Published:Updated:

`சிவாஜி கணேசனை மிஞ்சிய ஒரு நடிகர் அவர்'- யாரைச் சொல்கிறார் நாராயணசாமி?

”ஒருபக்கம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனப் பேசிவிட்டு மறுபுறம் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். பா.ஜ.கவின் இரட்டை வேடம் மொழியில் தெரிகிறது” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி

மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்களின் பாதயாத்திரையை துவக்கி வைப்பதற்காக புதுச்சேரி மாநில முதல்வர் நாரயணசாமி விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். காந்திஜியின் 151-வது பிறந்தநாளில் புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் அவர் பதிலளித்துப் பேசுகையில், “ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது.

புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி

தமிழகம் பிரிட்டிஷ் கலாச்சாரத்திலும், புதுச்சேரி பிரெஞ்சுக் கலாச்சாரத்திலும் இருந்தன. எனவே மதுவை ஒரே அளவில் முடித்துவிட முடியாது. ஆனால், படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” பிரதமர் மோடி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மிஞ்சிய ஒரு நடிகர். அவரது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் அமித்ஷா, ”இந்தி மொழி மட்டும்தான் இந்திய நாட்டின் மொழியாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே மொழி” எனக் கூறினார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சைக் கேட்டு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநில மக்கள் கொந்தளித்தனர். இதனை எதிர்த்து சில போராட்டங்களும் நடைபெற்றன. அதற்குப் பிறகு அதை மாற்றி, தற்பொழுது “மாநில மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என மீண்டும் அவரே சொல்லியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சிக்கு என தனிப்பட்ட கொள்கை எதுவும் கிடையாது. பிரதமர் மோடி, ஐ.நா சபையில் பேசும் போது கணியன் பூங்குன்றனாரின் வரிகளான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பேசுகிறார். தமிழகத்திற்கு வரும் போது இட்லி, தோசை எனப் பேசுகிறார். தமிழைப் பற்றி பாராட்டி பேசுகிறார். ஆனால், இந்தியைத் திணிக்கும் முயற்சியில் பா.ஜ.கவும், அதன் தலைவர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நாராயணசாமி
தூத்துக்குடி விமான நிலையத்தில் நாராயணசாமி

இந்தியில்தான் தேர்வெழுத வேண்டும், மாநில மொழிகளில் தேர்வெழுதக்கூடாது என தபால்துறை தேர்வில் உத்தரவு போட்டர்கள். இதனை எதிர்த்து பல கட்சிகளும் போராட்டம் நடத்தியதால் மறுபரிசீலனை செய்கிறார்கள். ஒருபக்கம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனப் பேசிவிட்டு மறுபுறம் இந்தியைத் திணிக்க முயல்கிறார்கள். பா.ஜ.கவின் இரட்டை வேடம் மொழியில் தெரிகிறது. தமிழகத்தில் நாங்குநேரி விக்கிரவாண்டி புதுச்சேரியில் ஒரு தொகுதி என 3 தொகுதி இடைத் தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்றார்.