Published:Updated:

‘கை’ நழுவும் இந்தியா

Rahul Gandhi
பிரீமியம் ஸ்டோரி
Rahul Gandhi

ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-வைச் சேர்ந்த ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர்.

‘கை’ நழுவும் இந்தியா

ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-வைச் சேர்ந்த ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர்.

Published:Updated:
Rahul Gandhi
பிரீமியம் ஸ்டோரி
Rahul Gandhi
சமூகப்பதற்றம், பொருளாதார வீழ்ச்சி, கொரோனா என முப்பெரும் ஆபத்துகள் இந்தியாவைச் சூழ்ந்திருப்பதாக வேதனையோடு கட்டுரை எழுதியிருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.

ஆனால் அவரை இரண்டுமுறை பிரதமராக்கிய காங்கிரஸ் கட்சி, அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதைப் பற்றி அவர் எதுவுமே பேசவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, தொழில் நெருக்கடி எனப் பல்வேறு பிரச்னைகளில் இந்தியா சிக்கியிருப்பது உண்மைதான். இதற்கு எதிராகப் போராட வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸோ கந்தலாகிக் கிடக்கிறது. மம்தாவில் தொடங்கி ஜோதிராதித்ய சிந்தியா வரை மாநிலம் மாநிலமாகக் கரைந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மத்திய அமைச்சர், அகில இந்தியச் செயலாளர், காங்கிரஸின் மக்களவைத் துணைத்தலைவர் என இளம் வயதில் உயர்ந்த பதவிகளில் அமரவைத்து காங்கிரஸ் அழகுபார்த்த ஜோதிராதித்ய சிந்தியா, பதவி கிடைக்க வில்லையென்று கதரைக் கழற்றிவிட்டுக் காவித்துண்டை அணிந்திருக்கிறார்.

குஜராத்தில் நான்கு ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் திடீரென ராஜினாமா செய்திருக்கின்றனர். டெல்லியிலும் மண்ணைக் கவ்வியிருக்கிறது காங்கிரஸ்.

‘கை’ நழுவும் இந்தியா

தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2017 டிசம்பர் 16 அன்று காங்கிரஸ் தலைவரானார் ராகுல் காந்தி. வெளியே தெரிந்தும் தெரியாமலும் கட்சிக்குள் பல மாற்றங்களைக் கொண்டுவர அவர் முயன்றார். நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி தலைவர் பதவியை விட்டு விலகினார் என்பதுதான் அவரால் கொண்டுவர முடிந்த மாற்றம். இப்போது 70 வயதைக் கடந்து இயலாமையில் இருக்கும் சோனியாவையே மீண்டும் தலைவராக்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொடுமை என்னவென்றால், காங்கிரஸின் தோல்விக்கும் அடுத்தடுத்த வீழ்ச்சிக்கும் காரணம் கற்பிக்கும் மூத்த தலைவர்கள் பலரும் ‘காங்கிரஸ் தன்னை மீள் ஆய்வு செய்யவேண்டும்’ என்று சொல்வதுதான்.

அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவது காந்தி (உண்மையில் அது நேரு குடும்பம்!) குடும்பத்தைத்தான். தோல்விக்கு ஒருவரை அல்லது ஒரு குடும்பத்தைக் குறைகூறும் இந்தத் தலைவர்கள்தான், அந்தக் குடும்பத்துக்கே தலைமைப்பீடத்தைத் தூக்கிக்கொடுத்துத் தலையில் தூக்கி வைத்தும் ஆடியவர்கள்.

‘கை’ நழுவும் இந்தியா

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸை ஜெயிக்க வைத்ததில் சிந்தியாவின் பங்கு என்ன என்று ஊருக்கே தெரியும். ஆனால் 70 வயது கமல்நாத்தை முதல்வராக் கினார்கள். அவரால் மாநிலத்தலைவர் பதவியையும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விட்டுத்தர மனமில்லை. இப்போது மொத்தமும் போய்விட்டது.

சிந்தியாவைப் போலவே காங்கிரஸால் நோகடிக்கப்பட்டு வெளியே போனவர்கள், மம்தா, சரத்பவார், ஜெகன்மோகன்ரெட்டி, ஜி.கே.வாசன் என அந்தப்பட்டியல் வெகுநீளம். மனம் நொந்த நிலையிலும் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, குல்தீப் பிஷ்னாய், சந்தீப் தீக்‌ஷித், ஜித்தின் பிரசாத் போன்ற இளம் தலைவர்கள் இன்னும் இருப்பது ஆறுதல். ஆனால் இவர்களை காங்கிரஸ் எப்படித் தக்கவைக்கப்போகிறது என்பது கேள்விக்குறி.

இதே நிலை தொடர்ந்தால், பா.ஜ.க எதிர்பார்க்கும் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா (Congress Mukt Bharat)’ வெகுசீக்கிரமே சாத்தியமாகிவிடும். இந்த நிலையிலிருந்து காங்கிரஸால் மீளமுடியுமா?

ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா-வைச் சேர்ந்த ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர்.

‘‘காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள்தான் மாநிலத்தின் கள யதார்த்தங்களைக் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத் தெரிவிக்கும் இடத்தில் உள்ளார்கள். அவர்களுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. அவர்கள் கொடுக்கிற தகவல்களைத்தான் உண்மை எனத் தலைமை நம்புகிறது. இதுதான் பல பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்” என்கிறார் அவர்.

காங்கிரஸ் வீழ்ச்சிக்கான காரணங்களை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

“மக்கவைத் தேர்தலில் இந்துத்துவவாதிகள் பெரும் வெற்றிபெற்று அதிகாரத்தில் உள்ளனர். இத்தகைய சூழலில், ‘பெரும்பான்மை ஆதிக்கம்’ என்ற கருத்தாக்கம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் உருவாகியுள்ளது. அத்தகைய பெரும்பான்மைவாதம்தான், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை வீழ்த்திக்கொண்டிருக்கிறது. அந்த நிலைமை, ஆபத்தான சூழலை நோக்கிப்போய்க் கொண்டிருக்கிறது. இந்துத்துவக் கொள்கையைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் பா.ஜ.க-வுக்கு இல்லை. கடந்த ஐந்தாண்டுக் கால பா.ஜ.க அரசு, முற்றிலும் தோல்வியடைந்த ஓர் அரசு. ஆனால், பெரும்பான்மைவாதம் மூலமாக தேர்தலில் அது வெற்றிபெற்றுள்ளது. அதன் பெரும்பான்மை வாதத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. பெரும்பான்மைக் கருத்தியல் தான் இன்றைக்கு வெற்றிபெறும் என்ற சூழல் உருவான நிலையில், சட்டையைக் கழற்றி, பூணூல் போட்டுக்கொண்டு ராகுல் காந்தி கோயிலுக்குப் போகிறார். இதன் மூலம் அவரால் வெற்றிபெற முடியாது. காரணம், அதைவிடத் தீவிரமான மத அடையாளங்களை வெளிப்படுத்துகிற கட்சியாக பா.ஜ.க இருக்கிறது.

‘கை’ நழுவும் இந்தியா

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சுமார் மூன்று மாதங்களாக ஷாகீன்பாக்கில் பெண்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி அங்கு போகவே இல்லை. பெரும்பான்மைவாதத்தின் தாக்கம் அந்த அளவுக்கு இருக்கிறது. இது, இந்தியாவை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது” என்கிறார் அ.மார்க்ஸ்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், “டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க மீதான வெறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளாக மாறியிருக்க வேண்டும். ஆனால், ஷாகீன் பாக் பக்கமே போகாத கெஜ்ரிவால் வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் மிக மோசமான வன்முறைகள் நிகழ்ந்தபோதும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

‘கை’ நழுவும் இந்தியா

மோடி அமித் ஷா என்கிற இரட்டையர்களின் வீச்சும் தாக்கமும் பல எதிர்க்கட்சித் தலைவர்களின் கூர்மையை மழுங்கடித்துள்ளது. உதாரணமாக, மம்தா பானர்ஜியின் செயல்பாடுகள் முன்புபோல வேகமாக இல்லை. நிதிஷ்குமார் போன்ற சோசலிஸ்ட்வாதிகள்கூட தத்துவரீதியாகத் தளர்ந்து போயுள்ளார்கள். மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்டுவதுதான் தன் வாழ்நாள் கடமை என்று தேர்தலுக்கு முன்பு அறிவித்த சந்திரபாபு நாயுடு அப்படியே முடங்கிப்போய்விட்டார்.

சிறுபான்மை மக்கள் பக்கம் இருக்கிற நியாயங்களைப் பேசிவிட்டாலே பெரும்பான்மை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

‘எங்களுடன் இருங்கள். அல்லது, தனியாக இருங்கள். காங்கிரஸ் பக்கம் மட்டும் போய்விடாதீர்கள்’ என்ற அறிவுறுத்தல் ஏதோ ஒரு வழியாக பா.ஜ.க-விடமிருந்து மாநிலக் கட்சிகளுக்குப் போகிறது.

மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிற மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இப்படியான அழுத்தங்கள் தரப்படுகின்றன. பா.ஜ.க-வுக்கு மாற்றாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, எல்லா மாநிலக் கட்சிகளையும் ஒரே தளத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பா.ஜ.க முடக்குகிறது.

பொருளாதார வீழ்ச்சி உட்பட மக்களை பாதிக்கிற பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பவே வெறுப்பு அரசியல் வளர்த்தெடுக்கப் படுகிறது என்ற உண்மை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் நேர்மையாகச் செயல்படவில்லை. நீதிமன்றங்களும் துணை செய்யவில்லை, காவல்துறையும் துணை செய்யவில்லை, ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாகச் செயல்படுகின்றன என்கிற சூழலில் எதிர்க் கட்சிகள் அரசியல் நடத்துவது மிகப்பெரிய சவால். ஆனாலும், இதிலிருந்து மீண்டுவருவோம்” என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

நூற்றாண்டுக்காலப் பாரம்பர்யம் கொண்ட காங்கிரஸ், இப்போது மாநிலக் கட்சிகளைவிடச் சுருங்கிப்போய் இருக்கிறது. வரலாற்றுத் தவறுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுத் தன்னை மீட்டெடுத்துக்கொள்ளுமா இல்லையா என்பது கதர்ச்சட்டைக்காரர்கள் ‘கை’களில்தான் இருக்கிறது.

காங்கிரஸ் பயணித்த பாதை!

 • சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி, சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியலில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்கியது. இந்தியாவை முதல் 30 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிதான் ஆண்டது.

 • முதன் முறையாக, 1977-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்து, ஜனதா கட்சியிடம் ஆட்சியை இழந்தது.

 • 1980-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 42.26 சதவிகித வாக்குகளைப் பெற்று, 374 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.

 • 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு, ராஜீவ் காந்தியை முன்னிறுத்தி நடைபெற்ற தேர்தலில் 48.12 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று 414 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ராஜீவ் காந்தி பிரதமரானார். சுதந்திர இந்தியாவில் அவ்வளவு பலத்துடன் இதுவரை எந்தக் கட்சியும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 • போஃபோர்ஸ் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸிலிருந்து வி.பி.சிங் வெளியேறினார். 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் 197 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. உட்கட்சிப் பூசலால் வி.பி.சிங் ஆட்சியை இழந்தார். பிறகு, காங்கிரஸ் உதவியுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார். 1991-ம் ஆண்டு சந்திரசேகர் அரசு கவிழ்ந்து மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த நேரத்தில், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

 • 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் 35.66 சதவிகித வாக்குகளைப் பெற்று 244 இடங்களில் காங்கிரஸ் வென்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.

 • 1996-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 28.80 சதவிகித வாக்குகளைப் பெற்று 140 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அப்போது, வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. அந்த ஆட்சி 16 நாள்களில் கவிழ்ந்தது. அதையடுத்து, தேவ கவுடா தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதற்கு, வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவு அளித்தது. 1997-ம் ஆண்டு தேவ கவுடா ஆட்சிக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கியது.

 • 1998-ம் ஆண்டு ஐ.கே.குஜ்ரால் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சிக்கான ஆதரவை ஓராண்டுக் காலத்தில் வாபஸ் பெற்றது காங்கிரஸ்.1998-ல் நடைபெற்ற தேர்தலில் 26.14 சதவிகித வாக்குகளைப் பெற்று 141 இடங்களையே காங்கிரஸால் பிடிக்க முடிந்தது. அதனால், வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது.

 • 1999-ல் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்து மீண்டும் பொதுத்தேர்தல் வந்தது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி வந்தார். சோனியா தலைமைக்கு வருவதை எதிர்த்து சரத் பவார் உள்ளிட்டோர் காங்கிரஸிலிருந்து வெளியேறினர்.1999-ல் நடைபெற்ற தேர்தலில் 28.30 வாக்குகள் பெற்று 114 இடங்களையே காங்கிரஸ் பிடித்தது. வாஜ்பாய் தலைமையில் ஆறு ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது.

