Published:Updated:

``பாஜக-வை காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கும்” - சாத்தியமாகுமா ராகுலின் நம்பிக்கை?

ராகுல் காந்தி

“குறித்துவைத்துக்கொள்ளுங்கள்... பா.ஜ.க-வை காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கும்” என்று அடித்துச் சொல்கிறார் ராகுல் காந்தி.

``பாஜக-வை காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கும்” - சாத்தியமாகுமா ராகுலின் நம்பிக்கை?

“குறித்துவைத்துக்கொள்ளுங்கள்... பா.ஜ.க-வை காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கும்” என்று அடித்துச் சொல்கிறார் ராகுல் காந்தி.

Published:Updated:
ராகுல் காந்தி

அடுத்தடுத்து இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அடுத்த தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில், பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுவருகிறார்.

கார்கே
கார்கே

`காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன்’ என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ராகுல் காந்தி, நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பதில் கறாராக இருந்தார். அதன்படி, நேரு குடும்பத்தைச் சாராத மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகியிருக்கிறார்.

இத்தகைய சூழலில்தான், பாரத் ஜோடோ யாத்திரை 100-வது நாளை எட்டியதையொட்டி, டிசம்பர் 16-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சி செயலிழக்கவில்லை. எனது வார்த்தையைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். பா.ஜ.க-வை காங்கிரஸ் கட்சி நிச்சயம் தோற்கடிக்கும்” என்றார்.

மோடி
மோடி

2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று ராகுல் காந்தி மட்டுமின்றி, அவரின் கட்சியின் பிற தலைவர்களும் பேசிவருகிறார்கள். “ராகுல் காந்தி தலைமையில் பா.ஜ.க-வை வீழ்த்துவோம். அது மட்டுமல்ல, டெல்லியில் நரேந்திர மோடியை பிரதமர் நாற்காலியிலிருந்து இறக்குவோம். அடுத்து, ராகுல் காந்திதான் பிரதமர் நாற்காலியில் அமருவார்” என்று மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க-வைத் தோற்கடிப்பது சாத்தியமாகுமா... அதற்கான பாதையில்தான் காங்கிரஸ் பயணிக்கிறதா?

‘பா.ஜ.க ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல’ என்று ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கூறிவருகிறார்கள். ஆனால், தான் ஒரு பலம் வாய்ந்த கட்சி என்பதைச் சமீபத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் பா.ஜ.க நிரூபித்திருக்கிறது. குறிப்பாக, அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளைக்கொண்ட உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிபெற்ற பா.ஜ.க., சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Twitter

காங்கிரஸ் பலவீனமடைந்துவிட்டது என்றும், இனி ஒருபோதும் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாது என்றும் பா.ஜ.க-வினர் கூறிவந்தாலும், அகில இந்திய அளவில் பா.ஜ.க-வுக்கு காங்கிரஸ்தான் மாற்று என்பது யதார்த்தம். ஆனால், பா.ஜ.க-வுக்கு எதிரான நிலையில் இருக்கும் கட்சிகள் ஓரணியில் திரண்டால்தான், பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என்பது தற்போதை நிலை. அதுதான் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு முன்பாக இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி இருந்திருக்காவிட்டால், அங்கு காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும் என்று ராகுல் காந்தி இப்போது கூறுகிறார். ஆம் ஆத்மி மட்டுமல்ல, தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி உட்பட பல மாநிலங்களில் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலைச் செய்துவரும் பல கட்சிகள், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையும் எடுத்திருக்கின்றன. `பா.ஜ.க-வையும் எதிர்ப்போம், காங்கிரஸையும் எதிர்ப்போம்’ என்கிற அந்தக் கட்சிகளின் நிலைப்பாடுதான், பா.ஜ.க-வை வீழ்த்த முடியாததற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

பாரத் ஜோடோ யாத்திரை
பாரத் ஜோடோ யாத்திரை
ட்விட்டர்

ஆகவே, இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, பா.ஜ.க எதிர்ப்பு நிலையை எடுத்திருக்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முதலில் அவர் சாதிக்க வேண்டும். அப்போதுதான், பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்கிற ராகுல் காந்தியின் கனவு நனவாகும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.