ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு, பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதன்படி, இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க நேரடியாகக் களமிறங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தாங்கள் போட்டியிட இருப்பதாகவும், பா.ஜ.க போட்டியிட்டால் தாங்கள் விட்டுத்தருவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்களை ஓ.பி.எஸ் அணியினரும், எடப்பாடி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் சந்தித்துவருகின்றனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறது. அதில், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில், எங்கள் தரப்பில் தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். எனவே, அ.தி.மு.க-வின் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, எனது கையொப்பமிட்டு அனுப்பப்படும் வேட்பாளர் பெயரை, தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். எனவே, இது குறித்து உரிய உத்தரவு வழங்க வேண்டும்" என முறையிட்டிருக்கிறது.

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு, இந்த முறையீடு தொடர்பாக வரும் திங்கள் கிழமை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியிருக்கிறது.