 • 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 26.70 சதவிகித வாக்குகளைப் பெற்று 145 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தது. மன்மோகன் சிங் தலைமையிலான அந்த ஆட்சி இடதுசாரிகளின் ஆதரவுடன் நடைபெற்றது.

 • 2009-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 28.55 சதவிகித வாக்குகள் பெற்று 206 இடங்களை காங்கிரஸ் வென்றது. மன்மோகன் சிங் பிரதமராக மீண்டும் அமர, இரண்டாவது முறையாக ஐ.மு.கூட்டணி ஆட்சி தொடர்ந்தது.

 • 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வி கிடைத்தது. நரேந்திர மோடி பிரதமரானார். காங்கிரஸ் கட்சி 19.52 சதவிகித வாக்குகளைப் பெற்று வெறும் 44 இடங்களையே பிடித்தது. இதனால், எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பையும் அது இழந்தது.

 • 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் பொதுத்தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே வென்றது. பா.ஜ.க 303 இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அதனால், மீண்டும் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டார் சோனியா காந்தி.

பிரிந்துபோன பெரும்புள்ளிகள்!

1923-ம் ஆண்டு சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகிய இருவரும் காங்கிரஸிலிருந்து பிரிந்து ஸ்வராஜ் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்கள் 1939-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய பார்வர்டு கட்சியை ஆரம்பித்தார்கள். அன்று தொடங்கி இன்றுவரை ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் பலர் மாநிலங்களில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக மாறி, மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றி...

சரத் பவார்,மம்தா பானர்ஜி,ஜெகன்மோகன் ரெட்டி
சரத் பவார்,மம்தா பானர்ஜி,ஜெகன்மோகன் ரெட்டி

சாதனை பவார்!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்தவர் சரத் பவார். காங்கிரஸிலிருந்து இரு முறை விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தவர். 1988, 1991 என இரு முறை மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 1999-ம் ஆண்டு சோனியா காந்தியின் தலைமையை எதிர்த்து பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோருடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். பிறகு, காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தார். அந்தக் கூட்டணி 15 ஆண்டுகள் மகாராஷ்டிராவை ஆண்டது. ஆனாலும், இன்றுவரை அவர் காங்கிரஸில் இணையவில்லை.

வங்கப் புலி!

மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக இருந்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் மாநில அரசியலுக்குப் போக விரும்பினார். 1997-ம் ஆண்டு மேற்குவங்க மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகும் முனைப்பில் இருந்த மம்தாவை, மேற்கு வங்க காங்கிரஸ் சீனியர்கள் ஓரங்கட்டினர். கடுப்பான மம்தா, காங்கிரஸ் தலைமையைக் கடுமையாக விமர்சித்தார். அவருக்குப் பெரும் மக்கள் ஆதரவு கிடைத்தது. காங்கிரஸுக்கு எதிராக கல்கத்தா எஸ்பிளனேடு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டினார். ‘துணிவிருந்தால் காங்கிரஸிலிருந்து என்னை நீக்கிப் பாருங்கள்’ என்று சவால் விட்டார். 1998-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். ஒரு காலத்தில் மேற்கு வங்கத்தை ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு அங்கு காணாமற்போய்விட்டது.

வெற்றிபெற்ற ரெட்டி!

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தனிப்பெரும் தலைவராக விளங்கியவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. ஆந்திர முதல்வராக இருந்த அவர் 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிது காலம் காத்திருக்குமாறு அவரை அறிவுறுத்தியது காங்கிரஸ் தலைமை. வயதான ரோசய்யா முதல்வராக்கப்பட்டார். பிறகு, சட்டமன்ற சபாநாயகராக இருந்த கிரண்குமார் ரெட்டி முதல்வரானார். உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுடன், பல அவமானங்களையும் காங்கிரஸில் அவர் சந்தித்தார். ஒரு கட்டத்தில் தனிக்கட்சி ஆரம்பிக்க முடிவுசெய்த ஜெகன்மோகன் ரெட்டி, 2010-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இன்றைக்கு அவர்தான் ஆந்திராவின் முதல்வர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism