Published:Updated:

ஈரோடு: ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்கள்; பரபரப்பான ஆட்சியர் அலுவலக வளாகம்! - என்ன நடந்தது?

ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை வழங்கிய நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஈரோடு: ஜப்தி செய்ய வந்த கோர்ட் ஊழியர்கள்; பரபரப்பான ஆட்சியர் அலுவலக வளாகம்! - என்ன நடந்தது?

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை வழங்கிய நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Published:Updated:
ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகம்

ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த கே.பி.நடராஜன், குப்பு விஜயன், தட்சிணாமூர்த்தி, அனிதா, தினேஷ்குமார், மணிமேகலை, லட்சுமி நாராயணன், சிந்து ஆகிய எட்டு பேருக்குச் சொந்தமான 5.45 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, அவர்களுக்கு 1984-ல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து 1986-ல் அவர்களது நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக, அரசுத் தரப்பிலிருந்து வழங்கிய தொகை குறைவாக இருப்பதால், கூடுதல் தொகை வழங்கக் கோரி, ஈரோடு சார்பு நீதிமன்றத்தில் இந்த எட்டுப் பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏக்கர் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.3,05,900 வீதம் வழங்க உத்தரவிட்டார். இந்தத் தொகையும் சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவாக இருந்ததால், மீண்டும் கூடுதல் தொகை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டுப் பேரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சதுர அடிக்கு ரூ. 5 வீதம் விலை நிர்ணயித்து 22.2.2016 அன்று அசலும் வட்டியும் சேர்த்து மொத்தம் 78,73, 635 ரூபாயை இந்த எட்டு நில உரிமையாளர்களுக்கும்  வழங்குமாறு தீர்ப்பளித்தது.  

நில உரிமையாளர்கள், வழக்கறிஞர்
நில உரிமையாளர்கள், வழக்கறிஞர்

இந்தத் தொகையை வழங்க மறுப்பு தெரிவித்து, அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2019-ம் ஆண்டில் கூறிய தீர்ப்பில், ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பு செல்லும் எனக் கூறி அரசுத் தரப்பில் தொடரப்பட்ட அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.  

அதன் பிறகும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகை வழங்க தாமதம் செய்ததால், `கட்டளை நிறைவேற்று’ மனு ஈரோடு முதலாம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 50 கம்ப்யூட்டர்கள், 50  டைப் ரைட்டிங் மெஷின்கள், 50 இரும்பு பீரோக்கள், 100 சீலிங் ஃபேன்கள், 200 மர மேஜைகள், 200 இரும்பு மேஜைகள், 500 சேர்கள், 4 லிஃப்ட்டுகள் ஆகியவற்றை ஜப்தி செய்ய ஈரோடு முதலாம் கூடுதல் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற அமினா ரவிகுமார் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர். பின்னர், நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞரும், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசும்
வழக்கறிஞர் சுப்ரமணியம்
செய்தியாளர்களிடம் பேசும் வழக்கறிஞர் சுப்ரமணியம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நில உரிமையாளர்கள் தரப்பு வழக்கறிஞர் சுப்ரமணியம், ``வரும் 15-ம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காவிடில் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பொருள்களை ஜப்தி செய்து கொள்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தோம். சற்று கால அவகாசம் அளிக்குமாறு கூறியதால் ஜப்தி நடவடிக்கையை நிறுத்திவைத்திருக்கிறோம்" என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பொருள்களை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் அந்த வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.