ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும், அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி தரப்பு, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் 11-7-2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்குத்தான் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என இடையீட்டு மனு தாக்கல்செய்தது. இந்த மனுவின் மீது பதிலளிக்குமாறு ஓ.பி.எஸ் தரப்புக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. முன்னதாக, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், `அதிமுக-வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கக் கூடாது’ என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பதில் மனுவில், `2022 ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார்’ எனத் தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்கிற ஈரோடு மாநகராட்சியின் ஆணையாளர் சிவகுமார்தான் சின்னம் குறித்து முடிவுசெய்வார் என்று தெரிகிறது. இது குறித்து ஈரோடு மாநகராட்சியின் ஆணையாளராகவும், தேர்தல் நடத்தும் அலுவலராகவும் உள்ள சிவகுமாரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வெளியான பின்னர், அதில் கூறப்பட்டிருக்கிற தகவலை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் எந்தக் கருத்தும் கூறமுடியாது. எனவே, நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகே இது குறித்து கருத்துக் கூறமுடியும். அதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாது” என்று தெரிவித்தார்.