Published:Updated:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும்!

அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை

``வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த குறிப்பிட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று தான் இருந்தார்களே தவிர, மற்றபடி அவர்களுக்கு நீதி வழங்கக் கூடாது என்கிற நோக்கிலோ, ஒரு சார்பாக இருக்க வேண்டும் என்பதிலோ செயல்படவில்லை. ” - இராஜீவ் காந்தி

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும்!

``வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த குறிப்பிட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று தான் இருந்தார்களே தவிர, மற்றபடி அவர்களுக்கு நீதி வழங்கக் கூடாது என்கிற நோக்கிலோ, ஒரு சார்பாக இருக்க வேண்டும் என்பதிலோ செயல்படவில்லை. ” - இராஜீவ் காந்தி

Published:Updated:
அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 13-ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக அவரின் பெற்றோருக்கு அந்தப் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அச்சிறுமியின் பெற்றோர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறி புகார் செய்தனர். அதனடிப்படையில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், திடீரென ஜூலை17-ம் தேதி அந்தப் பள்ளியில் பெரும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த செய்தி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெற்ற இடம்.
கள்ளக்குறிச்சி கலவரம் நடைபெற்ற இடம்.

`சமீப நாள்களாகப் பள்ளிக் கல்வித் துறை மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வரும் வேலையில், இந்த சம்பவம் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துவிட்டதாக’ கூறுகிறார்கள் கல்வி ஆர்வலர்கள். மேலும், ‘பொதுவாக அமைச்சர்கள் வாரத்தில் மூன்று நாள்களாவது சென்னையிலிருந்து கொண்டு துறை சார்ந்த வேலைகளைக் கவனித்து வருவது வழக்கம். ஆனால், பத்து நாள்களுக்கு மேல், தனது பகுதியில் உட்கட்சி தேர்தல் சம்பந்தமான வேலையில் இருந்துவிட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வாக்கு செலுத்துவதற்காகத்தான் சென்னையே வந்திருக்கிறார்’ என்கிற குற்றச்சாட்டும் அன்பில் மீது வைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி, ``அரசியலைத் தாண்டி இந்த விமர்சனம் அர்த்தமற்றதாக பார்க்கிறேன். சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வந்த பின் வதந்தி செய்திகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் அதிகமாக ஃபார்வேர்டு செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பள்ளி விஷயத்தில் கூட என்ன நடந்தது என்று புலனாய்வு செய்யக் கூடியது அரசு, காவல்துறையின் வேலை. பள்ளிக் கல்வித்துறைக்குச் செய்தி வருகிறது. அது குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. இது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கையோ, மற்ற எந்த நடவடிக்கையோ பள்ளி கல்விதுறை எடுக்க முடியாது.

அரசு உத்தரவில் இயங்கும் தனியார் பள்ளியாக இருந்தாலும், நிர்வாக ரீதியான காரணம்தான் கேட்க முடியுமே தவிர, குற்றவியல் நடைமுறை சட்டத்தையோ, உரிமை நடை முறை சட்டத்தையோ கடைப்பிடிக்க வேண்டியது பள்ளிக் கல்வித் துறை இல்லை. பெற்றோர் தரப்பில் அந்த பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள், இதை சமூகமும் நம்புகிறார்கள். அதை தீர விசாரிக்க வேண்டி கடமை அரசிடம் இருக்கிறது. அதைத் தான் செய்திருக்கிறது” என்றவரிடம், ‘இது குறித்து அமைச்சரிடம் இருந்து எந்த அறிக்கையோ, அறிவிப்போ, நடவடிக்கையோ இல்லை என்று விமர்சனம் முன் வைக்கப்படுகிறதே’ என்கிற கேள்வியினை முன் வைத்தோம்.

 ராஜீவ் காந்தி, தி.மு.க
ராஜீவ் காந்தி, தி.மு.க

``ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறுவிதமான பிரச்னைகள் இருக்கிறது. அப்படி இருக்கையில், அதிக அளவிலான பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் எல்லா விஷயங்களுக்கும், அமைச்சர் ‘நேரா வாங்க’ என்று எதிர்பார்க்க முடியாது. அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா? வருகிறார்களா? வரவில்லையா? என்பது தான் கேள்வி. இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதில் திருப்தி இல்லை என்றதும்தான் உடற் கூறாய்வுக்கு பெற்றோர் நீதிமன்றம் வருகிறார்கள்.

வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த குறிப்பிட்ட விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று தான் இருந்தார்களே தவிர, மற்றபடி அவர்களுக்கு நீதி வழங்கக் கூடாது என்கிற நோக்கிலோ, ஒரு சார்பாக இருக்க வேண்டும் என்பதிலோ செயல்படவில்லை. இன்னும் சொல்லும் போனால் அந்த பள்ளியின் தாளாளர் ஒரு குறிப்பிட்ட எதிர்க்கட்சியில் உறுப்பினராக இருந்து தீவிரமாக செயல்பட்டார் என்கிறார்கள். அந்த விவகாரங்களுக்குள் போகவில்லை. இதில் தீரா விசாரிக்க வேண்டும். நிறந்தர தீர்வு காண வேண்டும். எனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதற்காக ஒட்டு மொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பு என்பதாக மாற்றி ஒரு அமைச்சரை, அரசாங்கத்தைக் குறை சொல்வது ஏற்புடையதில்லை” என்கிறார்.

இது குறித்து பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வினோஜ் பி.செல்வம், “ஒரு பகுதி நேர அமைச்சராக இருந்து கொண்டு, முழு நேர உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுவதுதான் இன்றைக்குத் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறையில் சாபக்கேடாக பார்க்கிறோம். தமிழை வைத்து அரசு நடத்தக் கூடிய கட்சி நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழில் தேர்ச்சி அடையாத அவல நிலை. 600-க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் சேர்க்கை. தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமன முறை இல்லாமல் இருக்கிறது.

சமச்சீர்க் கல்வி என்று சொல்லி தமிழக மாணவர்களின் தரத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை வருகிறது என்றால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல் நடக்கிறது. அங்குப் போனால் தானே விவாதம் , யோசனை சொல்ல முடியும், பேச முடியும். எந்த விதமான தேசிய விவாத கூட்டத்திற்கு போகாமல் தமிழக மக்களின் நலனில் அக்கறை இல்லாதவர்களாக தி.மு.க-வினர் இருக்கிறார்கள்.

வினோஜ் பி. செல்வம்
வினோஜ் பி. செல்வம்

தமிழ்நாடு அமைதி பூங்கா என்கிற டேகை இழந்திருக்கிறது. அதற்குக் காரணம் கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த துயர சம்பவம். அப்படி இருந்தும் கூட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அந்த பள்ளி குறித்தோ, பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் நிலை குறித்தோ பேசாமல் இருக்கிறார். அது சம்பந்தமாக எந்தவித அறிவிப்போ, அறிக்கையோ விடாமல் எனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தான் இருக்கிறாரே தவிர கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மாணவி இறந்து ஒரு வாரம் என்ன செய்து கொண்டிருந்தது இந்த அரசும், பள்ளிக் கல்வித்துறையும்.

இந்த விஷயத்தில் உளவுத்துறை, அமைச்சகம், முதலமைச்சர், அரசாங்கம் மொத்தமும் ஃபெயிலியர் ஆகியுள்ளது” என்றவரிடம், ‘சம்பந்தப்பட்ட பள்ளி பா.ஜ.க பின்புலம் கொண்டதாகச் சொல்லப்படுகிறதே’ என்றோம். ``சொல்கிறவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து, சி.பி.சி.ஐ.டி விசாரணை தேவை என்று முதல் அறிக்கை கூறியது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தான். அன்று மாலையே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான பள்ளிகள், கல்லூரிகள் தி.மு.க வசம் இருக்கின்றன. கல்வியின் தரம், மாணவர்களின் நலன் பார்க்காமல், எப்படி கட்டணம் வசூலிக்கலாம் என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலாவது பள்ளி கல்வித்துறையும், தனியார் பள்ளிகளின் சங்கங்களும் அமர்ந்து இதற்கான தீர்வை காண வேண்டும். நீட் போன்ற விவகாரங்களிலிருந்து தி.மு.க தொடர்ந்து அரசியல் செய்வது, மாணவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துவது கேவலமான விஷயம். இதை எதிர் கொள்வது காலத்தின் கட்டாயம்” என்கிறார்.