Published:Updated:

வகுப்புவாத வன்முறை பாதிப்புகள் மறைக்கப்படுகின்றனவா?! - திரிபுரா சம்பவங்களும் பின்னணியும்

”வன்முறையை அடக்க முடியாமல் பிரச்னையை வேறு பக்கம் திசை திருப்பவே திரிபுரா அரசு கைது நடவடிக்கைகளைச் செய்துவருகிறது” என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. திரிபுரா வன்முறையின் பின்னணி என்ன?

வங்கதேசத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பந்தலில், இந்த முறை குரான் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் அங்கு ஏழு பேர் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான இந்துகளின் வீடுகள், கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. வங்கதேசத்தில் இந்துகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து திரிபுரா மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது திரிபுராவிலிருந்த மசூதிகளை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியதாகச் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டதோடு 144 தடை உத்தரவும் பிறக்கப்பிக்கப்பட்டது. இதற்கிடையே திரிபுரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டதாக 102 பேர் மீது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் கைதான இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திரிபுரா பத்திரிகையாளர்கள்
திரிபுரா பத்திரிகையாளர்கள்

வன்முறையை அடக்க முடியாமல் பிரச்னையை வேறு பக்கம் திசைதிருப்பவே இந்தக் கைது நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. திரிபுரா வன்முறையின் பின்னணி என்ன?

`30 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சியிலிருக்க இதைச் செய்யுங்கள்!’ - திரிபுரா முதல்வர் பிப்லப் குமாரின் யோசனை

திரிபுரா கலவரமும் அதன் பின்னணியும்

திரிபுராவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 10-க்கும் மேற்பட்ட வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. பனிசாகரில் நடந்த வன்முறையில் மசூதிகளும், இஸ்லாமியர்களின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பொதுக்கூட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி மறுத்திருப்பதோடு 144 தடை உத்தரவும் பிறப்பித்திருக்கிறது.

“இந்தத் தாக்குதலுக்குக் காரணம் பா.ஜ.க-வின் கூட்டணி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட பேரணிதான்” என திரிபுரா காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. “இந்தப் பேரணியில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்” எனவும் பனிசாகர் காவல்துறை தெரிவிக்கிறது. மற்றோர் இந்து அமைப்பான பஜ்ரங் தளத்தின் உள்ளூர் தலைவரான நாராயண் தாஸ் தலைமையிலான குழுவினர் திரிபுராவில் மசூதிகளின் முன் இருந்தவர்களைத் திட்டியதாகவும் வாள்களைக் காட்டி மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதையொட்டி “திரிபுரா மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது” என ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற அமைப்பு காவல்துறையில் புகார் அளித்தது. இதையடுத்து திரிபுரா மாநிலம் முழுவதுமுள்ள 150-க்கும் மேற்பட்ட மசூதிகளுக்குக் காவல்துறை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

திரிபுரா விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணி
திரிபுரா விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணி

“திரிபுராவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் வங்கதேசத்திலிருந்து வந்த இந்து அகதிகள் என்றாலும் இதற்கு முன்பு வங்கதேசத்தில் வன்முறைகள் நடந்தபோது இங்கு எந்தப் பிரச்னையும் நடந்ததில்லை” என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“வன்முறையை மறைக்கவே கைது நடவடிக்கை”

திரிபுராவில் 25 ஆண்டுக்கால கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. திரிபுராவில் இதுவரை இல்லாத வகுப்புவாத வன்முறைகள் தற்போது அதிகரித்திருப்பதற்குக் காரணம் பா.ஜ.க அரசுதான்” என்கின்றனர் எதிர்க்கட்சியினர். “திரிபுராவில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க., தனது கூட்டணி அமைப்புகளான வலதுசாரி அமைப்புகளை இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறது. தற்போது வலதுசாரி அமைப்புகளின் வன்முறை எல்லை மீறிச் செல்வதால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் வழக்கு தொடர்வது, கைதுசெய்வது எனப் பிரச்னையைத் திசைதிருப்ப பார்க்கிறார்கள்” எனவும் எதிர்க்கடசியினர் விமர்சனம் செய்கிறார்கள்.

“திரிபுராவில் இந்த மாதம் (நவம்பர்) நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் ஆதாயம் தேட பா.ஜ.க-வே திட்டமிட்டு இந்த வன்முறைகளைத் தூண்டிவிடுகிறது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. “திரிபுரா வன்முறை தொடர்பாகக் கருத்துகளை வெளியிட்டதற்காகவும், பதிவுசெய்ததற்காகவும் பத்திரிகையாளர்கள் உட்பட 102 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள திரிபுரா போலீஸாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. திரிபுரா வன்முறை தொடர்பாகச் சுதந்திரமான விசாரணை நடத்துவதற்காக டெல்லியிலிருந்து வந்த வழக்கறிஞர்கள் இருவர் மீதும், ‘திரிபுரா பற்றி எரிகிறது’ (Tripura is Burning) என்று பதிவிட்டதற்காக ஷியாம் மீரா சிங் என்பவர் மீதும் உபா சட்டம் போடப்பட்டுள்ளது.

சேதப்படுத்தப்பட்ட வீடுகள்
சேதப்படுத்தப்பட்ட வீடுகள்

“வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் தங்களின் தோல்வியை திசைதிருப்பவே இது போன்ற வழக்குகளை மாநில அரசு பதிந்திருக்கிறது. உபா போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் இத்தகைய சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடுவதை அரசாங்கம் ஒடுக்க முடியாது. பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வதற்கு பதிலாக இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும்” என அரசுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு