உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 50 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மாநில அரசு உறுதியெடுத்திருப்பதாக, அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிருக்கிறது.

இதற்கிடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில், கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், உதவி கலெக்டர்கள் அளவிலான அதிகாரிகள் தலைமையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை, வாரத்தின் அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும் செயல்பட வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்த நிலையில், அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம், மாவட்ட உதவி கலெக்டர் காட்டமாகப் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ``உங்களுக்குத் தேவைப்பட்டால் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். மேலும் யாரேனும் நோய்வாய்ப்பட்டால் ஒரு மருத்துவர் வருவார், இவைதான் வெள்ளச்சாவடிகள் நிறுவப்படுவதற்குக் காரணம். நாங்கள் ஒன்றும் உணவு டெலிவரி நிறுவனம் நடத்தவில்லை. அரசும் அப்படி எதுவும் நிறுவனத்தை இயக்கவில்லை" என்று கூறினார்.