Published:Updated:

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு மசோதாவுக்குப் பின்னால் பாஜகவின் தேர்தல் அரசியலா?

நாடாளுமன்றம் - குளிர்காலக் கூட்டத் தொடர்
News
நாடாளுமன்றம் - குளிர்காலக் கூட்டத் தொடர்

தேர்தல் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது. இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்கள் என்ன?

தேர்தல் சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஜனவரி 1-ம் தேதியைக் கணக்கில் வைத்து 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடைமுறை ஒவ்வோர் ஆண்டும் நடக்கும். இதனால், ஜனவரி 2-ம் தேதிக்குப் பிறகு 18 வயது பூர்த்தியாகும் இளம் தலைமுறையினர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க ஓராண்டு காத்திருக்கும் நிலை தற்போது உள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஓராண்டில் 4 முறை புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் உட்பட மேலும் இரண்டு திருத்தங்களுடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இந்த மசோதாவை அறிமுகப்படுத்த அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு
ட்விட்டர்

மத்திய அரசு கொண்டு வரும் திருத்தங்கள் குறித்து உரிய விவாதம் நடத்த கால அவகாசம் வழங்காமல் வழக்கம்போல மசோதாக்களை நிறைவேற்றுகிறது எனவும் வாக்காளர் பெயருடன் ஆதாரை இணைக்கும் முயற்சியால் பலரின் வாக்குரிமை பறிக்கப்படும் எனவும் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தேர்தல் திருத்த மசோதாவை எதிர்ப்பதற்கான காரணம் என்ன எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்திலிடம் கேட்டோம், ``2011-லிருந்து இந்த விஷயம் ஆலோசனையில் இருக்கிறது. ஆதார் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவந்தபோது மிக முக்கியமான இடங்களில் அதை அடையாள அட்டையாகப் பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத்தான் பா.ஜ.க-வினர் இப்போது மீறியிருக்கிறார்கள். ஆதார் பெறுவதற்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள்மீது எந்த விசாரணையும் இல்லாமலேயே ஆதார் அளிக்கிறார்கள். விண்ணப்பம் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்துவதெல்லாம் இல்லை. ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது சட்டத்துக்குப் புறம்பானது. 2015-ல் தெலங்கானா, ஆந்திரா தேர்தலின்போது இதைச் செயல்படுத்த முயன்றார்கள். அப்போது கிட்டத்தட்ட 50 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேர்ந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்துக்குக் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அந்த நடைமுறையை நிறுத்தினார்கள்.

சசிகாந்த் செந்தில் காங்கிரஸ்
சசிகாந்த் செந்தில் காங்கிரஸ்

தேர்தல் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் வாக்காளர் பெயர்களை மறு வரையறை செய்வார்கள். இந்த நடைமுறைக்குத் தேர்தல் ஆணையத்திடம் போலிக் கண்டறிவதற்கென்று ஒரு செயலி இருக்கிறது. அதில் ஒருவருக்கு இரண்டு வாக்குகள் இருந்தால் அது காட்டிக் கொடுத்துவிடும். எனவே, போலியாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களைக் கண்டறிய நவீனச் செயல்முறையே தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது.” என்றவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆதார் தகவல்களில் 7 சதவிகிதம் தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என யுஐடிஏஐ சொல்லியிருக்கிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே போலியான தகவல்கள் இருக்கின்றன. இவ்வளவு வித்தியாசம் இருக்கும் இரு வேறு தரவுகளை ஒப்பிடும்போது முடிவுகள் எப்படிச் சரியாக இருக்கும்? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது என்பது மிகப்பெரிய நடைமுறை. அதைத் தேர்தல் அதிகாரிதான் செய்ய முடியும். வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் பெயர் ஒரு மாதிரி பதிவாகியிருக்கும். ஆதாரில் ஒரு மாதிரி பதிவாகியிருக்கும். இந்தத் தரவுகள் ஒன்றாக்கப்படும்போது பலருக்கும் வாக்குரிமை இல்லாமல் போக வாய்ப்பு அதிகம். ஒருவர் வாக்களிக்கச் செல்லும்போது உங்கள் போட்டோவுடனான வாக்குச் சீட்டு தரப்பட்டிருக்கும். அதுபோக உங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும், பின்னர் பூத் ஏஜெண்ட் இருப்பார்கள். இத்தனையையும் கடந்துதான் ஒருவர் வாக்களிக்கவே முடியும். இப்படியிருக்கும்போது

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

கள்ள ஓட்டைத் தடுக்கிறோம் என்று சொல்வது எப்படி ஏற்புடையதாக இருக்கும். இத்தனை ஆண்டுகளாகத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இப்போது ஏன் இதைச் செய்ய வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்...

``வாக்காளர் பெயருடன் ஆதாரை இணைத்தால் ஒருவரின் மொபைல் எண்ணை எளிதாக எடுத்துவிடலாம். தொழில்நுட்ப வளார்ச்சியை வைத்துக்கொண்டு மொபைல் எண்ணை வைத்தே ஒருவரின் அரசியல் பார்வை முதல் அன்றாட வாழ்க்கை முறை வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். இதை வைத்துக்கொண்டு உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப குறுஞ்செய்திகள், சோசியல் மீடியாவில் தகவல்களை உங்களுக்கு அனுப்ப முடியும். ஆனால், இதை தேர்தல் ஆணையம் எதிர்த்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட அரசியல் சார்பில்லாத 500 அமைப்புகள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க தலைமையிலான அரசு கொண்டுவரும் அனைத்துச் சட்டங்களும் நாட்டின் நலன், பாதுகாப்பு என்றுதான் சொல்வார்கள். அப்படிச் சொல்லிவிட்டால் யாரும் அதை எதிர்த்துப் பேச அஞ்சுவார்கள் இல்லையா. அப்படியான ஒரு உத்தியைத்தான் பா.ஜ.க அரசு பின்பற்றிக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் நீங்கள் சட்டங்களை இயற்றுகிறீர்கள் என்றால் அதை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையா?

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தேர்தல் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தில் இறுதியில் இதைக் கொண்டுவர வேண்டிய தேவை என்ன இருக்கிறது. எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது. ஜனநாயகம் என்பதே இருக்கக் கூடாது என்பதுதான் பா.ஜ.க-வின் விருப்பம். இது ஒரு அரசியல் நாடகம். ஆனால், இவர்களின் சர்வாதிகாரத்தையும் முட்டாள்தனத்தையும் தொடர்ந்து எதிர்த்துப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். இருப்போம்.” என இந்தச் சட்டத்திருத்தத்தில் இருக்கும் சிக்கல்கள் அற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்...

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம், “தேர்தல் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்பது நீண்ட நெடுநாட்களாக விவாதித்துக்கொண்டிருக்கும் விஷயம்தான். ஒருவரே இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார். அது பல்வேறு அரசியல் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த தேர்தல் சீர்திருத்தச் சட்ட மசோதாவில் ஆதார் எண்ணை இணைப்பது, தரவுகள் குறித்து சர்ச்சை இருந்தாலும் நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட அதைச் சரி செய்வதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டு அதனடிப்படையில்தான் ஆதார் எண் இணைக்கப்படவுள்ளது. இதைச் செய்வதன் மூலமாகப் போலி வாக்காளர்கள் அகற்றப்படுவார்கள். வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மை இருக்கும். தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இருக்காது என்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையத்துக்கும் இந்தியத் தணிக்கை அடையாள அட்டை அமைப்புக்கும்தான் தகவல்கள் தெரியும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நாராயணன் திருப்பதி பா.ஜ.க
நாராயணன் திருப்பதி பா.ஜ.க

கிட்டத்தட்ட 32 கோடி பேர் தாமாக முன் வந்து ஆதாருடன் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்திருக்கிறார்கள். ஆனால், இதைச் சட்டமாக்கி முறைப்படி அனைவருடைய வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்ற பேச்சு எழுந்ததால்தான் மத்திய அரசு சட்டமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத்தான் உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது.” என்றவர்...

“தேர்தல் சட்டத் திருத்த மசோதா மூலம் ஒருவருக்கு ஆண்டுக்கு நான்குமுறை தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் கிட்டத்தட்ட 95 - 97 சதவிகிதம் பேர் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவாகும். ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வீரர்களின் மனைவிகள் சேவை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்பதை அகற்றிவிட்டு வீரர்களும் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தேர்தல் நடத்த இடம் கேட்கும்போது சிலர் மறுக்கிறார்கள். ஆனால், இந்தச் சட்டத்தின்மூலம் எங்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த இடம் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியிருப்பதும் ஒரு முக்கியமான அம்சம். இந்த சீர் திருத்தங்களைத் தேர்தல் ஆணையமே முன் வந்து வழங்கியிருக்கிறது. அதைத்தான் மத்திய அரசு சட்டமாக அமல்படுத்துகிறது. அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதை எதிர்ப்பது ஆரோக்கியமான அரசியல் இல்லை.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்

இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்கள் பல்வேறு காலமாக விவாதிக்கப்பட்டவைதான். விவாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தேவையில்லாமல் கூச்சல் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இந்தச் சட்டத்தை யாருமே எதிர்க்கவில்லை. எனவே, எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு நாடாளுமன்றத்தை முடக்கும் மலிவான அரசியலைச் செய்கின்றன” என எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் சட்டத்தின் தேவையும் குறித்து விவரித்தார்...