Published:Updated:

`முதல்வர்... துணை முதல்வர்.. அமைச்சர்..!’- சுமுகமாக முடிந்த சிவசேனா- என்.சி.பி-காங்கிரஸ் ஒப்பந்தம்?

மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கவுள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

`மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவார். என் தந்தைக்கு சத்தியம் செய்துகொடுத்துள்ளேன். அதற்கு அமித் ஷா, பட்னாவிஸோ தேவையில்லை' எனச் சில நாள்களுக்கு முன் உத்தவ் தாக்கரே கொந்தளித்தார். சிவசேனா பொய் சொல்கிறது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியதே தாக்கரேவின் சீற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கவுள்ளார். மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சிகளில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்கும் விழா, விதான் பவனில் நடைபெற்றது.

அஜித் பவார் - சுப்ரியா
அஜித் பவார் - சுப்ரியா

ராஜினாமா செய்த கையோடு அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரைச் சந்தித்தார். அஜித் பவாரை மன்னித்து ஏற்றுக்கொள்வதாக சரத் பவார் அறிவித்தார். எம்.எல்.ஏவாகப் பதவியேற்க வந்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சரத் பவாரின் மகளும் எம்.பி-யுமான சுப்ரியா சுலே, விதான் பவனுக்கு வந்த அஜித் பவாரை கட்டியணைத்துக்கொண்டார். அமைச்சரவையில் சிவசேனா கட்சிக்கு 16 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 13 இடங்கள் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பதவி சிவசேனாவின் தாக்கரேவுக்கு என்பது நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அப்போது பேசிய தாக்கரே சத்ரபதி சிவாஜி கண்ட மகாராஷ்டிராவை உருவாக்குவோம் என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்ற பேச்சு எழுகிறது. அஜித் பவாருக்கு அந்தப் பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சட்டமன்ற குழுத் தலைவருமான அஜித் பவார் ஆதரவுடன் பா.ஜ.க பட்னாவிஸ் 23-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். இதை எதிர்த்து சிவசேனா கூட்டணி நீதிமன்றம் சென்றது. பெரும்பான்மையை நிரூபிக்கும் படி பா.ஜ.கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் துணை முதல்வராகப் பதவியேற்று இருந்த அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து ராஜினாமா செய்வதாகக் கூறினார். தன்னால் ஆதரவு வழங்க முடியாது எனக் கூறினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸும் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.