்துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துகள்' எனச் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் தரமான படங்கள் வெளியான போதுகூட ராமதாஸிடம் இருந்து பெரிதாக வாழ்த்துகள் வந்தது கிடையாது.

அரிதாக சில படங்களை மட்டும் பாராட்டியிருக்கிறார். அப்போதுகூட நடிகர்களைப் பாராட்டியதில்லை. ஆனால், மிகக் கடுமையாக ரஜினியை எதிர்த்ததோடு அவரின் படத்தையும் ஓடவிடாமல் செய்த ராமதாஸ், இப்போது ரஜினியை அவருடைய திரை சாதனைக்காகப் பாராட்டுவதுதான் நகைமுரண்.

அ.தி.மு.க. - பி.ஜே.பி கூட்டணி பிரசாரத்தில் வாஜ்பாய், ஜெயலலிதா
அ.தி.மு.க. - பி.ஜே.பி கூட்டணி பிரசாரத்தில் வாஜ்பாய், ஜெயலலிதா

``சேற்றில் விழுந்த பன்றி'' என்றார் ராமதாஸ்.

``வன்முறைகளின் ராஜா'' என்றார் ரஜினி.

எதிரிகள் நண்பர்கள் ஆகலாம். அப்படி நடந்தால், ``இறைவா... நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என முன்பு ஒரு முறை ரஜினி சொன்ன வார்த்தைகள் பொய்யாகலாம்.