Published:Updated:

மாற்றப்படும் மாவட்டச் செயலாளர்கள்?!... தடதடக்கும் அறிவாலயம் - என்ன நடக்கிறது திமுகவில்?

முதல்வர் ஸ்டாலின்

மே 10-ம் தேதி சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத் தொடர் முடிந்த பிறகு, சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராகுவதாகச் சொல்கிறது அறிவாலய வட்டாரம்.

மாற்றப்படும் மாவட்டச் செயலாளர்கள்?!... தடதடக்கும் அறிவாலயம் - என்ன நடக்கிறது திமுகவில்?

மே 10-ம் தேதி சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத் தொடர் முடிந்த பிறகு, சில மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராகுவதாகச் சொல்கிறது அறிவாலய வட்டாரம்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையிடம் அறிக்கை கேட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். எதிர்க்கட்சிகளுடன் மறைமுக கூட்டணி, ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான உள்ளடி வேலை பார்த்தவர்கள் என்று பல்வேறு படிநிலைகளில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கை சமீபத்தில் முதல்வர் கையில் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் சீனியர் காவல்துறை அதிகாரிகள், கட்சிக்குள் சில மாற்றங்களை அவர் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். திட்டமிடப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் குறித்து திமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

சிவபத்மநாபன்
சிவபத்மநாபன்

``உளவுத்துறை அளித்திருக்கும் அறிக்கையில் மூன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளரான சிவபத்மநாபன் மீது தன் சமூக அரசியல், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு ஆகியவை தொடர்பாகப் புகார்கள் தலைமை கழகத்துக்குச் சென்றுள்ளன. இத்துடன், சுரண்டை நகராட்சிக்கான தேர்தலில் திமுக வெற்றிபெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் உள்ளடி வேலை செய்து கட்சியைத் தோற்கடித்துவிட்டார் என சிவபத்மநாபன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. மொத்தம் 26 கவுன்சிலர் சீட்டுகள் கொண்ட சுரண்டை நகராட்சியில், திமுக ஒதுக்கத் தீர்மானித்த இடங்களைக் காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடார் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இந்த நகராட்சியில் திமுக காங்கிரஸ் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் தனித்தே களமிறங்கின. இதில், திமுக ஒன்பது இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. மேலும், அதிமுக ஆறு இடங்களிலும், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னையிலிருந்து வந்த உதவி:

தன் மகனைச் சுரண்டை நகராட்சி சேர்மன் ஆக்க முடிவு செய்த பழனி நாடார், தொடக்கத்திலேயே தேமுதிக கவுன்சிலரை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். திமுக தரப்பில் சேர்மன் பதவிக்கு மகளிரணி செயலாளர் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலன் முட்டி மோதினார். அவருக்காகத் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனிடம் பேசிய கனிமொழி `என்ன செய்தாவது சேர்மன் பதவியை திமுக பிடிச்சி ஆகணும்' என்று உறுதியான குரலில் சொன்னார். இதற்காகச் சென்னையிலிருந்து சில உதவிகளும் தென்காசிக்கு வந்தடைந்தன.

பழனி நாடார்
பழனி நாடார்

இதைத்தொடர்ந்து, அதிமுக, புதிய தமிழகம் கட்சிகளின் ஏழு கவுன்சிலர்களை கன்ட்ரோல் எடுப்பதற்கு திமுகவினர் தீவிரமாகினர். ஆனால், சென்னையிலிருந்து வந்த உதவிகளை முழுவதுமாக இந்த ஏழு கவுன்சிலர்களுக்கும் சிவபத்மநாபன் கொண்டுசேர்க்கவில்லை. இதனால், முந்திக்கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனி நாடார் நான்கு அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் சேர்மன் பதவியை தன் மகனுக்குப் பெற்றுக் கொடுத்துவிட்டார். துணை சேர்மன் பொறுப்பு அதிமுக வசம் சேர்ந்துவிட்டது. தன்னை மீறி கட்சியில் ஜெயபாலன் வளர்ந்து விடக் கூடாது என்பதற்காக சிவபத்மநாபன் செய்த இந்த உள்ளடி அரசியலை திமுக மேலிடம் எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பான புகார்களும் தலைமை கழகத்துக்குச் சென்றிருப்பதால் அவரை மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்குவதற்குக் கட்சி மேலிடம் தீர்மானித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளடி அரசியல்:

