Published:Updated:

இந்திய மாநிலங்களின் வரலாறு: வெடித்தது உண்ணாவிரதப் போராட்டம்! பிறந்தது மொழிவாரி மாநிலங்கள்|பகுதி -2

மொழிவாரி மாநிலங்கள்
மொழிவாரி மாநிலங்கள்

ஃபசல் அலி கமிஷன் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு, அதில் சில மாற்றங்கள் செய்து, 1956-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றியது. அதனடிப்படையில் இந்தியா 14 மொழிவாரி மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும் - முதல் பாகத்தை படிக்கக் கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்க...
இந்தியா: ஒன்றியம் முதல் கொங்குநாடு வரை! -தனிமாநில கோரிக்கைகளும், மாநிலங்கள் உருவான வரலாறும்|பாகம் 1

ஜேவிபி, தார் போன்ற கமிஷன்களின் பரிந்துரையை ஏற்று இந்தியாவின் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்படாமல், மூன்றுவகை மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என நான்கு பிரிவுகள்கொண்ட மாகாணங்களாகவே செயல்படத் தொடங்கின. காங்கிரஸ் அரசின் இந்த முடிவால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற காங்கிரஸ் தவறிவிட்டது எனக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்தச்சூழலில்தான், 1950-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே, பொட்டி ஶ்ரீராமுலு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கெனத் தனியாக ஆந்திர மாநிலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அரசு செவிசாய்க்காத நிலையில், 1952-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். சுமார் இரண்டு மாதங்கள் கடந்த ஶ்ரீராமுலுவின் உண்ணாவிரதப் போராட்டம் டிசம்பர் 15-ம் நாள் அவரது மரணத்தோடு முடிவடைந்தது. ஶ்ரீராமலுவின் மரணத்தால் வெகுண்டெழுந்த தெலுங்கு மக்கள், வன்முறைப் போராட்டங்களில் இறங்கினர். 10-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தால் மெட்ராஸ் மாகாணமே கலவர பூமியானது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்த, ஆந்திர மாநிலக் கோரிக்கையை ஏற்பதாக பிரதமர் நேரு அறிவித்தார். இதையடுத்து, சுதந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக அக்டோபர் 1, 1953-ம் ஆண்டு பிறந்தது ஆந்திர மாநிலம்.

பொட்டி ஶ்ரீராமுலு
பொட்டி ஶ்ரீராமுலு

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னரும்கூட, 1956-ம் ஆண்டு `விசால ஆந்திரா’ போராட்டம் நடத்தப்பட்டு ஹைதராபாத், தெலங்கானா உள்ளிட்ட பகுதிகள் ஆந்திராவோடு இணைக்கப்பட்டன.

ஃபசல் அலி கமிஷன்:

1953-ம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஃபசல் அலி தலைமையில் கே.எம்.பணிக்கர், குன்ஸ்ரு உள்ளிட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட `மாநில மறுசீரமைப்பு ஆணையம்’ அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு 1955-ம் ஆண்டு மத்திய அரசிடம் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.

ஃபசல் அலி கமிஷன் அளித்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றில் சில மாற்றங்களைச் செய்த மத்திய அரசு, 1956-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை இயற்றியது. அதனடிப்படையில் நவம்பர் முதல் நாள், இந்தியா 14 மொழிவாரி மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

ஃபசல் அலி
ஃபசல் அலி

1968-ம் ஆண்டு மதராஸ் ஸ்டேட் என்றழைக்கப்பட்ட சென்னை மாகாணம் `தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் பெயர் மாற்றத்துக்காக 1956-ம் ஆண்டு 75 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் தியாகமும் நினைவுகூரத்தக்கது.

மொழிவாரி மாநிலப் பிரிவினை: தமிழகம் பெற்றதும் இழந்ததும்:

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒன்றுபட்ட மதராஸ் மாகாணம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. ஆனால், தமிழகம் தனக்கு தார்மிக உரிமையுடன் பெற வேண்டிய பகுதிகளை மற்ற மாநிலங்களிடம் இழந்தது. அந்த அளவு 70,000 சதுர கிலோமீட்டர் எனக் கணக்கிடப்படுகிறது.

குறிப்பாக ஆந்திரா பிரிந்தபோது, சித்தூர், திருப்பதி, காளகஸ்தி என 32,000 ச.கி.மீ. பரப்பளவுகொண்ட பகுதிகள் பறிபோயின. ஆரம்பத்தில் `மதராஸ் மனதே’ என்று சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும் எனக் கூறி அந்த மாநிலத்தினர் உரிமைகொண்டாடியதும் உண்டு. அந்தநிலையில், `தலையைக்கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்’ எனக் கூறி வடக்கெல்லை போராட்டத்தைத் தொடங்கினார் ம.பொ.சி.

கர்நாடகா மாநிலத்துக்குள்ளும் கொள்ளேகால், மாண்டியா, கோலார் தங்கவயல் முதலான தமிழகத்துக்குச் சேர வேண்டிய பகுதிகள் அகப்பட்டுக்கொண்டன.

தமிழ்நாடு இழந்த பகுதிகள்
தமிழ்நாடு இழந்த பகுதிகள்

இதேபோல் கேரளாவிலும், தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகம் இழக்க நேரிட்டது. மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள் தெற்கெல்லை போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் தீவிரமடைந்த எல்லை மீட்புப் போராட்டத்தின் விளைவாக `படாஸ்கர் எல்லை ஆணையம்’ அமைக்கப்பட்டது.

ஆந்திராவிலிருந்து திருத்தணி உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன. கேராளாவிலிருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டன. ஆனால் தமிழகத்துக்குச் சேர வேண்டிய பெரும்பாலான பகுதிகள் இன்றுவரையிலும் அண்டை மாநிலங்களுக்குள்ளாகவே அடைபட்டுக்கொண்டிருக்கின்றன.

மொழிவாரி மாநிலம்
மொழிவாரி மாநிலம்

மேலும், அந்தப் பகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால், தமிழகத்துக்கான நதிநீர் பங்கீட்டுச் சிக்கலே தொடங்கியிருக்காது என ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1-ம் நாள் நடைபெறும், தமிழக தாயக நாள் நிகழ்ச்சியில், தமிழுணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் ஆதங்கப்பட்டுப் பேசுவதையும் காண முடிகிறது.

சுதந்திரத்துக்கு பின்பு பிரிக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம் ஆந்திரா. அப்போ சுதந்திரத்துக்கு முன்பு பிரிக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலம் எது... அப்படி ஒன்று உள்ளதா?

அடுத்த பாகத்தில்..!

அடுத்த கட்டுரைக்கு