Election bannerElection banner
Published:Updated:

`ஒவைசி போட்டியிடும் 3 தொகுதிகளில் தி.மு.க-வுக்கு தோல்வி பயம்!’ - சொல்கிறார் வேலூர் இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம் ( Jerome )

``ஒவைசி கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் தி.மு.க-வுக்குப் பின்னடைவு ஏற்படும். இதனால், அந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி எளிதில் வெற்றிபெறும்’’ என்கிறார் வேலூர் இப்ராஹிம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ஹைதராபாத் எம்.பி அஸாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமின் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்தக் கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். 2016 பேரவைத் தேர்தலிலேயே வாணியம்பாடி, கிருஷ்ணகிர இரு தொகுதிகளிலும் ஒவைசி கட்சி போட்டியிட்டு பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலில், அ.ம.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருப்பதால் கணிசமான வாக்குகளைப் பெறுவதற்கான சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

அஸாதுதீன் ஒவைசி
அஸாதுதீன் ஒவைசி

ஒவைசி கட்சியைப் பொறுத்தவரை தமிழகத்தில் முஸ்லிம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. முஸ்லிம்களுக்காகச் செயல்படுவதாகக் கூறும் மற்ற கட்சிகள் அண்ணா அறிவாலயத்தை மட்டுமே சுற்றிவருகின்றன என்பதும் அவர்களின் விமர்சனம். ஒவைசி கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிக்கு பாதகமான அலை வீசக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம், ‘``உருது மொழி பேசும் மக்கள் மத்தியில் இயல்பாகவே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் உடையவர் ஒவைசி. அதனால்தான் ஹைதராபாத், மகாராஷ்டிரா, பீகாரில் அவரால் வெல்ல முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை இங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்கு உருது தெரியாது. அதனால்தான் உருது பேசும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறார் ஒவைசி. இந்த மூன்று தொகுதிகளிலும் இஸ்லாமியர்களின் ஒட்டுகளைப் பெருமளவு ஒவைசி உடைப்பார். அதேசமயம், தமிழகத்திலுள்ள வேறெந்தத் தொகுதியிலும் ஒவைசியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

தி.மு.க-வுடன் இணைந்து இஸ்லாமிய அமைப்புகள் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து தவறான பிரசாரம் செய்கிறார்கள். இதனால், 80 சதவிகித இஸ்லாமியர்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். ஒவைசி கட்சி போட்டியிடக்கூடிய மூன்று தொகுதிகளிலும் தி.மு.க-வின் வாக்கு வங்கியை உடைத்து 50 சதவிகித இஸ்லாமியர்களின் வாக்குகளை அவர் பெற்றுவிடுவார்.

பா.ஜ.க-வின் சிந்தாத்துக்கு நேரெதிரானவர் ஒவைசி. அவரைப்போய் பா.ஜ.க-வின் B டீம் என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. என்மீது என்ன மாதிரியான விமர்சனங்களை முன்வைக்கிறார்களோ அதைப்போலவே ஒவைசியையும் விமர்சித்துவருகிறார்கள். இது, தி.மு.க-வை சார்ந்து இருக்கிற இஸ்லாமிய அமைப்புகளின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஒவைசி கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் தி.மு.க-வுக்குப் பின்னடைவு ஏற்படும். இதனால், அந்தத் தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி எளிதில் வெற்றிபெறும். தோல்வி பயத்தால்தான் ஒவைசியை பா.ஜ.க-வின் பி டீம் என்று விமர்சிக்கிறது. அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவாக நானும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யவிருக்கிறேன்’’ என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு