Published:Updated:

தேர்தல் ஆலோசனை முதல் செஸ் ஒலிம்பியாட் வரை... வட மாநிலத்தவர்களை வாழ வைக்கிறதா திராவிட மாடல் அரசு?!

வட மாநிலத்தவர்களை வாழ வைக்கிறதா திராவிட மாடல் தி.மு.க அரசு!

``தமிழ்நாட்டில் ஒரு முகம், டெல்லியில் ஒருமுகம் என இரட்டை வேடம் போடுகிறது திமுக. அவ்வளவுதான் இவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு எல்லாம்!” - கல்யாணசுந்தரம்

தேர்தல் ஆலோசனை முதல் செஸ் ஒலிம்பியாட் வரை... வட மாநிலத்தவர்களை வாழ வைக்கிறதா திராவிட மாடல் அரசு?!

``தமிழ்நாட்டில் ஒரு முகம், டெல்லியில் ஒருமுகம் என இரட்டை வேடம் போடுகிறது திமுக. அவ்வளவுதான் இவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு எல்லாம்!” - கல்யாணசுந்தரம்

Published:Updated:
வட மாநிலத்தவர்களை வாழ வைக்கிறதா திராவிட மாடல் தி.மு.க அரசு!

`வடவர் சுரண்டல் எதிர்ப்பு, வட இந்திய எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, தமிழக வேலை தமிழருக்கே, ஒன்றியம் Vs திராவிடம் என முழங்கிவரும் தி.மு.க., தனது சொல்லுக்கு மாறாக ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளில் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு, வட இந்தியர்களுக்கு வாய்ப்பளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன'

ஸ்டாலின்,  பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

திராவிடப் பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான தி.மு.க, தேர்தல் வெற்றிக்காக, பீகாரைச் சேர்ந்த பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை நம்பி 380 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது என்றபோதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு, தி.மு.க-வின் தேர்தல் பிரசார மேடைகள், பந்தல், சேர்கள், நுழைவாயில், மைக்செட் அமைப்பது தொடங்கி அனைத்து பணிகளும் ஐபேக் நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டதாம். அவற்றைச் செய்வதற்கும் வட இந்தியத் தொழிலாளர்களே பணியமர்த்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் அதிருப்தி அடைந்த தமிழக மைக்செட் உரிமையாளர்கள், உள்ளூர் பந்தல் அமைப்பாளர்கள், `உள்ளூர் தொழிலாளர்களை புறக்கணித்துவிட்டு, வடமாநிலத்தவர்களுக்கு தி.மு.க. கான்ட்ராக்ட் வழங்குவது நியாயமா?' என எதிர்ப்புடன் வேதனையைப் பதிவுசெய்தனர்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

அதன்பிறகு தேர்தலில் வெற்றிபெற்று முதல் பொங்கலை எதிர்கொண்ட தி.மு.க., பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதலிலும், தமிழக நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு வடமாநில நிறுவனங்களிடம் வாங்கியதாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருள்களை சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்கியிருக்கிறது எனவும், அந்த பொருள்களில் இந்தி எழுத்து பொறிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு

குறிப்பாக, `இது தமிழர்களை அவமதிக்கும் செயல்; கொரோனா ஊரடங்கின்போது அரசுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த தமிழகத்தைச்சேர்ந்த உணவுப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை விட்டுவிட்டு, வட மாநில நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்தது ஏன்? தி.மு.க-வினர் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறார்களோ? அங்கேதான் பேரம் படிந்ததா?' என அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பின.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்புளிக்காமல் வட மாநிலக் கலைஞர்களைக்கொண்டு நடத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தியிருக்கிறது. மேலும், மாமல்லபுரத்தில் 45 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட `சிற்பக்கலைத் தூணை' மாமல்லபுரச் சிற்பிகளைக்கொண்டு செய்யாமல், வடமாநிலத்தவர்களைக் கொண்டு ஃபைபரில் செய்திருப்பதாகவும், இதன்மூலம் பழம்பெருமை வாய்ந்த தமிழக சிற்பிகளை புறக்கணித்து அவமானப்படுத்திவிட்டதாகவும் மாமல்லபுரம் சிற்பிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாமல்லபுரம் சிற்பக்கலை தூண்
மாமல்லபுரம் சிற்பக்கலை தூண்

இதுகுறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரத்திடம் பேசினோம். ``தி.மு.க-வின் வடவர் எதிர்ப்பு என்பதே ஒரு நாடகம். தேர்தல் பிரசாரத்தின்போது பேனர் முதல் பந்தல், மைக்செட் அமைப்பது வரை வட இந்தியர்களுக்கே வாய்ப்பளித்தது, பொங்கல் பரிசுப் பொருள்களை வட இந்திய நிறுவனங்களிடமிருந்தே வாங்கியது. குறிப்பாக, பொங்கல் பொருள்களின் கவர்களில் இந்தியில் எழுதியிருந்தது. இந்தி திணிப்பை எதிர்ப்பதாகச் சொன்ன தி.மு.க அரசு, தமிழ்நாட்டிலிருக்கும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இந்தியைத் திணித்தது, இது சொல்லுக்கும் செயலுக்கும் நேர் முரண்பாடாக இல்லையா?

