Election bannerElection banner
Published:Updated:

`ஆர்யாவுக்கு வாழ்த்துகள்; பல ப்ளஸ்ஸும், சில மைனஸும் இருக்கு!’-முன்னாள் இளம் மேயர் ரேகா பிரியதர்ஷிணி

ரேகா பிரியதர்ஷிணி - ஆர்யா ராஜேந்திரன்
ரேகா பிரியதர்ஷிணி - ஆர்யா ராஜேந்திரன்

'``ஆர்யா ராஜேந்திரனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அவருக்கு முன்பாகவே இந்தியாவின் இளம் பெண் மேயராக நான் இருந்திருக்கிறேன். இதற்கு தி.மு.க முன்னோடியாக இருந்திருக்கிறது.''

ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தையும் தன்வயப்படுத்தியிருக்கிறார் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயது கல்லூரி மாணவியான இவர், கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு, மேயராகி, நாட்டின் இளம் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

மேயர் ஆர்யா ராஜேந்திரன்
மேயர் ஆர்யா ராஜேந்திரன்

கேரளாவுக்கு முன்னோடியாக தமிழகத்தில் 2006-ம் ஆண்டு சேலம் மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க சார்பாக கல்லூரி முடித்து ரிசல்ட்டுக்காகக் காத்திருந்த 24 வயது இளம்பெண் ரேகா பிரியதர்ஷிணி போட்டியிட்டு மேயரானார். அப்போது இந்தியாவின் இளம் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றார். இது குறித்து தற்போது ரேகா பிரியதர்ஷிணியைச் சந்தித்துப் பேசியபோது...

''முதலாவதாக தோழர் ஆர்யா ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இளம் வயதில் மேயராகியிருப்பது எனக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவருக்கு பாராட்டுகள் குவிவதைப்போல எனக்கும் பாராட்டுகள் குவிந்திருக்கின்றன.

சமத்துவம், சமூகநீதி, கல்வி, பெண் உரிமை என அனைத்துக்கும் இந்தியாவின் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்வது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 2006-ல் தி.மு.க தலைவர் கலைஞர், தளபதியார், வீரபாண்டியார் எனக்கு வாய்ப்பு வழங்கியதால் நான் 24 வயதில் சேலம் மாநகராட்சி மேயர் ஆனேன்.

`இந்தியாவின் இளம் பெண் மேயர்’ என்ற பெருமையைப் பெற்றேன். அப்போது சமூக வலைதளங்கள் இல்லாததால், நான் அவ்வளவாக அறியப்படவில்லை. தற்போது ஆர்யா ராஜேந்திரனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. அவருக்கு முன்பாகவே இந்தியாவின் இளம் பெண் மேயராக நான் இருந்திருக்கிறேன். இதற்கு தி.மு.க முன்னோடியாக இருந்திருக்கிறது. அதனால் எனக்கும், எங்கள் கட்சிக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷிணி
முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷிணி

இளம் வயதில் மேயராக பொறுப்பேற்பதில் பல ப்ளஸ்ஸும், சில மைனஸ்களும் இருக்கும். ப்ளஸ்ஸாகப் பார்த்தால் ஓடோடிச் சென்று மக்களுக்கு உற்சாகமாக சேவை செய்ய முடியும். எந்தப் பணியையும், துரிதமாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். தவறுகளை உடனுக்குடன் தடுக்க முடியும். மைனஸாகப் பார்த்தால் அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் திட்டங்கள் குறித்து விவாதிக்கும்போது அவர்களுக்கு ஈகோ வருகிறது. அதைச் சாதுர்யமாகக் கையாண்டு பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யும்போது இளம்தலைமுறைக்கு நாம் ரோல் மாடலாக உயர முடியும்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு