Published:Updated:

உடைந்த தடுப்பணை: `அன்று கொதித்த பொன்முடி... இன்று செவிசாய்க்காத துரைமுருகன்?' -தவிப்பில் விவசாயிகள்

தளவானூர் தடுப்பணை
தளவானூர் தடுப்பணை ( தே.சிலம்பரசன் )

கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ந்தது. அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இன்று ஆட்சிப்பொறுப்பில் இருந்தும் நடவடிக்கை இல்லை எனத் தவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மேட்டூர், பவானிசாகர், வைகை போன்ற அணைகள் பல ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கின்றன. ஆனால் தமிழகத்திலுள்ள, விழுப்புரம் - கடலூர் மாவட்ட எல்லையில் கட்டப்பட்ட 25.37 கோடி ரூபாயிலான தடுப்பணை ஒன்று, கட்டப்பட்ட சில மாதங்களிலேயே இடிந்து விழுந்து வெள்ளம் பெருக்கெடுத்த காட்சி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது. 500 மீட்டர் நீளம் கட்டப்பட வேண்டிய இந்த அணையை 400 மீட்டர் நீளம் கட்டுவதற்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்ற கருத்துகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மூன்றே மாதங்களில் உடைந்தது தடுப்பணை... மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம்?

விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர், எனதிரிமங்கலம் இடையேயுள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25.37 கோடி மதிப்பீட்டிலான தடுப்பணை 2020 அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்டது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும்கொண்ட இந்த அணையை அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார். அந்த அணைதான் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு தமிழகமே அதிர்ந்தது.

சரிசெய்யப்படாமல் இருக்கும் தடுப்பணை.
சரிசெய்யப்படாமல் இருக்கும் தடுப்பணை.
தே.சிலம்பரசன்

அந்தச் சமயத்தில் காத்திருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார் இந்நாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ``சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாவட்ட ஆட்சியரில் யாராவது ஒருவர் இங்கு வரவில்லையென்றாலும் இங்கிருந்து செல்ல மாட்டோம். இல்லையெனில், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று சீறினார் பொன்முடி.

அணை உடைப்பு குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருந்த சி.வி.சண்முகம், ``அணை உடையவில்லை. எனதிரிமங்கலம் பகுதியிலுள்ள அணையின் தடுப்புசுவர் அருகே சுழல் ஏற்பட்டதால் ஊற்றெடுத்து ஏற்பட்ட பாதிப்பு எனச் சொல்கிறார்கள். அங்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு 7 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாகக் கட்டப்படும்" என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, தலைமைப் பொறியாளர் அசோகன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தது அப்போதைய மாநில அரசு.

இது குறித்து அப்போது நம்மிடம் பேசியிருந்த பொன்முடி, ``ஒரு மதகே அடித்துச் சென்றும், `தடுப்பணை உடையவில்லை... வெறும் மண்தான் அடித்துச் சென்றிருக்கிறது’ என்று பேட்டி கொடுக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். வெறும் மண்தான் அடித்துச் சென்றதென்றால், எதற்காக அரசிடம் 7 கோடி ரூபாய் கேட்கிறார் என்று தெரியவில்லை. தடுப்பணை உடைந்த விவகாரத்தில் அதைக் கட்டிய ஒப்பந்ததாரர் மீதுதான் முதல் தவறு இருக்கிறது. ஆனால், தடுப்பணையைக் கட்டிய ஒப்பந்ததாரர் தற்போது வேறொரு கட்டடத்தையும் கட்டிவருகிறாராம். மக்கள் உயிருடன் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்!’’ என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

விழுப்புரத்தில் 7.9 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை, ஒரே வருடத்தில் பலவீனமான அதிசயம்!

இந்தத் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டது சரிசெய்யப்படும் எனக் கூறி ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உதிர்த்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. `அணை உடைந்தபோது கட்சித் தொண்டர்களுடன் அங்கு காத்திருப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பொன்முடி, அமைச்சரான பின்பு இதுவரை இங்கு ஒரு நாள்கூட எட்டிப்பார்க்கவில்லை' எனக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

சி.வி.சண்முகம், பொன்முடி
சி.வி.சண்முகம், பொன்முடி

இது தொடர்பாக அணை அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் சிலரிடம் நேற்று பேசினோம். ``வர்ற மழைக்குள்ள சரி பண்ணினால்தான் எங்களுக்கு விவசாயம். அப்படிப் பார்த்தால் இன்னும் 60 நாள்களுக்குள்ள சரிபண்ணணும். ஐப்பசி மாசம் மழை பிடிச்சுடும். தண்ணி ஃபுல்லா போயிடுச்சுன்னா எங்களுக்குப் பொழப்பே இல்லைங்க. இந்தத் தடுப்பணை மூலம் தண்ணீர் தேக்கினால் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரையை ஒட்டிய பல கிராமங்கள் பயனடையும். அது மட்டுமில்லைங்க... இந்தத் தடுப்பணைக்கு முன்னாடியே மலட்டாறு கிளை நதியாகப் பிரிகிறது. அதுலருந்து இன்னொரு கிளை நதி பிரிகிறது. அதனால இன்னும் 20-க்கும் மேலான கிராமங்களுக்குப் பயன் கிடைக்கும். இந்த உடைப்பைச் சரி பண்ணினால்தான் இவை எல்லாமே நடக்கும். இல்லாட்டி எல்லா தண்ணியும் கடல்ல நேரா போய்ச் சேர்ந்துடும். அணை உடைந்தபோது சரிறதுக்குகு, ஒதுக்குவதாக சொன்ன 7 கோடி ரூபாய் என்னாச்சுன்னு தெரியலை. தடுப்பணை உடைந்தபோது கட்சிக்காரர்களுடன் ஓடிவந்து பொன்முடி ஆர்ப்பாட்டம் பண்ணாரு. இப்போ அமைச்சர் ஆகிட்டாரு. ஆனா, இன்னிக்கு வரைக்கும் அவர் வந்து எட்டிக்கூட பார்க்கலை. இந்த அணையைச் சரிசெஞ்சு தரணும்" என்றனர் ஆதங்கத்துடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். ``அணை கட்டுவதற்கு, தொடக்கத்திலேயே பெரிய தொகை கேட்டால் கிடைக்காமல் போய்விடும். தேவைப்பட்டால் பின்னாளில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று கூறி, 25.37 கோடிக்கு மட்டும் திட்ட மதிப்பீட்டை சம்பந்தப்பட்ட விழுப்புரம் நீர்வள அதிகாரிகள் அனுப்பினாங்க. அதுவும் அனுமதியாகி தளவானூர் கரையிலிருந்து பணி ஆரம்பமானது. திரிமங்கலம் பகுதிக்கு வரும்போதுதான், அனுமதிக்கப்பட்ட 400 மீட்டர் முடிந்து சுமார் 50 மீட்டருக்கு மேல இடைவெளி விழுந்தது. விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளருடன், நானும் சென்னை மண்டல அதிகாரியைப் பார்த்து, இதைப் பத்தி சொன்னோம். அதற்கு அந்த அதிகாரி, `எங்கருந்து திருப்பி நிதி கேக்குறது... போங்க’னு சொல்லிட்டாரு. அந்த 50 மீ இடைவெளியில மண்ணைக் கொட்டி, கருங்கல்லை வைத்து அடுக்கிவிட்டார்கள். தண்ணீர் நிரம்பி வழியும் நிலை வந்தபோது உடைப்பு ஏற்பட்டு ஒரு ஷட்டரையே அடித்துச் சென்றுவிட்டது. அன்று சாயங்காலமே பொன்முடி அவர்கள், கட்சிக்காரர்களுடன் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணினாரு. இதை ஸ்டாலின் அவர்களும் பிரசாரத்தில் பல இடங்களில் பேசியிருக்கிறார். இவ்வளவு பேசினாங்க... ஆனால் இன்று ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள் வந்துவிட்டது. இதுவரைக்கும் நடவடிக்கை இல்லை.

தட்சிணாமூர்த்தி, கலிவரதன்
தட்சிணாமூர்த்தி, கலிவரதன்

இப்போது எல்லா பணிகளும் முடிந்து அமைச்சரிடம் கையெழுத்து வாங்குவது மட்டும்தான் பாக்கி. 15.3 கோடியில் திட்ட மதிப்பீடு தற்போது போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நீர்வளத்துறையைப் பார்ப்பவர், அமைச்சர் துரைமுருகன்தான். அவர் கையெழுத்து போட்டால், பணி தொடங்கிவிடும். ஆனா, போடாமல் இருக்காரு. இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்க்கை அமைச்சர் கையிலதான் இருக்கு. அவரு மனசுவெச்சுதான் அணையைச் சரி பண்ணித் தரணும்.

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 17-ம் தேதி, இரண்டு மாவட்ட விவசாயிகளைத் திரட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம். 15.08.2021 நடந்த பேச்சுவார்த்தையின்போது, அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் சரிபண்ணி தருவதாக அதிகாரிங்க சொல்லியிருக்காங்க. அதனால், மறியல் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறோம்" என்றார்.

விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கலிவரதனிடம் பேசியபோது, ``இதைச் சரிசெய்யவில்லையெனில் சொர்ணாவூர் அணைக்கட்டு உடையும் பாதிப்பு உள்ளது. சரிசெய்வதில் காலம் தாழ்த்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, கால்நடைகள், மக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எனவே விரைவில் தடுப்பணையைச் சரிசெய்து தர வேண்டும். இல்லையெனில் எங்களுக்குப் போராடுவதை தவிர வேறு வழியில்லை" என்றார்.

ஸ்டாலின், துரைமுருகன்
ஸ்டாலின், துரைமுருகன்

மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு கட்டப்பட்ட இந்தத் தடுப்பணை, முறையாகச் சரிசெய்யப்பட்டு மக்களின் துயர் தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. துரித நடவடிக்கை எடுக்குமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு