இந்தியாவில் அனுமன் ஜெயந்தி மற்றும் ராம நவமி அன்று, டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்து அமைப்பினர் பேரணிகளை நடத்தினர். அப்போது திடீரென இந்து-முஸ்லிம் மக்களிடையே கலவரங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து, கலவரங்கள் வெடித்த பகுதிகளிலிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையாக மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் குடியிருப்புகளை புல்டோசர்களைக்கொண்டு தகர்த்தன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பா.ஜ.க-வை, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும் இந்த விவகாரத்தில், ``இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது" என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த மெகபூபா முஃப்தி, ``அவர்கள் சிறுபான்மையினரின் வீடுகளை மட்டும் புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்கவில்லை. இந்த நாட்டின் மதச்சார்பற்ற கலாசாரத்தையும்தான். வேலைவாய்ப்பாக இருக்கட்டும், பணவீக்கமாக இருக்கட்டும், எல்லாத் துறைகளிலும் அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள். இப்போது இந்து-முஸ்லிம் பிரிவினையை மட்டுமே அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இந்த நாட்டைப் பற்றிய தொலைநோக்கு பார்வை இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், அவர்களின் (பா.ஜ.க) தேசியவாத கொள்கைக்கு இணங்காத மக்களை, பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு அவர்கள் கூறுகையில், இந்த அரசு இந்தியாவுக்குள் பல மினி பாகிஸ்தான்களை உருவாக்குகிறது" எனக் கூறினார்.
