Published:Updated:

`சேலம் மாநகராட்சி துணை மேயர் நாற்காலியை மாற்ற வேண்டும்’ - மாமன்றத்தில் கூட்டணிக் கட்சிக்குள் குஸ்தி

மாமன்ற கூட்டம்

மாநகராட்சி துணை மேயரின் நாற்காலியை கீழே போட வேண்டும் என்று வி.சி.க கவுன்சிலர் தீர்மானம் கொண்டுவந்தது கூட்டணி கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`சேலம் மாநகராட்சி துணை மேயர் நாற்காலியை மாற்ற வேண்டும்’ - மாமன்றத்தில் கூட்டணிக் கட்சிக்குள் குஸ்தி

மாநகராட்சி துணை மேயரின் நாற்காலியை கீழே போட வேண்டும் என்று வி.சி.க கவுன்சிலர் தீர்மானம் கொண்டுவந்தது கூட்டணி கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மாமன்ற கூட்டம்

சேலம் மாநகராட்சியில் 2022 -ம் ஆண்டின் இறுதி மாமன்ற கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி (காங்கிரஸ்), மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். கூட்டம் ஆரம்பித்தபோது, சேலம் மாநகராட்சியின் 44-வது வார்டு வி.சி.க கவுன்சிலர் இமயவரம்பன் தன் லெட்டர் பேடில் தீர்மானம் ஒன்றை வரையறுத்து பேச தொடங்கினார். அதில், ``நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறையின் அரசு உத்தரவின்படி மாமன்ற உறுப்பினர்கள் அமரும் இடத்தில் துணை மேயரும் அமர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களோ, `இது தேவை இல்லாத ஒன்று, தலைமை முடிவு செய்து மேயருக்கு அருகில் அமர வைத்ததை, கூட்டணி கட்சியான நீங்களே மதிக்காமல், எதிர்க்கட்சி போன்று கேள்வி கேட்கலாமா?' என்று எதிர்குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அதன்பின்னால் மேயர் தலையசைக்கவே மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தங்களது கோரிக்கை பரீசிலனை செய்யப்படும் என்று கூறி அந்த பிரச்னையை முடித்தார்.

சாரதாதேவி
சாரதாதேவி

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவியிடம் பேசியபோது, “இதுவரை கூட்டணி தர்மத்தை நிலைநாட்டும் வகையில் ஒற்றுமையாக செயலாற்றி வருகிறேன். தமிழக முதல்வர் மற்றும் சேலம் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு அவர்களும் தான் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் என்னை மாநகராட்சி துணை மேயராக தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் வழக்காட்டுதலின்படி தான், நான் மேலே அமருவதற்கு நாற்காலி போடப்பட்டது. ஆனால் சமீபத்தில் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன், `உங்களை கீழே இறக்க போகிறேன் மன்னித்து விடுங்கள். உங்களுக்கு ஷேர்(வார்டுகளுக்கான நிதியை குறிப்பிட்டு) முக்கியமா.. இல்ல சேர் முக்கியமானு பாத்துக்குங்கன்னு சொன்னாரு’ அதை நான் பெரிதாக எடுத்துக்கல ஆனால் இன்று அவர் சொன்னமாதிரி என்னை கீழே இறக்க தீர்மானம் போட்டிருக்கிறார்” என்றார்.

இது தொடர்பாக 44-வது வார்டு கவுன்சிலர் இமயவரம்பனிடம் பேசியபோது, “தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளரான மாலதி அவர்கள் மாமன்றத்தில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்வது குறித்து 1996-ம் ஆண்டு தெளிவான சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

இமயவரம்பன்
இமயவரம்பன்

அந்த சுற்றறிக்கையின்படி, மாமன்ற துணை மேயரை, மாமன்ற உறுப்பினர்கள் அமரும் இடத்தில் முதல் உறுப்பினராக அமர இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெளிவாக வழிக்காட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி துணை மேயர், மற்ற மாமன்ற உறுப்பினர்கள் அமரும் அமர்க்கையில் தான் அமர வேண்டும். ஆனால் சேலத்தில் துணை மேயர், மேலே மேயருக்கு அருகில் அமர்த்தப்பட்டிருக்கிறார். இதனை நான் கண்டிக்கின்றேன்'' என்றார்.

மேலும் கூட்டணி கட்சிக்குள் முடிவெடுத்துதானே மேலே அமர வைத்திருப்பார்கள் என்று கேட்டதற்கு, `அப்படியென்றால் நானும் தான் கூட்டணி கட்சி. ரொம்ப நாள்களாக முன் வரிசையில் இடம் தாங்கணு சொல்லி கேட்டுட்டு இருக்கேன். அதுமட்டும் தர மாட்கிறாங்க. துணை மேயருக்கு மேலே இடம் கொடுத்தால் என்னை முன் வரிசையில் அமர வைக்க வேண்டும். ஒன்னு சட்டத்தை கடைபிடிங்க. இல்லனா கூட்டணி தர்மத்தை கடைபிடிங்க... ரெண்டும் இல்லாம ஒருதலை பட்சமா செயல்பட்டா, நான் இப்படி தான் செய்வேன்'' என்றார்.

மேயர் ராமச்சந்திரன்
மேயர் ராமச்சந்திரன்

துணை மேயரிடம் ஷேர் வேணுமா.. இல்ல சேர் வேணுமா என்று கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் கேட்டபோது ``அது முழுவதும் பொய்யான குற்றச்சாட்டு'' என்றார். மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “தலைமை முடிவு செய்து துணை மேயரை மேலே அமர்த்தியிருக்கிறது. இதில் நான் பேசுவதற்கு ஒண்ணும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.