கடந்த திங்கள்கிழமை தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர், மாநில அரசால் தயாரிக்கப்பட்ட உரையில், சில வார்த்தைகளைச் சேர்த்தும் பிரித்தும் உரையாற்றினார். அதேபோல, தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே அவையிலிருந்து வெளியேறினார். அவரின் இந்தச் செயலை தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தன. மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளான சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோவன், எம்.பி வில்சன் உள்ளிட்டோர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.
அப்போது கடந்த 9-ம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்துகொண்டவிதம் தொடர்பான புகாரை, அவர்கள் மனுவாக குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, ``சட்டமன்ற மரபுகளை மீறியும், தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தியும் வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஒரு மனுவை குடியரசுத் தலைவருக்கு அளித்திருக்கிறார். நாங்களும் எல்லா விவரங்களையும் குடியரசுத் தலைவரிடம் விளக்கி முதல்வர் அளித்த புகார் மனுவை ஒப்படைத்திருக்கிறோம். மனுவைப் பெற்றுக்கொண்ட பின்னர் `I Will see' என குடியரசுத் தலைவர் பதிலளித்திருக்கிறார். அதற்கான பொருள் என்ன என்பது விரைவில் தெரியவரும்" எனக் கூறினார்.