Published:Updated:

``அதி வேகத்தில் வளர்கிறது நாட்டின் பொருளாதாரம்'' - மோடி கூறுவது யாருக்குப் பொருந்தும்?

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

``இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்திருக்கிறது’’ என்று பிரதமர் மோடி கூறுவது யாருக்குப் பொருந்தும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (CII) 2021-ம் ஆண்டுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பேசியவர். ``கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் நமக்கு அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுத் தந்திருக்கின்றன. தொழில்துறையில் உள்ளவர்களும், அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கும் பொருள்களைப் பயன்படுத்தவே ஒவ்வோர் இந்தியரும் விரும்புகிறார். நாட்டுப்பற்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருளோடு இணைந்தே இருக்கிறது. இதற்கு ஏற்ப நாட்டை மாற்ற வேண்டும். தொழில்துறையில் அதற்குத் தகுந்தாற்போல் கொள்கைகளையும், திட்டங்களையும் மாற்ற வேண்டும். புதிய உலகத்துடன் இணைந்து வளர இந்தியா தயாராக இருக்கிறது. அதற்காகப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது" என்றார்.

சி.ஐ.ஐ கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி
சி.ஐ.ஐ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து பேசியவர், ``இந்தியர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துவருகிறது. அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் இதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். இளைஞர்கள் கடினமாக உழைக்கவும், துணிச்சலான முடிவை எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். இளைஞர்கள் மனதில் எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. இந்தியாவில் தொழில் தொடங்கும் நிறுவனங்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா இன்று எளிதாகத் தொழில் செய்யக்கூடிய தரவரிசையில் பெரும் முன்னேற்றங்களை எட்டியுள்ளது. ஒருகாலத்தில் விவசாயம், வாழ்வாதாரமாக மட்டுமே பார்க்கப்பட்டது. சமீபகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் மூலம் நமது விவசாயிகளை உள்நாடு மற்றும் உலகச் சந்தைகளுடன் இணைக்கும் முயற்சியை எடுத்துவருகிறோம்" என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டு வருகிறது என்று பேசியது தொடர்பாக, பொருளாதாரம் சார்ந்து இயங்கும் வழக்கறிஞர் சத்யகுமாரிடம் பேசினோம். ``இந்தியாவில் பொருளாதாரம் மிக அழுத்தமான நிலையில்தான் இருக்கிறது. அதேவேளையில் பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது என்பதும் உண்மைதான். ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் ஒரு நேர்மறை எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் அப்படிக் கூறுகிறார். இந்தியாவில் வீழ்ச்சியிலிருந்த தொழில்களெல்லாம் இப்போதுதான் மீண்டு வருகின்றன. இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையை அடைந்து, பிறகு மீண்டும் அதிகரித்தால் அதை வளர்ச்சி என்று கூறலாம்" என்றார்.

வழக்கறிஞர் சத்யகுமார்
வழக்கறிஞர் சத்யகுமார்

மேலும், ``இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிது என்பது முற்றிலும் உண்மை கிடையாது. அதற்கான சட்ட திட்டங்களை மாற்றிவருகிறார்கள். என்னதான் சரிசெய்தாலும், மாற்றம் கொண்டுவந்தாலும், ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்குக் கடன் கிடைக்க வேண்டும். சாமானியர்களால் எளிதில் ஒரு தொழிலைத் தொடங்க கடன் வாங்கிவிட முடியாது. அந்தநிலை எப்போது உருவாகிறதோ அப்போதுதான் எளிதாகத் தொழில் தொடங்கும் நிலை உருவாகும். நாட்டின் பொருளாதாரம் மேம்பட மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் மத்திய நிதியமைச்சரின் முயற்சிகள் போதவில்லை என்றுதான் கூற வேண்டும்" என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமர் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் பேசினோம். ``பொருளாதாரத்தில் எங்கோ ஒரு குறியீடு அதிகரித்தவுடன் அதைப் பேசும் பிரதமர். 2020-2021-ம் ஆண்டில் 23.9 சதவிகிதம் கீழே போனதே அப்போது பேசியிருக்கிறாரா... இதுவரை அவர் என்றுமே பொருளாதாரம் கீழே போனதைப் பற்றிப் பேசியதே கிடையாது. 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லப் போகிறோம் என்று கூறினார்கள். பிரதமர் என்றுமே உண்மை பேசுவது கிடையாது. `கடந்த மார்ச் முதல் அக்டோபர் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்த 24 சதவிகிதம் பேருக்கு 3,000 ரூபாய்கூட கிடைக்கவில்லை’ என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அதே காலகட்டத்தில் மட்டும் 100 தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு 13 லட்சம் கோடி என்ற அளவுக்கு வளர்ந்திருப்பதாக இன்னோர் ஆய்வு கூறுகிறது" என்றார்.

க.கனகராஜ்
க.கனகராஜ்

தொடர்ந்து பேசியவர், ``அந்தக் காலத்தில் மட்டும் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு மணி நேரத்துக்கு 90 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அப்படியானால் இந்தப் பொருளாதார வளர்ச்சி என்பது யாருக்கானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில நாள்களுக்கு முன்னர் 76 டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை தற்போது 69 டாலராகக் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் விலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? இந்த லாபங்களெல்லாம் யாருக்குச் செல்கின்றன. தற்போது விவசாயத்தையும் சர்வதேச பெரும் முதலாளிகளிடம் வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும் முதலாளிகளின் மாநாட்டில் அவர்களுக்காகப் பேசியிருக்கிறர். ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பொருளாதாரம் வளர்கிறது என்றால், இங்கு யாரின் பொருளாதாரம் வளர்கிறது என்பதே கேள்வி!" என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.``இந்தியப் பொருளாதாரம் நலிவடைந்து விட்டதுஎன்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவர்கள்; இந்தியா சிறப்பாகச் செயல்படவில்லை என்று சொன்னால் மகிழ்ச்சி அடைபவர்கள்; இந்தியா குறித்துத் தவறான தகவல்கள் கூறினால் மகிழ்ச்சி அடைபவர்கள்... இவர்கள்தான் தற்போது நாட்டிலுள்ள எதிர்க்கட்சியினர். ஏனென்றால், உலகமே மிகப்பெரிய இக்கட்டில் கொரோனாவில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், உலகிலுள்ள மற்ற நாடுகளிலெல்லாம் பொருளாதாரம் எப்படிச் சரிந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாமல், புரியாமல் தொடர்ந்து இந்தியா குறித்து இழிவாகப் பேசுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடாக இந்தியா இருக்கிறது" என்றார்.

`பெகாசஸ் விவகாரம்' மறுப்பதற்கு இரண்டு வாரங்களா? - மத்திய அரசின் அணுகுமுறைக்குப் பின்னால்?
நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தொடர்ந்து பேசியவர், ``இந்தியாவில் தடுப்பூசி போடுவதைச் சரியாக செயல்படுத்த முடியாது என்று கூறினார்கள். தற்போது வரை 52 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். இது குறித்து வாய் திறக்கிறார்களா? இதைச் சாத்தியமே இல்லை என்று கூறியவர்கள் இது குறித்து இப்போது பேச மறுப்பது ஏன்? அதேபோல, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக முடங்கியிருந்த தொழில்களுக்குக் கடன் உதவி, பண உதவி வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், சாதாரண மக்களுக்கு உணவு, அரிசி, பருப்பு போன்றவை என்று பல்வேறு திட்டங்களை நாம் கொண்டு வந்ததன் மூலமாக இவ்வளவு மக்கள்தொகை கொண்ட நாட்டில் பொருளாதாரத்தை நிலைக்கச் செய்திருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து இது போன்று இவர்கள் கேள்வியெழுப்புவதும், கிண்டல் செய்வதுமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியலை ஒதுக்கிவிட்டு, நாடு மேலும் முன்னேறுவதற்குப் பாடுபட வேண்டும் என்பதே எங்கள் கட்சியினுடைய, எங்கள் பிரதமருடைய எண்ணமாக இருக்கிறது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு