Published:Updated:

‘பதில் சொல்லுங்கள் பிரதமரே...’ - சீன எல்லை விவகாரத்தில் கிடுக்கிப்பிடி போடும் காங்கிரஸ்

ராகுல் காந்தி ( Twitter )

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன - இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, சீனா எல்லை விவகாரத்தில் பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விடாப்பிடியாகக் கூறிவருகிறது.

‘பதில் சொல்லுங்கள் பிரதமரே...’ - சீன எல்லை விவகாரத்தில் கிடுக்கிப்பிடி போடும் காங்கிரஸ்

அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன - இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, சீனா எல்லை விவகாரத்தில் பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விடாப்பிடியாகக் கூறிவருகிறது.

Published:Updated:
ராகுல் காந்தி ( Twitter )

சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அதில், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது.

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள்
இந்தியா - சீனா ராணுவ வீரர்கள்

டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற அந்த மோதல் சம்பவம் குறித்த விவரம் மூன்று நாள்களுக்குப் பிறகு, ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பிறகுதான் வெளியுலகுக்குத் தெரியவந்தது. அந்த மோதல் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. மேலும், சீனா எல்லை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தவாங் செக்டாரில் நடைபெற்ற மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். “டிசம்பர் 9-ம் தேதி தவாங் செக்டார் யங்ட்சி பகுதியில் ஆக்கிரமித்து, தற்போதைய எல்லையை மாற்றியமைக்க சீனப் படையினர் முயன்றனர். அந்த முயற்சி நமது படையினரால் முறியடிக்கப்பட்டது. நமது எல்லையை ஆக்கிரமிக்க முயன்ற சீனப் படையினரை நமது படையினர் தடுத்து, அவர்களின் நிலைக்கு திருப்பி அனுப்பினர். இந்த விவகாரம் சீனாவுடன் ராஜ்யரீதியில் கொண்டு செல்லப்பட்டது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை... பலத்த காயங்களும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்துக்கு பிறகு, நடைமுறையில் உள்ள விதிகளின்படி 11-ம் தேதி அந்தப் பகுதி இந்திய கமாண்டோ - சீன கமாண்டோ இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், எல்லையில் அமைதியை நிலைநாட்ட விரும்புவதாகவும், அத்துமீறி நுழைதல், தாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடவில்லை என்றும் சீனா மறுப்பு தெரிவித்துள்ளது” என ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரத்தில், ராஜ்நாத் சிங்கோ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோ பதிலளிக்கக் கூடாது என்றும், பிரதமர் மோடிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்திவருகிறது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜெய்ராம் ரமேஷ், “சீனாவுடன் எல்லைப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். இத்தகைய விவகாரத்தில், இதற்கு முன்பு பிரதமர்களாக இருந்தவர்கள் நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருக்கிறார்கள். விவாதத்திலிருந்து நழுவிச்செல்லும் முதல் நபர் பிரதமர் மோடிதான். சீனா என்ற வார்த்தையையே மோடி உச்சரிப்பதில்லை. சீனா தொடர்பான மௌனத்தைக் கலைத்து, இந்தியாவை அவர் ஒற்றுமைப்படுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் தீவிரமான கருத்துகளை முன்வைத்துவருகிறார். “இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகிவருகிறது. இதைத் தடுக்காமல் இந்தியா தூங்குகிறது” என்று மத்திய பா.ஜ.க அரசை ராகுல் காந்தி சாடியிருக்கிறார். அதற்காக, ராகுல் காந்தியை பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்துவருகிறார்கள். இது குறித்துப் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “வீரதீரமிக்க நமது வீரர்களின் கைகளை அரசு கட்டிவைத்திருப்பது குறித்துத்தான் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். வீரமான ராணுவம், கோழையான ஆட்சித் தலைமை என்பதுதான் நாட்டின் நிலையாக இருக்கிறது” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

சீனாவை விமர்சிக்க பிரதமர் மோடி தயங்குகிறார் என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சித் தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் முன்வைத்துவருகின்றனர். அது உண்மை என்பதை நிரூபிப்பதுபோலவே பிரதமர் மோடியும் அமைதிகாத்து வருகிறார். அதை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் கட்சி முயல்கிறது. காங்கிரஸ் கட்சியின் தொடர் அழுத்தத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி இந்த விவகாரதில் பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்