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

மேலும், தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவோம் என்றிருந்தார்கள். ஆனால், இங்கிருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் வேலையை செய்திருக்கிறார்களா? எந்தவித சான்றிதழ், அடையாள அட்டையும் இல்லாமல் கட்டுக்கடங்காத அளவுக்கு வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்குள் வருகிறார்கள். தொழிலாளர்கள் ஒருபுறமிருக்க, தமிழ்நாடு சிறு, குறு வணிகர்களை காலிசெய்யும் வகையில் வடமாநில முதலாளிகளும் வியாபாரம்செய்ய படையெடுத்துவருகிறார்கள். `வரி ஏய்ப்பு செய்வதற்காகவே வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து தொழில்செய்கிறார்கள்' என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியே சொல்லியிருக்கிறார். ஆனால் இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதவிர மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்தியிருக்கிறது தி.மு.க அரசு. கேட்டால் மத்திய அரசு உயர்த்த சொல்லியதால் நாங்கள் உயர்த்தினோம் என்கிறார்கள். பென்சில் முதல் அரிசி வரை 5% ஜி.எஸ்.டி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கும் ஜி.எஸ்.டி கூட்டத்தில் தி.மு.க நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதிய கல்விக்கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொல்கிறார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியைப்பற்றி வாயே திறப்பதில்லை. ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி திருவிழாவுக்கு மழை வருகிறது என்று சாக்குசொல்லி தடைபோடுகிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி வரும்போது கருப்பு பலூன் பறக்கவிட்டவர்கள், இப்போது குனிந்து கும்பிடுபோட்டு வரவேற்கின்றனர்.

மோடி - ஸ்டாலின் தி.மு.க
மோடி - ஸ்டாலின் தி.மு.க

கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் தலைவர்களையே முன்னெச்சரிக்கையாக கைதுசெய்கின்றனர். அ.தி.மு.க ஆட்சியில்கூட இந்த அளவுக்கு நடக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தி.மு.க பா.ஜ.க-வுடன் முழு அண்டர்ஸ்டாண்டிங்கில் இருக்கிறது. அவர்களின் காலைப் பிடித்து சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரு முகம், டெல்லியில் ஒருமுகம் என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. இன்னமும் சௌக்கார்பேட்டையில் இந்தியில் `ஸ்டாலின் வாழ்க' என்ற போஸ்டர் தான் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் இவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்பதெல்லாம்!" என காட்டமாகப் பேசினார்.

இராஜீ வ்காந்தி
இராஜீ வ்காந்தி

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் இராஜீவ் காந்தியிடம் பேசியபோது, ``இந்திய அரசியலிலேயே தென் மாநிலங்களுக்கான அரசியல் உரிமை வேண்டும், புவியியல் சமூக விடுதலை வேண்டும் எனக்கோரி போராடிவரும் கட்சியாக, அதற்காக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் கட்சியாக தி.மு.க இருக்கிறது. தமிழர் நலன், தமிழ்மொழி காப்பு என மாநில உரிமைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம். சின்ன சின்ன டெண்டர் விவகாரங்களை வைத்துக்கொண்டு இப்படியொரு குற்றச்சாட்டை வைக்கமுடியாது. இந்தியா முழுக்க யார் வேண்டுமானாலும் டெண்டர் எடுக்கலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில்தான் வட இந்திய நிறுவனங்கள் டெண்டர் எடுத்திருக்கின்றன. மற்றபடி தமிழர் நலனுக்கு எதிராக என்றுமே நாங்கள் செயல்பட்டதில்லை. செயல்படப்போவதுமில்லை. அ.தி.மு.க கல்யாணசுந்தரத்தின் கருத்து அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கடந்த காலங்களில் அ.தி.மு.க அரசு, ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எப்படி அடிபணிந்து நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதை அவர்கள் சொல்வது நகைப்புக்குரிய செய்தி. முதலில் இந்தக் கேள்வியே அவதூறுதான்!" என்று சுருக்கமாக முடித்தார்.