கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

எப்பதான் இறங்கும் எரிபொருள் விலை?

கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
News
கச்சா எண்ணெய்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, 2010-ம் ஆண்டுவரை மத்திய அரசே செய்துவந்தது.

கடந்த ஜனவரி மாதத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 63 டாலர் என்ற அளவில் இருந்து, தற்போது பாதிக்கும் குறைவாக 30 டாலருக்குப் பக்கத்தில் வந்துவிட்டது. ஆனால் பெட்ரோல் விலை மட்டும் கொஞ்சமும் குறையாமல் அதேவிலையில் தொடர்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதன் பலனை மக்களுக்குத் தராமல், மத்திய மாநில அரசுகள், பெட்ரோல், டீசல்மீதான வரிகளை அதிகரித்து அந்த லாபத்தைத் தன்வசப்படுத்தி யுள்ளன. கொரோனா ஊரடங்கால் பொதுமக்களும் தொழில் துறையினரும் பெரிய வருமான இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், மேலும் மேலும் வரிகளை மட்டும் அதிகரித்துக்கொண்டே வருவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பொறுத்தவரை, பெரும்பாலும் வளைகுடா நாடுகளைச் சார்ந்தே நாம் இருக்கிறோம். உலக நாடுகளிடையே ஏற்படும் போர்ப்பதற்றம், இயற்கைப்பேரழிவு, பொருளாதாரச்சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்துகொண்டே இருக்கும். கடந்த மார்ச் மாதத்தில் சவுதி அரேபியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் தொடர்பாக எழுந்த ஈகோ பிரச்னையால், கச்சா எண்ணெய் விலை, பேரலுக்கு 30 டாலர் வரை அதிரடியாகக் குறைந்தது. அப்போதே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைக்கப்படவில்லை. அதன்பின் உலகம் முழுக்க கொரோனாப் பரவல் தீவிரமானதால் விமானப்போக்குவரத்து மட்டுமல்லாமல், பல நாடுகளில் உள்நாட்டுப்போக்குவரத்தும் முடங்கியது. எனவே கச்சா எண்ணெயை வாங்குவதற்கு யாருமின்றி, தேக்கமானதால், அதன் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்று மீண்டது. அப்போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேர்மாறாக, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதன் பலனைத் தங்களுக்குச் சாதகமாக்கி, மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.13, டீசலுக்கு ரூ.10 என்று கலால் வரியை உயர்த்தியது. தமிழக அரசும் தன் பங்குக்கு, பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.3.25, டீசல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தியது. இதன்மூலம் மத்திய மாநில அரசுகள், தங்களது வருவாயைப் பெருமளவு அதிகரித்துக்கொண்டுள்ளன.

இன்றைய இக்கட்டான சூழலிலும்கூட பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், வரியை மட்டும் உயர்த்தும் அரசின் போக்கு சரியானதா என்று பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். “பெட்ரோல்மீது அரசாங்கம் கூடுதல் வரிவிதிப்பதை, பணக்காரர்களிடம் வாங்கி ஏழைகளுக்குக் கொடுக்கும் உத்தியாகவே நான் நினைக்கிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கு அரசாங்கம், நிதி உதவி, பொருளுதவி செய்கின்றது. அதற்கான வருமானம், வசதிபடைத்தவர்களிடமிருந்துதான் அரசுக்குக் கிடைத்தாக வேண்டும். பெட்ரோல்மீதான வரியைக் குறைக்கவேண்டு மென்று நாம் கூறுவோமென்றால், மக்களுக்குக் கிடைக்கும் சலுகைகளில் எதைக் குறைப்பது என்றும் நாம் குறிப்பிடவேண்டும்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

அதேபோல, பெட்ரோல் விலையேற்றத்தால் பொருள்களின் விலை உயரும் என்ற கருத்தை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. உதாரணமாக, காய்கறி விலை ஏற்றத்தால், விவசாயிக்குக் கூடுதல் பலன் கிடைப்பதில்லை. வரி விதிக்கும் அரசுக்கும் பெரிய பலன் கிடைப்பதில்லை. ஆனால் இடையில் கமிசன் தொகைதான் அதிகரிக்கப்பட்டு லாபம் பார்க்கப்படுகிறது” என்றார்.

கச்சா எண்ணெய் விலை.
கச்சா எண்ணெய் விலை.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, 2010-ம் ஆண்டுவரை மத்திய அரசே செய்துவந்தது. அரசே விலை நிர்ணயம் செய்தவரை, கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தாலும்கூட, மக்களின் நன்மைக்காக பெட்ரோல் விலையை ஒரு வரம்புக்குமேல் உயர்த்தாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கைகளுக்குச்சென்ற பின்னர், மக்களின் நலன் சார்ந்து பெட்ரோல் விலை நிர்ணயம் செய்வதைக் கைவிட்டுவிட்டார்கள். உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவதும், இறக்குவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால் கச்சா எண்ணெய் விலை ஏறும்போது பெட்ரோல் விலையைஅதிகம் ஏற்றுவதும், கச்சா எண்ணெய் விலை இறங்கும்போது பெட்ரோல் விலையை இறக்காமல் தவிர்ப்பதுமாக இருந்துவந்தனர். இதனால் கச்சா எண்ணெயின் விலைக்குறைவால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காத சூழலே தற்போது நிலவுகிறது.

இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்த மக்கள், ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டுவந்தாலாவது விலை குறையுமென்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இதுகுறித்து, பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் கூறும்போது, “கச்சா எண்ணெயின் தற்போதைய விலை தோராயமாக ஒரு லிட்டருக்கு 13 ரூபாய் வருகிறது. அந்தக் கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி, சுத்திகரிப்புச்செலவு, லாபம், போக்குவரத்து அனைத்தும் ஒரு லிட்டருக்கு தோராயமாக 5 ரூபாய் வரும். விற்பனை செய்யும் டீலருக்கான லாப வரம்பு 3 ரூபாய் என வைத்துக் கொண்டால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 21 ரூபாய் வரும். ஆனால், மத்திய மாநில அரசுகள், கலால் வரி, சாலை வரி, வாட் வரி என்றெல்லாம் சேர்த்து வசூலிக்கையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71 ரூபாய்க்குமேல் இருக்கிறது. ஆக, தோராயமாக 238% அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை, விலையுயர்ந்த சொகுசு காரைப் பயன்படுத்துபவரும் செலுத்துகிறார். டி.வி.எஸ் 100 போன்ற சிறிய டூவீலரைப் பயன்படுத்தும் வசதி குறைந்தவரும் செலுத்துகிறார். எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு அதிகப்படியான வரி வசூலிக்கப்படுவதே இல்லை.

வ.நாகப்பன், ஜோதிசிவஞானம்
வ.நாகப்பன், ஜோதிசிவஞானம்

அனைத்துப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி விதித்துள்ளதைப்போல பெட்ரோலுக்கும் ஜி.எஸ்.டி விதிக்கிறார்கள் என்று கொள்வோம். அதுவும் அதிகபட்சமாக 30% விதிக்கிறார்கள் என்றே கொள்வோம். அப்படி விதிக்கும்போது தோராயமாக 27 ரூபாய்தான் வரும். ஆக 27 ரூபாய் செலுத்தவேண்டிய இடத்தில், 71 ரூபாய் செலுத்தவைப்பது மிகப்பெரிய அநியாயம். மத்திய, மாநில அரசுகள், இந்தக் கொரோனா காலத்திலும் இதில் வரிவிதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்வதைப் பார்க்கும்போது, இது யாருக்கான அரசு என்ற கேள்வி எழுகிறது’’ என்றார்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

ஊரடங்கு முற்றிலும் அகற்றப்படும்போது கொரோனா அச்சம் காரணமாக பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவது குறையும். பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தரமக்களை இன்னும் அதிகம் பாதிக்கப்போவது பெட்ரோல், டீசல் விலையே!