Published:Updated:

`எதிர்க்கட்சியினரை என்ன செய்ய வேண்டும் என்பது அரசுக்குத் தெரியும்!'- மதுரை கூட்டத்தில் இல.கணேசன்

'இலங்கை செல்ல வேண்டும் என்றுதான் இலங்கைத் தமிழர்கள் நினைக்கின்றனர்' என்று குடியுரிமை மசோதா ஆதரவுக் கூட்டத்தில் இல.கணேசன் பேச்சு.

இல.கணேசன்
இல.கணேசன்

குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக பி.ஜே.பி சார்பில் முக்கிய நகரங்களில் இன்று சட்ட விளக்கக் கூட்டங்கள் நடந்தன. மதுரை கூட்டத்தில், மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார்.

இல.கணேசன்
இல.கணேசன்

அவர் பேசும்போது, ''பாரத நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என்றால் சில நிபந்தனைகள் உள்ளன. பல ஆண்டுகளாகச் சரிசெய்யப்படாமல் இருந்த இதன் விதிகளைத் திருத்தித்தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது, நரேந்திர மோடி எடுத்த நல்ல முடிவு.

இஸ்லாமியர்கள் கேட்டுக்கொண்டதால், பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சில இஸ்லாமியர்கள் விருப்பத்தின் பேரில் சென்றார்கள். ஆனால், பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால் அச்சத்தில் ஓடி வந்தனர். இவ்வளவு பிரச்னைகளுக்குப் பின்னர், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கும் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்ற கருத்தை அப்போதைய பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டபோது பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. மோடி, இப்போது நியாயமான செயலைச் செய்துள்ளார்.

இல.கணேசன்
இல.கணேசன்

இலங்கையிலிருந்து அடித்துவிரட்டப்பட்ட தமிழர்களுக்குத்தான் குடியுரிமை தர வேண்டும். ஆனால், அடித்து விரட்டிய சிங்களர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்பது போல் இங்கு சிலர் பேசுகின்றனர். இலங்கையிலுள்ள தமிழீழத் தலைவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். தங்களது இறப்பிற்குள் இலங்கை செல்ல வேண்டும் என்றுதான் இலங்கைத் தமிழர்கள் நினைக்கின்றனர்.

கமல்ஹாசன், தற்போதாவது இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் எனக் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இஸ்லாமியர்கள் எனக் குறிப்பிடவில்லை இஸ்லாமியர்களுக்கு ஆபத்து எனக் கூறி எதிர்க்கட்சிகள்தான் மக்களைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்கின்றனர்.

இல.கணேசன்
இல.கணேசன்

பாதிக்கப்பட்டவர்களுக்காகத்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டைவிட்டு யாரையும் வெளியேற்றுவது இந்த சட்டத்தின் நோக்கமில்லை. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். அப்படி இல்லாமல் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலுக்கு ஆளாகிவிடக்கூடாது. போராடுகின்ற எதிர்க்கட்சியினரை என்ன செய்ய வேண்டும் என்பது அரசுக்குத் தெரியும்'' என்றார்.