அதேபோல, சென்னை வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம் மீதும் புகார்கள் சென்றுள்ளன. சென்னை மாநகராட்சியில் 15 கவுன்சிலர் பதவிகளை அதிமுக கைப்பற்றியிருக்கிறது. இதில், ஏழு இடங்கள் மாதவரம் சுதர்சனம் பொறுப்பு வகிக்கும் பகுதிக்குள் வருகின்றன. திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் என்பவரின் மனைவி கவிதா நாராயணன் தான் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான ரேஸில் முன்னிலையிலிருந்தார். இவரை, மாதவரம் சுதர்சனத்தின் ஆதரவாளர்கள் கட்சியில் உள்ளடி வேலை செய்து திட்டமிட்டுத் தேர்தலில் தோற்கடித்து விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், சுதர்சனத்தை மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்க அறிவாலயம் தீர்மானித்திருக்கிறது.

மாதவரம் சுதர்சனம்
மாதவரம் சுதர்சனம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் சேர்மன் பதவியை திமுகவும் துணை சேர்மன் பதவியை அதிமுகவும் கைப்பற்றியுள்ளன. ஆனால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், டி.ஜெ. கோவிந்தராஜன் நினைத்திருந்தால் துணை சேர்மன் பொறுப்பையும் திமுகவே வென்றிருக்கலாம். அதிமுகவிடம் ரகசிய கூட்டணி போட்டுக்கொண்டு கோவிந்தராஜன் வாய்ப்பை நழுவவிட்டதாகக் கட்சித் தலைமைக்குப் புகார் சென்றுள்ளது. இதுமட்டுமின்றி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பல அரசு ஒப்பந்தங்களை கோவிந்தராஜனுக்கு நெருக்கமானவர்கள் தான் எடுத்துள்ளனர். இதனால் ஒப்பந்தம் கிடைக்காத திமுகவினர் பலரும் கோவிந்தராஜன் குடும்ப ஆதிக்கம் தொடர்பான புகார்களை அறிவாலயத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதுதவிர, கட்சியின் சீனியரான கும்மிடிப்பூண்டி வேணுவையும் கோவிந்தராஜன் தரப்பினர் மதிப்பதில்லை என்பது குறித்த தலைமைக்கு புகாராகியுள்ளது.

ராஜகண்ணப்பன் சூளுரை :

இந்த மூன்று மாவட்ட நிர்வாகிகளைத் தவிர, மற்றொருவரையும் நீக்கியாகவேண்டிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது கட்சித் தலைமை. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மீது சமூக ரீதியிலான புகார் சமீபத்தில் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இலாக்கா மாற்றப்பட்டார். இந்த புகார் பின்னணியிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தான் தூண்டிவிட்டதாகச் சந்தேகிக்கிறது ராஜகண்ணப்பன் தரப்பு. `முத்துராமலிங்கத்தைக் கட்சி பொறுப்பிலிருந்து நீக்காமல் நான் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன்' எனச் சூளுரைத்திருக்கிறாராம் ராஜகண்ணப்பன். சமீபத்தில் முதல்வரைச் சந்தித்த அவர், இதுதொடர்பாகவும் பேசியிருக்கிறார். இதனால், முத்துராமலிங்கத்தை மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, மாவட்டத்தை இரண்டாக உடைத்து புதிய நிர்வாகிகளை நியமிக்க திமுக தலைமை தயாராகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் மானிய கோரிக்கை விவாதக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு அமலுக்கு வரலாம்" என்றனர் அந்த சீனியர் தலைவர்கள்.

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து கட்சி ரீதியாகப் பெரிய மாற்றங்கள் எதையும் திமுக தலைவர் ஸ்டாலின் செய்யவில்லை. சமீப காலமாகக் கட்சி நிர்வாகிகள் சிலர் பொதுமக்களிடம் அடாவடி வசூல் செய்ய முற்படும் புகார்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பைக் கிளம்பியுள்ளன. இதில், டென்ஷனாகியிருக்கும் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு ஷாக் கொடும் விதமாக மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தை முன்னெடுப்பர் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism