தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்குமிடையேயான பனிப்போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. அண்மையில் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஏற்பட்ட சலசலப்பு மாநில அரசியலில் அனலைக் கூட்டியது.

இதற்கிடையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினைக்குப் பதிலாக மத்திய அரசின் இலச்சினை அச்சிடப்பட்டிருந்தது. இதுவும் ஆளுநருக்கு எதிராகப் பெரும் எதிர்ப்பைத் தூண்டியது.
இந்த நிலையில், கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று பொங்கல் விழா தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிவாரம் கட்டப்பட்டு விமர்சையாகத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை, ஆளும் தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் முற்றிலும் புறக்கணித்துவிட்டன.

அதேசமயம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர். அரசு உயரதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பா.ஜ.க தரப்பிலிருந்தும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இதேபோல கடந்த ஆண்டு, ஏப்ரல் 14-ல் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அழைப்பின்பேரில் ராஜ் பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தையும் தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.